;
Athirady Tamil News

காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி கரை சேராது- பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!!

0

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தலைவர்களின் வாழ்த்துரைக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-

ஸ்டாலின் என்ற பெயருக்குள் கோடிக்கணக்கான உயிர்கள், உடன்பிறப்புகள் அடங்கி இருக்கிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் வந்தவன் நான். வீட்டுக்கு விளக்காக இருப்பேன், நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன். இது எனது பிறந்தநாள் விழா மேடை மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கான மிகப்பெரிய மேடையின் தொடக்கமாகும். ஒரு பொதுவான மேடையை உருவாக்கி, சிறந்த பிறந்தநாள் பரிசை வழங்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். வரும் பாராளுமன்றத் தேர்தல், யார் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதற்கான தேர்தல்.

2024 தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும். காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி என்பதை நிராகரிக்கவேண்டும், அது கரை சேராது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் தேர்தல் கணக்குகளை புரிந்துகொண்டு ஒன்றிணைய வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறவேண்டும். இந்த வெற்றிக்காக தொண்டர்கள் அனைவரும் இப்போதிருந்தே உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.