;
Athirady Tamil News

விவேக் ராமசாமி: அமெரிக்க அதிபர் பதவிக்கு ட்ரம்புடன் மோதும்கோடீஸ்வர இந்தியர்!!

0

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்று நபர்களில் இரண்டு பேர் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள்.

இதில், நிக்கி ஹேலி ஓரளவு அனைவருக்கும் பரிச்சயமான நபர். ஆனால், விவேக் ராமசாமியோ பெரிய அளவில் அறியப்படாதவர்.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சவிதா படேல், விவேக் ராமசாமியின் வெற்றி வாய்ப்பு, அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை இந்த கட்டுரையில் மதிப்பிடுகிறார்.

தொழிலதிபரும், Woke,Inc என்ற புத்தகத்தை எழுதியவருமான விவேக் ராமசாமி, பிப்ரவரி 21ஆம் தேதி ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பம் குறித்து பேசியிருந்தார். புதிய அமெரிக்க கனவை உருவாக்க கலாச்சார இயக்கம் ஒன்றை உருவாக்க அவர் விரும்புகிறார்.

“மக்களை பிணைப்பதைவிட பெரியது எதுவும் இல்லையென்றால், பன்முகத்தன்மை அற்றமற்றதாகிவிடும்” என்றும் அவர் கூறுகிறார்.

37 வயதாகும் விவேக் ராமசாமி, ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் இந்தியாவில் உள்ள கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். ஹார்வார்ட், யேல் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற விவேக், பயோடெக் தொழிலதிபராக முதலில் பணம் சம்பாதிக்க தொடங்கினார். பின்னர், சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றை அவர் தொடங்கினார்.

இனவெறி, காலநிலை குறித்த தனது பேச்சுகளை எப்போதும் நியாயப்படுத்தும் அவர், அவற்றை கார்ப்பரேட் உலகின் “விழிப்புவாதம்” என்று அழைக்கிறார். இனவெறி, காலநிலை ஆகியவை வணிகங்களையும் நாட்டையும் பாதிக்கிறது என்றும் கூறுகிறார். ஒரு நிறுவனத்தின் சமூக, சுற்றுச்சூழல் தாக்கத்தை அளவிடப் பயன்படும் ESG(சுற்றுச்சூழல், சமூக மற்றும் பெருநிறுவன ஆளுகை) முயற்சிகளை அவர் எதிர்க்கிறார்.

மேலும், உயர்கல்வியில் உறுதியான நடவடிக்கைகளை கைவிட விரும்பும் அவர், அமெரிக்க பொருளாதாரம் சீனாவை சார்ந்து இருப்பதையும் குறைக்க விரும்புகிறார்.

2022 ஆம் ஆண்டு, தேர்தலில் நியூ ஹாம்ப்ஷயரில் இருந்து அமெரிக்க செனட்டிற்கு போட்டியிட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த விக்ரம் மன்ஷாரமணி போன்ற சிலருடன் விவேக் ராமசாமியின் கருத்து ஒத்துப்போகிறது. விவேக் ராமசாமி குறித்து மன்ஷாரமணி பேசுகையில், அவர் “மிகவும் ஈர்க்கக்கூடியவர், தெளிவான மற்றும் சிந்தனைமிக்கவர்” என்று விவரிக்கிறார், மேலும் “அமெரிக்காவைப் பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றிணைக்க” தங்கள் இருவரின் கருத்துக்கள் பயன்படுவதாக அவர் கூறுகிறார்.

“அடையாள அரசியல் அமெரிக்காவில் வேரூன்றியிருக்கிறது, அது ஒன்றுபடுத்தும் போக்கைக் காட்டிலும் பிளவுபடுத்தும் போக்குடன் வந்துள்ளது. நம்மிடம் பொதுவாக உள்ளதை நாம் உருவாக்க வேண்டும்,” என்று கூறிய விவேக், சமீபத்தில் நியூ ஹாம்ப்ஷயரில் அவரது குடும்பத்தினர் நிக்கி ஹேலிக்கு விருந்தளித்ததையும் குறிப்பிடுகிறார்.

அதேநேரத்தில், அரசியலில் எதிர் தரப்பில் உள்ள இந்திய அமெரிக்கர்களோ விவேக் ராமசாமியின் அரசியலோடு உடன்படவில்லை என்றும் அவரது பிரசாரத்தில் குறையுள்ளதாகவும் கூறுகின்றனர்.

AAPI (ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள்) விக்டரி ஃபண்ட், நிறுவன தலைவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான சேகர் நரசிம்மன், நிறைய ஆசிய-அமெரிக்கர்கள் அரசியலில் முக்கியத்துவம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியடையும் அதே வேளையில், விவேக் ராமசாமியின் கருத்துக்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார்.

“அவர் ஒரு தொழிலதிபர், தெளிவான திட்டம் வைத்துள்ளார். ஆனால், அவருடைய வாக்குறுதிகள் என்ன?” என்று கேள்வி எழுப்பும் சேகர் நரசிம்மன், “முதியோர்களுக்கான மருத்துவ வசதி குறித்து அவர் கவலைப்படுகிறாரா? உள்கட்டமைப்புக்கு செலவிடுவது குறித்த அவரது திட்டங்கள் என்ன? அவருக்கு நிலையான பதவிகள் இல்லை. தனது கொள்கைகளையும் அவர் வெளிப்படுத்தவில்லை.” என்று கூறுகிறார்.

விவேக் ராமசாமியின் பிரசாரங்களை யதார்த்தமற்றது, நடைமுறைக்கு மாறானது என்று கூறும் அவர், “தன்னிடம் கூறுவதற்கு ஏதோ இருக்கிறது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் தனது கருத்துகள் கேட்கப்படும் என்று விவேக் ராமசாமி நம்புகிறார்” என்றும் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக குடியரசு கட்சியினரை ஆதரித்து வரும் சமூக உறுப்பினர்கள் பலரும், அதிபர் தேர்தலில் போட்டிடுவதாக அறிவிப்பதற்கு முன்புவரை விவேக் ராமசாமி குறித்து தாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்று கூறுகின்றனர்.

“அவரை நான் பார்த்ததே இல்லை. அவரிடம் பணம் இருப்பதாகவும் சிறப்பாக பேசுவார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. ஆனாலும், அவர் வேட்பாளர்களில் ஒருவராகவே இருப்பார். அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை” என்று கூறுகிறார் குடியரசு கட்சியின் ஆதரவாளரான மருத்துவர் சம்பத் சிவாங்கி. மற்றவர்களும் இதனை ஏற்றுக்கொள்கின்றனர்.

“தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அவர் கூறாமல் இருந்திருந்தால் அவர் குறித்து யாரும் பேசியிருக்க மாட்டார்கள் ” என ஹோட்டல் அதிபர் டேனி கெய்க்வாட் கூறுகிறார். ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷிலிருந்து குடியரசுக் கட்சியின் அனைத்து அதிபர் வேட்பாளர்களுக்கும் இவர் நிதி திரட்டியுள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் விவேக் ராமசாமியின் தைரியத்தை தான் பாராட்டுவதாக கூறும் டேனி கெய்க்வாட், இந்திய- அமெரிக்கர்களுக்கான ஒரு உத்தியை வைத்திருப்பது அவருக்கு மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் புளோரிடாவின் தற்போதைய ஆளுநர் ரான் டிசாண்டிஸ்( தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் இவர் முறையாக அறிவிக்கவில்லை)ஆகியோரை சுட்டிக்காட்டி, புளோரிடாவில் மட்டும் இரண்டு வலிமையான வேட்பாளர்கள் இருக்கக்கூடும் என்று கூறினார்.

அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதில் டொனால்ட் ட்ரம்ப், ரான் டிசாண்டிஸ், நிக்கி ஹேலி ஆகியோர் இடையே மும்முனை போட்டி இருக்கும் என்பது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இந்திய- அமெரிக்கர்களின் கணிப்பாகும். மேலும் முன்னாள் அதிபர் ட்ரம்பின் சட்டப் போராட்டங்களில் இன்னும் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், முன்கூட்டியே கூட்டணிகளை உருவாக்குவதற்குப் பதிலாக காத்திருக்க விரும்புகிறார்கள்.

ஹேலியின் பிரசார உத்தியை தான் விரும்புவதாக கூறும் சிவாங்கி, ஒருவேளை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் விலகினால், ஹேலியை தான் ஆதரிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

“ட்ரம்ப் 40 சதவீத மதிப்பீட்டை பெற்றுள்ளார். ஹேலியோ ஒற்றை இலக்கத்தில் மதிப்பீட்டை பெற்றுள்ளார். எனினும் அவர் எங்கள் வேட்பாளர். அவர் இந்திய- அமெரிக்கராக இருப்பதுதான் அவருடன் நாங்கள் நெருக்கமாக இருப்பதற்கு காரணம்” என அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று தேர்தல்களிலும் தங்களின் அரசியல் பங்கேற்பு அதிகரித்திருப்பது தொடர்பாக, அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்திய- அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர்.

“ஒரு அழகான விஷயம் நடந்து வருகிறது. இந்திய-அமெரிக்கர்கள் முன்னிலை பெறுகின்றனர்,” என்று கெய்க்வாட் கூறுகிறார், சமீபத்திய முயற்சியானது உள்ளூர் அளவில் கூட தேர்தலில் போட்டியிட இந்திய-அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

அரசியலில் எதிரெதிர் துருவங்களில் உள்ளவர்களும் இதனை ஆமோதிக்கின்றனர்.

“ராமசாமி போன்ற பெயர் கொண்ட அமெரிக்கர்கள் போட்டியிடுவதை எங்கள் குழந்தைகள் பார்த்தால், ஒரு கண்ணாவோ, கிருஷ்ணமூர்த்தியோ வெற்றி பெற முடியும்” என்று நரசிம்மன் கூறுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.