;
Athirady Tamil News

லஞ்ச வழக்கில் தொடர்பு: பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை கைது செய்யக்கோரி போராட்டம்- சித்தராமையா கைது!!

0

கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த் மாடால் (வயது 45) இவர் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைமை கணக்காளராக பதவி வகித்து வருகிறார். இவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது அங்கிருந்து கட்டுக்கட்டாக 6 கோடியே 10 லட்சம் ரூபாய் சிக்கியது. ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல். ஏ மகன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மகன் லஞ்சம் வாங்கிய வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ மாடால் விருபாக்ஷப் பாவையும் கைது செய்யக் கோரி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்த திரண்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் சித்தராமையா காங்கிரஸ் தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்கள் எம்.எல்.ஏ வை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். உடனே போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் சித்தராமையா அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினார். உடனே போலீசார் சித்தராமையா மற்றும் காங்கிரசாரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் போலீஸ் வாகனத்தில் அவர்களை அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.