;
Athirady Tamil News

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு- தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் எழுதினார்கள்!!

0

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி. எம்.எஸ். மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 42,500-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. 2023-24-ம் கல்வி ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கியது. 271 நகரங்களில் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் நடந்தது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்.

முடித்த 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் மட்டும் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் இன்று தேர்வை எழுதினார்கள். காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை இணைய வழியில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்வு எழுதுவதற்காக காலை 7 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்து விட்டனர். தேர்வு எழுத வந்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதை கடைப்பிடித்து அனைவரும் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள் வருகிற 31-ந் தேதி வெளியிடப்படுகிறது. இந்தியா முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

இந்த இடங்கள், நிகர் நிலை பல்கலைக் கழகங்களின் இடங்கள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம் www.mcc.nic.in என்ற இணைய தளத்தில் கலந்தாய்வை நடத்துகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தி வருகிறது.

தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி.எம்.எஸ். படிப்புகளுக்கு உள்ள 2100 இடங்களில் 1050 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு மீதமுள்ள 1050 இடங்களில் 50 சதவீத இடங்கள் கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.