;
Athirady Tamil News

ஸ்பெயின் நட்சத்திர ஓட்டலில் ரூ.13 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிய மெக்சிகோ அழகிக்கு சிறை!!

0

ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கேசர்ஸ் நகரில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் 19-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்புடைய ‘ஒயின்’ மதுபான பாட்டில் உள்பட பல பழமையான ‘ஒயின்’ மதுபான பாட்டில்கள் ரகசிய அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் மெக்சிகோ நாட்டின் முன்னாள் அழகியான பிரிசிலா லாரா குவேரா என்பவர் தனது காதலர் கான்ஸ்டன்டின் கேப்ரியல் டுமித்ருவுடன் சேர்ந்து ஸ்பெயின் ஓட்டலில் இருந்து, பழமையான ‘ஒயின்’ மதுபான பாட்டில்களை திருட திட்டம் தீட்டினார். இதற்காக தனது காதலருடன் 3 முறை அந்த ஓட்டலுக்கு சென்று, திருட்டுக்கு ஒத்திகை பார்த்தார்.

இறுதியாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த ஓட்டலுக்கு சென்ற பிரிசிலா மற்றும் டுமித்ரு அங்கு அறை எடுத்து தங்கினர். பின்னர் நள்ளிரவில் ஓட்டலின் வரவேற்பு அறைக்கு சென்ற பிரிசிலா, அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் தனக்கு உணவு தயார் செய்து தரும்படி வற்புறுத்தினார். முதலில் மறுத்த அந்த ஊழியர் பின்னர் உணவை தயார் செய்ய சமயலறைக்கு சென்றார். அந்த சமயத்தில் டுமித்ரு வரவேற்பு அறையில் இருந்து, மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த ரகசிய அறையின் சாவியை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார்.

ஆனால் அங்கு சென்ற பின்தான் தவறான சாவியை எடுத்து வந்தது தெரிய வந்தது. மீண்டும் வரவேற்பு அறைக்கு சென்ற ஊழியர் உணவுடன் அங்கு வந்தார். பின்னர் டுமித்ரு சைகை காட்ட அதை புரிந்து கொண்ட பிரிசிலா ஓட்டல் ஊழியரிடம் கனிவாக பேசி தனக்கு மேலும் உணவு வேண்டுமென கூறி அவரை சமையலறைக்கு அனுப்பினார். பின்னர் டுமித்ரு சரியான சாவியை எடுத்துக்கொண்டு ரகசிய அறைக்கு சென்றார். அங்கு 19-ம் நூற்றாண்டின் மதுபாட்டில் உள்பட ரூ.13 கோடி மதிப்புடைய 45 மதுபாட்டில்களை பெரிய பையில் போட்டு தனது அறைக்கு எடுத்து சென்றார். பின்னர் மறுநாள் காலை எதுவும் நடக்காததுபோல் இருவரும் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு சென்றனர்.

இதனிடையே வழக்கம் போல் மதுபாட்டில்களை சரிபார்ப்பதற்காக ஊழியர்கள் ரகசிய அறைக்கு சென்றபோது மதுபாட்டில்கள் திருடுபோனது தெரியவந்தது. ஓட்டலின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பிரிசிலா மற்றும் டுமித்ரு திருட்டு அம்பலமானது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு வங்கி கொள்ளைக்கு இணையாக நேர்த்தியாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த திருட்டு சம்பவம் அப்போது சர்வதேச பத்திரிகைகளில் தலைப்பு செய்தியானது. இதையடுத்து, நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரிசிலா மற்றும் டுமித்ருவை சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஸ்பெயின் தேடியது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரேஷியாவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்பட்டு, வழக்கு விசாரணையை எதிர்கொண்டனர். இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை கேசர்ஸ் நகர கோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்தது. விசாரணையின் முடிவில் பிரிசிலாவுக்கு 4 ஆண்டுகளும், டுமித்ருவுக்கு 4½ ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவர்கள் இருவரும் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு ரூ.6½ கோடி இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.