;
Athirady Tamil News

சீனப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயங்குவது ஏன்?

0

30 வயதான, திருமணமான குளோரியா, “என்னால் குழந்தைகளை வளர்க்கும் செலவை தாங்கமுடியாது” என்கிறார்.

தான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் சீனாவில் தான் வசிக்கும் இடத்தில் தற்போதைய செலவுகளுடன் கூடுதலாக 2400 டாலர்களை குழந்தைக்காக செலவிட வேண்டியிருக்கும் என்று குளோரியா கூறுகிறார்.

“தினசரி தேவைகளுக்கு 3000 யுவான் (436 டாலர்), மழலையர் பள்ளிக் கல்விக்காக 2000 யுவான் (291 டாலர்கள்), பகுதிநேர குழந்தைப் பராமரிப்புக்காக 1,000 யுவான் (145 டாலர்கள்), பள்ளிக் கல்விக்கு குறைந்தபட்சம் 10,000 யுவான் (1456) டாலர்) செலவழிக்க வேண்டும்,”என்கிறார் அவர்.

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் பகுதி நேர ஆசிரியையாக குளோரியா பணிபுரிகிறார்.

அவர் வசிக்கும் பகுதியில் தனியார் துறையில் பணிபுரிபவர்களின் சராசரி வருமானம் மாதம் 6,000 யுவான் (873 டாலர்) ஆகும்.

அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தை. குளோரியா பிறந்தபோது, சீனாவில் ‘ஒரு குழந்தை கொள்கை’ (ஒன் சைல்ட் பாலிசி) கடுமையாக அமலில் இருந்தது. தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதும், வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வதற்காக பணத்தைச் சேமிப்பதும்தான் தனது முன்னுரிமை என்கிறார் குளோரியா.

சீனாவில் மக்கள் தொகையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆறு தசாப்தங்களில் சீனாவில் மக்கள் தொகை குறைவது இதுவே முதல் முறை.

சீனாவில் பெரும்பாலான பெண்கள் ஒரு குழந்தையை பெற நினைக்கிறார்கள் அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளவே விரும்பவில்லை என்று புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சீனாவில் குழந்தை இல்லாத பெண்களின் எண்ணிக்கை 2015 இல் இருந்த 6 சதவிகிதத்திலிருந்து 2020 இல் 10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சீனாவின் மக்கள்தொகை மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பெண்களிடையே , குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை குறைந்து வருகிறது என்று இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2017 ஆம் ஆண்டில் சீனப் பெண்களின் குழந்தைகளைப் பெறுவதற்கான சராசரி விருப்ப எண்ணிக்கை 1.76 ஆக இருந்தது, இது 2021 இல் 1.64 ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளில் கூட, கருவுறுதல் விகிதம் 2 க்கும் குறைவாக உள்ளது. அங்குள்ள பெரும்பாலானோர் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புவதாகக்கூறுகின்றனர். ஆனால் சீனாவில் விஷயம் வேறு.

“இந்த விஷயத்தில் சீனா வேறுபட்டுள்ளது. உண்மையான கருவுறுதல் விகிதம் இங்கு குறைவாக உள்ளது. அதனுடன் கூடவே இனப்பெருக்கம் செய்யும் விருப்பமும் இல்லை,” என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸின் சர்வதேச மற்றும் சமூகக் கொள்கையின் உதவிப் பேராசிரியர் டாக்டர். ஷுவாங் சென் கூறுகிறார்.

இந்த ஆண்டின் மிக முக்கியமான அரசியல் கூட்டத்தொடர் சீனாவில் மார்ச் 4-ம் தேதி தொடங்கியது. கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க அரசியல் ஆலோசகர்கள் பல திட்டங்களை முன்வைத்துள்ளனர். கன்னிப் பெண்களின் கருமுட்டையை உறைய வைப்பதை ஊக்குவித்தல், மழலையர் பள்ளி முதல் கல்லூரி வரை இலவச புத்தகங்கள் வழங்குதல் மற்றும் கல்விக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்டு பிறக்கும் குழந்தைகளுக்கு சம உரிமை வழங்குவது மற்றொரு யோசனை. சீனாவில் திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்டு பிறக்கும் குழந்தைகள் குடும்பப் பதிவு (ஹுகோ) பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள இது அவசியம். இந்த பதிவு இல்லாத பட்சத்தில், அதிக நிர்வாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

சீனாவில் கருக்கலைப்பு தடுக்கப்பட்டு, கருவுறுதல் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன
சமூகப் போட்டித்தன்மை

சீனாவில் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததற்கு முக்கிய காரணம் குழந்தை வளர்ப்புச் செலவு அதிகமாக இருப்பதுதான்.

சீனாவில் ஒரு குழந்தை பிறந்தவுடன், அது மற்றவர்களுடன் போட்டியிடத் தொடங்குகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்கிறார்கள், இதற்காக அவர்கள் நல்ல பள்ளிகளுக்கு அருகில் வீடுகளை வாங்க முயற்சிக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பல்வேறு கலாச்சார மற்றும் பிற நடவடிக்கைகளில் சேர்க்கிறார்கள்.

“இவ்வளவு கடுமையான போட்டி இருக்கும் சூழலில் என் குழந்தைகளை வளர்க்க நான் விரும்பவில்லை.”என்று 22 வயதான கல்லூரி மாணவியான மியா கூறுகிறார்.

மியா வடக்கு சீனாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்தார். மியாவின் முழுக் கல்வியும் தேர்வுகளை மையமாகக் கொண்டது. மியா சீனாவின் புகழ்பெற்ற தேசிய கல்லூரி தேர்வை எழுதினார். Gaokao எனப்படும் இந்தத் தேர்வு, ஒரு மாணவர் பெறும் உயர்கல்வியின் அளவைத் தீர்மானிக்கிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மியா, பெய்ஜிங்கில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற முடிந்தது.

ஆனால் பெரும்பாலான நேரங்களில் தான் மன அழுத்தத்தில் இருப்பதாக மியா கூறுகிறார்.

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுடன் போட்டி போட இன்றைய காலகட்ட பட்டதாரிகளும் வாய்ப்பு பெற வேண்டும் என்கிறார் அவர்.

“இந்த வகையான கல்விக்கான கூடுதல் செலவை ஈடுகட்ட பணம் தேவை,”என்று மியா கூறுகிறார்.

எதிர்காலத்தில் தன் பிள்ளைகளுக்கு இவ்வளவு உயர்கல்வி கொடுக்க, தன்னால் போதுமான பணம் சம்பாதிக்க முடியாது என்று மியா கருதுகிறார்.

“ஒரு குழந்தை வளர இதுபோன்ற வசதிகளை என்னால் கொடுக்க முடியாவிட்டால், நான் ஏன் இந்த உலகத்திற்கு ஒரு புதிய உயிரை கொண்டு வர வேண்டும்?”என்று அவர் வினவுகிறார்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது தங்கள் தொழில் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல பெண்கள் கவலைப்படுகிறார்கள்.
வாழ்க்கை மற்றும் வேலை சமநிலை

தங்கள் தொழில் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்பதால் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தாங்கள் விரும்பவில்லை என்று பிபிசியிடம் உரையாடிய சீனப் பெண்களும் கூறினார்கள்.

வேலை நேர்காணலின் போது, அடுத்த சில ஆண்டுகளில் குழந்தைகளைப் பெறத் திட்டமிடுகிறீர்களா என்று தங்களிடம் கேட்கப்பட்டதாக அந்தப் பெண்கள் தெரிவித்தனர்.

‘ஆமாம் நாங்கள் யோசிக்கிறோம்’ என்று சொல்லியிருந்தால் தங்களின் வேலை வாய்ப்பு குறைந்திருக்கும் என்று இந்தப் பெண்கள் சொன்னார்கள். குழந்தை பிறக்கும் பட்சத்தில், பதவி உயர்வுக்கான வாய்ப்பும் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“உயர்கல்வி பெற்ற சீனப் பெண்கள் குழந்தைகளைப் பெற தாங்கள் தயாரா என்று சிந்திக்கும் போது, அவர்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்,”என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர் யுன் சோவ் குறிப்பிட்டார்.

“வேலை என்பது அவர்களுக்கு சுய-உணர்ந்தறிதல் போன்றது. சீனாவில் வேலைகளில் பாலின பாகுபாடு உள்ளது. குழந்தைகள் மற்றும் தொழில் என்பதில் ஒன்றைத்தேர்ந்தெடுக்க பெண்கள் சிரமப்படுகிறார்கள்,” என்று பேராசிரியர் யுன் கூறுகிறார்.

சீனாவில் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவு செய்ய விரும்புகிறார்கள். மியாவும் அவ்வாறே செய்தார். தான் ஏன் குழந்தை பெற விரும்பவில்லை என்பதை விளக்கி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதற்கு நூற்றுக்கணக்கான எதிர்மறை கருத்துக்கள் வந்ததால் மியா மிகவும் ஆச்சரியப்பட்டார்.

அவர் சுயநலவாதி என்று பலர் குற்றம் சாட்டினர். அவருக்கு 20 வயதே ஆவதால் அதிக புரிதல் இல்லை என்றும் பலர் கூறினர்.

“நீங்கள் சொல்லியிருப்பதை புரிந்துகொள்ள உங்களுக்கு பக்குவம் வரவில்லை. நாற்பது வயதில் நீங்கள் அப்படித்தான் நினைக்கிறீர்களா என்று பாருங்கள்,” என்று ஒரு பயனர் குறிப்பிட்டார்.

“நான் உங்களிடம் ஆயிரம் டாலர் பந்தயம் கட்டுகிறேன். உங்கள் வார்த்தைகளுக்கு நீங்கள் வருத்தப்படுவீர்கள்.”என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார்.

அவர் அந்நிய சக்திகளால் ஊக்குவிக்கப்படுவதாகவும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று மக்களைத் தூண்டுவதாகவும் சிலர் கூறினர்.

2020 மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பிறகு சீன அரசு, தனது மூன்று குழந்தைகள் கொள்கையை 2021 மே மாதம் வெளியிட்டது. அந்த ஆண்டு சீனாவில் பெண்கள் 1 கோடியே 20 லட்சம் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது தெரிய வந்தது. இது 1961-க்குப் பிறகு மிகக் குறைந்த பிறப்பு விகிதமாகும்.

சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசு அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு மக்களை ஊக்குவிக்க பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

ஆனால் சீனாவின் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால், குழந்தை பெற விரும்பாத பெண்கள் நாட்டை பலவீனப்படுத்துவதாக அந்நாட்டில் உள்ள சிலர் கருதுகின்றனர்.

“இது எனது தனிப்பட்ட விருப்பம். குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தை நான் ஊக்குவிக்கவில்லை. குழந்தைகளைப் பெற விரும்புவோரை நான் மதிக்கிறேன்,” என்று மியா கூறினார்.

யுவான் ஷேப்பிங்கின் குடும்பம் அவர் படிப்பை விட்டுவிட்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது
‘நான் கடுமையாக போராடினேன்’

குழந்தைகளைப் பற்றிய குடும்பத்தின் எதிர்பார்ப்பு வேறுவிதமாக உள்ளது. அதை எதிர்த்துப்போராடுவது பல பெண்களுக்கு மிகவும் கடினமாகிவிட்டது.

“நான் மிகவும் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டேன்,” என்று 34 வயதான யுவான் ஷேப்பிங் கூறுகிறார்,

யுவான் கிராமப்புற சீனாவில் வளர்ந்தார். அங்கு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதும் வம்சத்தை வளர்ப்பதும் ஒரு பெண்ணின் முதன்மைப் பொறுப்பாக கருதப்படுகிறது. குழந்தை வேண்டாம் என்று சொல்வது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது.

உயர்நிலைப் பள்ளியில் சிறந்த முதல் மூன்று மாணவர்களில் ஒருவராக இருந்த போதிலும்கூட யுவானும் அவரது மூத்த சகோதரியும் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை.

தம்பியின் மேல் படிப்புக்கான செலவுகளை மட்டுமே அவரது குடும்பத்தால் திரட்ட முடிந்தது.

“ஒரு பெண்ணை மேலே படிக்க வைப்பதில் என்ன பயன். இன்று இல்லையென்றால் நாளை நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்கள். நீங்களும் குழந்தைகளைப் பெற்று குடும்பத்தை நடத்த வேண்டும் என்று என் பெற்றோர் எப்போதும் சொல்வார்கள்,” என்று யுவான் கூறுகிறார்.

அவரது உறவினர் ஒருவர் கிட்டத்தட்ட அவருடைய வயதில் விவாகரத்து பெற்று இரண்டு குழந்தைகளை தனியாக வளர்க்க நேர்ந்தபோது குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற யுவானின் எண்ணம் மேலும் வலுவடைந்தது.

“திருமணத்திலேயே எனக்கு நம்பிக்கை இல்லை,” என்று அவர் கூறுகிறார்.

யுவான் இப்போது தனது கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு நகரத்தில் சுதந்திரமான வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

“என் ஓய்வு நேரத்தில், நான் படிக்கிறேன், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன். என் சுதந்திரத்தை அனுபவிக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.