;
Athirady Tamil News

எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு !! (படங்கள்)

0

நான்கு வருடங்கள் காட்டு பகுதிக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டி-ப்பளை பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலை காட்டுப் பகுதியிலேயே இவர் கடந்த நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, மனநலம் குன்றிய நிலையிலேயே அவர் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.


குறித்த காட்டுப் பகுதி வழியாக செல்வோர் இவரை பாலா என்ற பெயரை கொண்டே அழைத்துள்ளனர்.

தாந்தாமலை பகுதியின் றெட்பாணா எனும் கிராமத்திற்கு அண்மித்த பகுதியிலுள்ள காட்டில் கொட்டகை ஒன்றை அமைத்து இவர் இதுவரை காலம் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் கடந்த நான்கு வருடங்களாக காட்டில் பெரும்பாலும் பழங்களை உட்கொண்டே வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் காட்டு பகுதியை அண்மித்துள்ள பிரதேசத்தில் வாழும் மக்கள், ஏதாவது உணவு பொருட்களை இவருக்கு வழங்கி வந்துள்ளனர்.

இவ்வாறு வழங்கப்படும் உணவுப் பொருட்களை கொட்டகைக்கு கொண்டு சென்று, அவற்றை கொண்டு சுகாதாரமற்ற வகையில் உணவுகளை சமைத்து உட்கொண்டுள்ளதாக என்.நகுலேஸ் தெரிவிக்கின்றார்.

”சுகாதார சீர்கேடாக வாழ்ந்து வந்துள்ளார். கொட்டிலில் உணவு சமைத்தால், அந்த பாத்திரங்களை கழுவ மாட்டார். அடுத்த சமையலையும் அதிலேயே சமைத்துள்ளார். மீனை எடுத்து, அரிசியுடன் போட்டு, அப்படியே சமைத்துள்ளார்” என அவர் கூறுகின்றார்.

நான்கு வருட காலமாக குளிக்காமல், முடிவெட்டாமல், அதிக நித்திரையின்றி, சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியிலேயே இவர் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறிது காலம் சிலருடன் பழகி வந்த பாலா, பின்னரான காலத்தில் மக்களை கண்டால் காட்டுப் பகுதிக்குள் ஓடி ஒளிந்து விடுவதாக அவர் கூறுகின்றார். காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே, இவர் இந்த பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.இவ்வாறான நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தகவலறித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், குறித்த பகுதிக்கு சென்று, பாரிய சிரமத்திற்கு மத்தியில் மூன்று நாட்களின் பின்னர் இவருடன் உரையாடியுள்ளனர்.

முதலில் தம்மை கண்ட பாலா, ஓடி ஒளிந்து கொண்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் கூறினார்.

”இவர் தொடர்பான தகவல் எமக்கு கிடைத்தது. மூன்று நாட்கள் நின்றோம். முதல் நாள் போன போது, ஓடி மறைந்து விட்டார். பின்நேரம் வரை நின்றோம். “பாலா, வா” என்று கூப்பிட்டோம். “எங்களோட இருந்தனீர் தான் என்று சொல்ல, அவருக்கு புரிகின்றது. நீ எங்களோ முல்லைத்தீவுல இருந்தனீர்,” என்று தெரிந்த ஒருவரை போல கதைத்தோம்.

“மெதுவாக அருகே நெருங்கியவுடன், நீங்கள் வர வேண்டாம்,” என சொல்லி விட்டார்.

காசு ஏதாவது தந்து விட்டு, பிஸ்கட்டை சாப்பிட்டு போகுமாறு சொன்னார். அன்பாக தான் சொன்னார். பிறகு வா பாலா என்று சொல்லி அவருடன் நெருங்கி கதைத்தோம்.

முடியெல்லாம் வெட்ட வேண்டும். நீயொரு முன்னாள் போராளி, என்ன பிரச்னை, நாங்கள் உன் பிரச்னையை தீர்த்து வைக்கின்றோம் என்று கதைத்தோம். எனக்கு ஒன்றும் இல்லை, முடியெல்லாம் வெட்ட முடியாது என சொன்னார்.

ஒரு மாதிரி மூன்று நாட்களில் நாங்கள் கூப்பிட்டால் வரும் அளவிற்கு அவரை வளப்படுத்தி விட்டோம்;.” என நகுலேஸ் கூறினார்.

அதன் பின்னர், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து, அம்பியூலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு, முன்னாள் போராளியான பாலா ஏறாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமது கட்சியின் பணியாளர் ஒருவரின் கண்காணிப்பில், ஏறாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

முன்னாள் போராளியான பாலா தொடர்பில் ஏற்கனவே சில சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் தவறான செய்திகளை வெளியிட்டிருந்ததாக அவர் கூறுகின்றார்.

சில சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள், பாலா தொடர்பில் தவறான காணொளிகளை வெளியிட்டு, சர்வதேச சமூகத்திடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு சில சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களின் நடவடிக்கையானது, முன்னாள் போராளிகளையும், தமிழர் போராட்டத்தையும் அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் கூறினார்.

அத்துடன், பாலாவின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கு யாராவது ஒருவர் முன்வர வேண்டும் எனவும், அவரின் வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்ல நேரடியாக அவருக்கே உதவிகளை வழங்குமாறும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ் கேட்டுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.