;
Athirady Tamil News

நாகூர் கடற்கரையில் குழாய் உடைந்து மீண்டும் கச்சா எண்ணெய் வெளியேறியது !!

0

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்(சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கப்பல்களுக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்ல பனங்குடியில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டினச்சேரி கிராமத்தில் கடற்கரையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் கடந்த 2-ந்தேதி இரவு உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் அப்பகுதி மீனவர்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து எண்ணெய் குழாய்களை முழுமையாக அகற்றக்கோரி மீனவர்கள் 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.பி.சி.எல். அதிகாரிகள் 3 நாட்களாக போராடி கடந்த 5-ந்தேதி குழாய் உடைப்பை சீரமைத்தனர். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் கடற்கரை வழியாக எண்ணெய் உள்ளிட்ட எந்தவித எரிவாயுக்களையும் குழாய் மூலம் கொண்டு செல்லக்கூடாது என கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் சி.பி.சி.எல். நிறுவன அலுவலர்கள் நேற்று பட்டினச்சேரி கடற்கரைக்கு வந்து எண்ணெய் குழாய் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அலுவலர்கள், பம்பிங் செய்ததால் வானுயரத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதற்கிடையே முன்பு உடைப்பு ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் ராஜசேகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சி.பி.சி.எல். அதிகாரிகள் கூறுகையில், குழாயை சுத்தம் செய்யும் பணியின்போது தண்ணீர் மட்டுமே வெளியானது என்றும், கச்சா எண்ணெய் செலுத்தவில்லை என்றும் தெரிவித்தனர். நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் எண்ணெய் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.