;
Athirady Tamil News

துரோக செயல்களில் ஈடுபட வேண்டாம் !!

0

எதிர்பார்க்கப்படும் பொருளாதார அபிவிருத்தியின் பலன்களை அரசாங்கம் அடுத்த சில மாதங்களில் பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கும் என்றும் இந்த கடினமான நேரத்தில் நியாயமற்ற கோரிக்கைகளை கோருவதன் மூலம் துரோகச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களிடம் அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்த்தன வேண்டுகோள் விடுத்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் , செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களின் சில பிரிவினரால் தொடங்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தின் முக்கிய நோக்கம் கோரிக்கைகளை வென்றெடுப்பது அல்ல என்று தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கான திட்டத்தை நாசப்படுத்துவதே என்றார்.

மார்ச் 20ஆம் திகதியன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூடி அங்கீகாரம் வழங்க உள்ளதாகவும் அந்த செயல்முறையை நாசமாக்குவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்த அவர், பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியின் முதல் மற்றும் முதன்மையான பயனாளிகள் அரச ஊழியர்களே என்றும் சுட்டிக்காட்டினார்.

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்றும் சட்டத்தை மீறினால், சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களில் முதல் தவணையை வெளியிட்ட பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெய்க்கா, உலக வங்கி ஆகியவற்றிலிருந்து மேலும் நிதி உதவியை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் வெளிநாட்டு இருப்புக்களை கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது ரூபாயின் மதிப்பை மேலும் அதிகரிப்பதற்கும், உலக நிதி நிறுவனங்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் உதவும் என்றும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.