;
Athirady Tamil News

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் 1000 படுக்கைகளுடன் பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு !!

0

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். நடப்பு நிதியாண்டில் மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சி.எம்.டி.ஏ. மூலம் சென்னையில் அமைக்கப்படும். பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.25 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வித்துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 26 தொழில்நுட்ப கல்லூரிகள், 55 கலைக் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்காக ரூ.100 கோடியில் விடுதிகள் அமைக்கப்படும். வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படும். நடப்பு நிதியாண்டில் ஆதி திராவிடர் நலத் துறைக்கு ரூ.3513 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிரை வண்ணார் நல வாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ.10 கோடி அளிக்கப்படும். நகர்ப்புற ஊரக பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 15 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் செயல் படுத்தப்படும். 54 அரசு பல்தொழில் நுட்ப கல்லூரிகள் ரூ.2283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்.

சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும். 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயன் அடைவார்கள். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 11.82 லட்சம் நோயாளிகளுக்கு 993 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உள்ளன. கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும்.

1020 கோடி ரூபாய் செலவில் மதுரை, கோயம்புத்தூர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டு வரும் புதிய உயர் மருத்துவக் கட்டிடங்களும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். திருச்சிராப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் உயர் மருத்துவ சிகிச்சைத் தேவைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில், 110 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.