;
Athirady Tamil News

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை: வெடிமருந்து மூலப்பொருட்கள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது- வீடுகளில் விரிசல்!!

0

காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இருந்தது. இங்குள்ள குடோனில், தயாரான பட்டாசுகளை சேமித்து வைப்பது வழக்கம். இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து உள்ளனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப்பொருட்கள் வெடித்து சிதறின.

இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி (வயது 53), பள்ளூரை சேர்ந்த முருகன் (50), குருவிமலையை சேர்ந்த தேவி (34), காஞ்சிபுரத்தை சேர்ந்த சுதர்சன், குருவிமலை முருகன் கோவிலை சேர்ந்த சசிகலா (35), காஞ்சிபுரம் அருகே வளர்த்தோட்டத்தை சேர்ந்த கங்காதரன் (68), அவரது மனைவி விஜயா (38), காஞ்சிபுரத்தை சேர்ந்த கவுதம் (15), குருவிமலையை சேர்ந்த கோட்டீஸ்வரி (48) என மொத்தம் 9 பேர் பலியானார்கள். வெடிகள் வெடித்து சிதறியதில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. பலரது உடல்கள் சிதறி வீசப்பட்டு கிடந்தன. மேலும் வெடிவிபத்தில் உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் வெடிவிபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பட்டாசுகள் வெடித்து சிதறியபோது அதன் சத்தம் சுமார் 3 கி.மீட்டர் தூரத்துக்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

வெடிகள் வெடித்த அதிர்வில் குருவிமலை பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. வெடிவிபத்து அதிர்ச்சியில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை. இதற்கிடையே குருவிமலை, வளத்தோட்டம் பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிக அளவு பட்டாசு மூலப்பொருட்களை குடோனில் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது. தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்களை பயன்படுத்தியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக வேலூர் மண்டல தீயணைப்புத்துறை இயக்குனர் சரவணகுமார் கூறும்போது:- இந்த பட்டாசு ஆலைக்கு 2024-ம் ஆண்டு வரை உரிமம் உள்ளது. பட்டாசு குடோனில் அதிக வெப்பநிலை, மூலப்பொருட்கள் உராய்வால் ரசாயன மாற்றம் மற்றும் மருந்து பொருட்களை கையாளுதல் தவறு உள்ளிட்டவற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றார். பட்டாசு ஆலையில் அதிகமான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் பணியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் வெடிவிபத்து ஏற்பட்ட போது அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.