;
Athirady Tamil News

ஓய்வூதிய வயதை அதிகரிக்க எதிர்ப்பு- பிரான்சில் போராட்டம் நீடிப்பு!!

0

பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் வகையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து உள்ளன. நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த போராட்டத்துக்கு ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து அவர்கள் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது வன்முறைகளும் வெடித்தன. பாரீசில் நடந்த பேரணியின் போது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு பலகைகள் மற்றும் குப்பை குவியல்களுக்கு தீ வைத்தனர்.

சாலையோரம் இருந்த பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் கறுப்பு உடைகள் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகள், வங்கிகள், துரித உணவகங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் அதன் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஆனது. இதையடுத்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள். போலீசாருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 123 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். இதனால் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். மேலும் தடியடியும் நடத்தினார்கள். இதனால் போராட்டக் காரர்கள் சிதறி ஓடினார்கள்.

இது தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டங்களும் நடந்தன. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிவேக ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். பிரான்சில் இதுவரை இல்லாத அளவு நடந்த இந்த போராட்டம் அந்நாட்டு அதிபருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.