குற்றவாளிகளின் பல் உடைப்பு: உதவி போலீஸ்சூப்பிரண்டை கைது செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை தாக்கி இருக்கிறார் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங். இது கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்தவர்களை மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்தவர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார்.
உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளையும், மனிதநேயத்தையும் மதிக்காத காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது உடனடியாக வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.