;
Athirady Tamil News

“எல்லா குழந்தையும் ஒரே மாதிரி இருக்கே..” 600 பேருக்கு தந்தையான நபர்! கடுப்பான கோர்ட்! அதிரடி உத்தரவு!!

0

நெதர்லாந்து நாட்டில் ஒருவர் சுமார் 600 பேருக்குத் தந்தையாகியுள்ளார். இதை கேட்டு நீதிமன்றமே ஒரு நிமிடம் ஸ்டன் ஆகிவிட்டது. அவருக்கு எதிராக அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறை, துரித உணவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது குழந்தையின்மை பிரச்சினை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் பலரும் கர்ப்பம் தரிக்க மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழலே இருக்கிறது.

அதேபோல செயற்கை முறையில் கருவூட்டல் சிகிச்சையும் அதிகரித்து வருகிறது. இதுவே மருத்துவத் துறையில் தனியொரு பிஸ்னஸாக மாறிவிட்டது. அதிகரிக்கும் கருத்தரிப்பு மையங்களே இதற்குச் சாட்சியாகும்.

விந்தணு தானம்: தாராள பிரபு படத்தில் வருவதைப் போல விந்தணு தானம் தரும் முறையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே செயற்கை கருவூட்டலுக்கு உலகெங்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கிறது. இருப்பினும், சிலர் விதிகளை மதிக்காமல் இஷ்டத்திற்கு விந்தணுக்களை தானம் செய்து வருகின்றனர். இதில் பல ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படித்தான் நெதர்லாந்து நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கே இப்படித்தான் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜொனாதன் என்பவர் விந்தணு தானம் மூலம் 550க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார்.. இதனிடையே அவருக்கு விந்தணு தானம் செய்யத் தடை விதித்து நெதர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நபரின் விந்தணு மூலம் பெற்ற சில பெற்றோர் தொடர்ந்து வழக்கில் தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதற்காக அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

சட்டம் என்ன சொல்கிறது: நெதர்லாந்து சட்டப்படி எந்தவொரு கொடையாளியும் 12 குடும்பங்களுக்கு விந்தணுக்களை தானம் தரலாம். இதன் மூலம் அதிகபட்சம் 25 குழந்தைகளுக்குத் தந்தையாகலாம். ஆனால், அதன் பிறகு விந்தணுக்களை தானம் செய்யக் கூடாது என்ற விதி தெளிவாக இருக்கிறது. விதிமுறைகள் இப்படி இருந்தாலும் கூட, அங்கே யார் எத்தனை முறை தானம் செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் அமைப்பு எதுவும் தனியாக இல்லை. அதைப் பயன்படுத்தியே இந்த நபர் விதிகளை மீறியுள்ளார். 41 வயதான ஜொனாதன் என்ற நபர், 2017ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள கருவுறுதல் கிளினிக் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார். இதனால் அவருக்கு விந்தணு தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், அவர் நிறுத்தாமல், தனது விந்தணுக்களை வெளிநாட்டிலும் ஆன்லைனிலும் தொடர்ந்து தானம் செய்து வந்துள்ளார். இதைக் கண்காணிக்கும் அமைப்பு இல்லாததால் தொடர்ந்து விந்தணு தானத்தைத் தொடர்ந்துள்ளார். 600 குழந்தைகள்: 2007ஆம் ஆண்டு விந்தணு தானத்தைத் தொடங்கிய அவர், இதுவரை 550 முதல் 600 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார். இது மிகப் பெரிய விதிமீறல் ஆகும். ஏனென்றால், இப்படி அதிகப்படியான குழந்தைகளுக்கு விந்தணுக்களை தானம் செய்தால், பெரிய சிக்கல் வரும். அதாவது இந்த 600 பேருக்கு இடையே எவ்வித தொடர்பும் இப்போது இல்லை. இதனால் இவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது. இவர்கள் வளர்ந்த பிறகு யாராவது ஒருவருடன் காதலில் விழுந்தால், அது பல சிக்கலைத் தரும்.

இதன் காரணமாகவே பல நாடுகளும் விந்தணு தானத்திற்குக் கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. இது குறித்து நடந்த வழக்கில், கர்ப்பம் தரிக்க முடியாத தம்பதிகளுக்கு உதவ விரும்பியே இப்படிச் செய்ததாக அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருப்பினும், இதுவரை எத்தனை பேருக்கு விந்தணு நன்கொடை அளித்தேன் என்பது குறித்து வேண்டுமென்றே தவறான தகவலைக் கொடுத்ததை நீதிமன்றம் தனது விசாரணையில் கண்டறிந்தது. தடை: இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், “இவரது செயலால் இப்போது இத்தனை நூறு குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் உறவு வலையமைப்பில் வந்துள்ளனர். இது வரும் காலத்தில் அவர்களுக்குப் பல வித சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே அவர்களது நலன் கருதி, இதை மேலும் நீட்டிக்க அனுமதிக்க முடியாது. அவர் இனிமேல் ஒரு நபருக்குக் கூட விந்தணுக்களை தானம் செய்யக் கூடாது” என்று உத்தரவிட்டது. மேலும், ஜொனாதன் இதுவரை விந்தணுவை தானம் செய்த அனைத்து கிளினிக்குகள் குறித்த தகவல்களைக் கேட்ட நீதிமன்றம், இப்போது சேமிக்கப்பட்டுள்ள அவரது விந்தணுக்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த மீண்டும் விந்தணு தானம் செய்ய முயன்றால், அந்த நபருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.