;
Athirady Tamil News

வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கை!!

0

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு போகும்
கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து கையளிக்கப்பட்ட சரணடைந்த கூட்டிச்
செல்லப்பட்ட உறவுகளும், வெள்ளை வான்களிலும் ஆயுதம் முனைகளிலும் கடத்தப்பட்ட
உறவுகளும் சிங்கள அரசாலும் அதன் இராணுவ துணைக் குழுக்களாலும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி 14 வருடங்களாக உறவுகள் ஆகிய நாம் போராடிவருகின்றோம். அதில் எட்டு வருடங்கள் எமது அரசியல்வாதிகளை நம்பி இருந்த காலம்.

அக்காலத்தில் எமது சில தமிழ் அரசியல் தரப்பினரின் ஆதரவு பெற்ற, அவர்களால் நல்லாட்சி
என்று புகழப்பட்ட அரசு இருந்தது. அப்போது கூட எம் அரசியல்வாதிகளால் எமது உறவுகளை மீட்டுத் தரவும் நீதி பெற்றுத் தரவும் முடியாமல் போய்விட்டது. 2017.02.20 இல் எமது தொடர் போராட்டம் தொடங்கியது.

மைத்திரியுடன் நடைபெற்ற மூன்று சந்திப்புகளிலும் அவர் எம்மிடம்
தந்த வாக்குறுதியை மீறியதால் இலங்கை அரசிடம் நீதி பெற முடியாது என்று அறிவித்து
சர்வதேசத்தை நோக்கி மட்டும் போராட்டம் நடாத்தி வருகின்றோம்.
இலங்கை அரசு அனுசரணை வழங்கிய 30/1 தீர்மானத்திற்கு எவ்வித முன்னேற்றமும் இன்றி
காலத்தை இழுத்தடித்த போதும், இலங்கை அரசுக்கு மேலும் காலநீடிப்பு வழங்கும் படி எமது
தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேச நாடுகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். நாம்
காலநீடிப்புக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்று கேட்டிருந்தோம். அதையும் மீறி கால
நீடிப்புக்கு சார்பாக செயல்பட முடிவெடுத்த எமது அரசியல்வாதிகள் எமது துயரத்தையும்,
வலியையும், இழப்பையும் பொருட்படுத்தவே இல்லை.
மீண்டும் இப்போது சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக சிறிலங்கா அரசினால் ஆடப்படும்
பேச்சுவார்த்தை எனும் நாடகத்தில் பங்கேற்க இருக்கும் அரசியல்வாதிகள் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பாகவும் கதைக்கவுள்ளதாக தெரிவித்ததாக ஊடகங்கள்
வாயிலாக அறிந்து கொண்டோம்.

உள்ளூர் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்து சர்வதேச நீதி
ஒன்றே எமக்கு தீர்வை பெற்று தரும் என தெளிவான முடிவுடன் போராடும் எமது வலிகளை
மீண்டும் உங்களின் சுயலாப அரசியலுக்காக சிறிலங்கா அரசிடம் அடகு வைக்காதீர்கள். உங்கள்
நலனுக்காக எமது கண்ணீர்களுக்கு சிங்கள அரசிடம் நீங்கள் விலை பேசாதீர்கள்.
உண்மையிலேயே நீங்கள் இதய சுத்தியுடன் தமிழ் மக்களின் நலன் கருதியே பேச்சுவார்த்தைக்கு
செல்வதாக இருந்தால் முதலில்,

1. எமது உறவுகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு காரணமாகிய சிங்கள இராணுவத்தை எமது
தாயகமான வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறுவதற்கு சிறிலங்கா அரசை இணக்கச்
செய்யுங்கள்

2. எமது உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணையில் சிறிலங்கா அரசின் தலையீடு /
அச்சுறுத்தல்கள் இருக்காது என்ற எழுத்துமூல உறுதிப்பாட்டினை பெறுதல்.

3. எமது தாயகமான வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலை
நிறுத்துவதற்கான எழுத்துமூல உறுதிப்பாட்டினை பெறுதல்.

4. தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும்,
சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம்
தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமை வழங்கப்பட
வேண்டும். இதில்
சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட
நடைமுறைப்படுத்தப்பட்ட தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.