;
Athirady Tamil News

முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி: சித்தராமையா-டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனம் என்ன? !!

0

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் தான். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக எழுந்த ஊழல் முறைகேடு, 40 சதவீத கமிஷன் புகார்கள் ஒவ்வொன்றையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் மிக சிறப்பாகவே செயல்பட்டனர். பா.ஜனதா அரசை இக்கட்டான நிலையில் சிக்க வைக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் அந்த தலைவர்கள் நழுவ விடவில்லை. கடந்த ஓராண்டாகவே பா.ஜனதா அரசுக்கு எதிராக குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏதாவது ஒரு ஊழல் புகார் வெளிவந்தபடியே இருந்தது. இப்படி தொடர்ந்து பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை அதிகரித்து வந்தது. இவற்றை சரியான முறையில் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் அறுவடை செய்தனர் என்றே சொல்லலாம். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக சட்டசபையில் காலியான 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள தொகுதியில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையாவும் ராஜினாமா செய்தனர்.

அதில் தினேஷ் குண்டுராவின் ராஜினாமா ஏற்கப்பட்டது. ஆனால் சித்தராமையாவின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் நீடிக்கும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதன் பிறகு கர்நாடக காங்கிரசுக்கு யாரை கட்சி தலைவராக நியமிக்கலாம் என்ற விவாதம் எழுந்தது. அப்போது, டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவி வழங்குவதை சித்தராமையா எதிர்த்தார். தான் முதல்-மந்திரி ஆவதற்கு டி.கே.சிவக்குமார் தடையாக இருப்பார் என்று அவர் கருதினார். ஆனால் சித்தராமையாவின் எதிர்ப்பையும் மீறி கட்சி மேலிடம் டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவியை வழங்கியது. அதன் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்-மந்திரி ஆவார் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சி கூட்டங்களில் கூறினர். அதற்கு டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் முதல்-மந்திரி பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் இரு தரப்புக்கும் கட்டளையிட்டது. அதன் பிறகு முதல்-மந்திரி பதவி குறித்து பேசுவதை இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தவிர்த்து வந்தனர். கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற தொடங்கினர். கட்சி மேலிட தலைவர்கள், முதலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்யுங்கள், அதன் பிறகு முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று இரு தரப்புக்கும் உத்தரவிட்டனர். அதே போல் அவர்கள் 2 பேரும் ஒற்றுமையாகவும், பிறகு தனித்தனியாகவும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லியில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சித்தராமையா ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முதல்-மந்திரி பதவி குறித்து தனது மனதில் இருந்ததை வெளிப்படுத்திவிட்டார். அதாவது, முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கருத்து அடிப்படையில் தான் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் என்று கூறினார். ஏனெனில் எம்.எல்.ஏ.க்கள் தனக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் டி.கே.சிவக்குமாரோ, முதல்-மந்திரி பதவி யாருக்கு வழங்க வேண்டும் என்பதில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று கூறி வருகிறார். இந்த நிலையில் அக்கட்சி தலைவா்கள் நினைத்தபடி காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா ஏற்கனவே 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். ஆட்சியை திறம்பட நடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது. கட்சியை வலுப்படுத்தும் திறன் இருப்பது போல் ஆட்சியை சிறப்பாக நடத்தும் திறனும் டி.கே.சிவக்குமாருக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை கர்நாடகத்தில் குறிப்பாக தென் கர்நாடகத்தில் பலமாக இருக்கும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை பலவீனப்படுத்தி காங்கிரசை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டவர் டி.கே.சிவக்குமார். அதனால் தான் இந்த முறை ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கோட்டையை தகர்த்து அங்கு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களின் பலம், பலவீனம் என்ன என்பதை பார்ப்போம். குருபா சமூகத்தை சேர்ந்த சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்தார். அவர் குருபா சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ‘அஹிந்தா’ (தலித், ஓ.பி.சி., சிறுபான்மையினர்) தலைவராக பார்க்கப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ள அவருக்கு கர்நாடகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற பெயர் எடுத்துள்ள அவர் மீது எந்த விதமான ஊழல் வழக்குகளோ அல்லது சொத்து குவிப்பு வழக்குகளோ கிடையாது. அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட அவருக்கு ஆட்சி நிர்வாகத்திலும் அதே அளவுக்கு அனுபவம் உள்ளது. நகைச்சுவை, கேலி, கிண்டல் கலந்த சித்தராமையாவின் பேச்சு மக்களை சுண்டி இழுப்பதாக உள்ளது. சாதி, மதம், கட்சி ஆகியவற்றை தாண்டி பொதுக்கூட்டங்களில் அவரது பேச்சை கேட்பதற்கே பெருங்கூட்டம் கூடுவது வழக்கம். மாற்று கட்சியினரும் அவரது பேச்சை ரசித்து கேட்பது உண்டு. ஆனால் சித்தராமையா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அவ்வளவாக தீவிரமாக செயல்பட கூடியவர் இல்லை. கரடு முரடாக பேசும் அவர் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் மிக கடுமையாக எதிர்த்து பேசக்கூடியவர். சித்தராமையா ஏற்கனவே 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள அனுபவம் கொண்டவர். பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை வலுவாக எதிர்க்கும் திறன் கொண்டவர்.

அதே நேரத்தில் அவரது பலவீனம் என்னவெனில், நல்லாட்சி வழங்கினாலும் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தவறியது, காங்கிரசில் இன்னும் சில தலைவர்கள், சித்தராமையா வேறு கட்சியில் இருந்து வந்தவர் என்று சொல்வது, அவருக்கு தற்போது 75 வயது ஆவது போன்றவை அவருக்கு பலவீனமாக உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே.சிவக்குமார், 1985-ம் ஆண்டு தனது 25-வது வயதிலேயே முன்னாள் பிரதமர் தேவகவுடாவை எதிர்த்து சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். மாணவர் காங்கிரசில் நிர்வாகியாக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று அவர் மாநில காங்கிரஸ் தலைவர் என்ற நிலையை அடைந்துள்ளார். கட்சியை வலுப்படுத்துவதிலும், வியூகம் வகுப்பதிலும் சிறந்து விளங்கும் அவர், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக மெல்ல உருவாகி வருகிறார். தென் கர்நாடகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு வட கர்நாடகத்தில் அவ்வளவாக இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். காங்கிரசின் “டிரபல் சூட்டர்” என்று சொல்லப்படும் டி.கே.சிவக்குமார், கட்சி மேலிடம் கூறும் பணிகளை அப்படியே அச்சு பிசகாமல் செய்து முடிப்பவர். கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது குதிரை பேரத்திற்கு பயந்து அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது.

அந்த எம்.எல்.ஏ.க்களில் சிலரை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்தபோதும், அது முடியாமல் போனது. அந்த நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்ட பலரது மந்திரிசபையில் மந்திரியாக டி.கே.சிவக்குமார் பணியாற்றியுள்ளார். கட்சியை வலுப்படுத்தும் திறன் கொண்ட டி.கே.சிவக்குமாருக்கு மாநிலம் முழுவதும் சம அளவில் மக்கள் செல்வாக்கு இல்லை. ஒக்கலிகர் சமூகத்தின் பலமான தலைவராக கருதப்படும் அவர் பிற சமூகங்களுக்கான தலைவராக மற்றவர்கள் பார்ப்பது இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

டி.கே.சிவக்குமாா் கட்சிக்கு விசுவாசமிக்கவர், சோனியா காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக பழகக்கூடியவர், ஒக்கலிகர் சமூகம் அவரை ஆதரிப்பது, வயது போன்ற விஷயங்கள் பலமாக அமைந்துள்ளன. மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பதால் அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும். இதற்கு முன்பு எஸ்.எம்.கிருஷ்ணா, வீரேந்திர பட்டீல் போன்ற தலைவர்கள் மாநில தலைவர்களாக இருந்து முதல்-மந்திரி பதவியை அடைந்தவர்கள். கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ளது. ஆனால் சித்தராமையாவின் அனுபவம், மக்கள் செல்வாக்கு, அவருக்கு இருக்கும் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, வழக்குகள் போன்றவை டி.கே.சிவக்குமாருக்கு தடையாக உள்ளன.

அவரது பலவீனம் என்று சொன்னால், டெல்லியில் சிறையில் இருந்தது, பிற சமூகங்களின் ஆதரவு அவருக்கு அதிகமாக இல்லாதது போன்றவை ஆகும். மேலும் டி.கே.சிவக்குமார் மீது வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அமைப்புகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வரும் நாட்களில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா போல் அந்த வழக்குகளில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இவை டி.கே.சிவக்குமாருக்கு பலவீனமாக உள்ளது. எதுவாக இருந்தாலும், இருவருமே பலமான, உறுதியான தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.