;
Athirady Tamil News

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மனநல பிரச்சினைகளை சந்திக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல் !!

0

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே நேரம் நாளும், பொழுதும் செல்போன்களில் மூழ்கி விடுவதால் பேராபத்துகளும் எதிர்கால சந்ததியினருக்கு சூழ்ந்துள்ளன. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் லாப நோக்கம் இல்லாத சாப்பியன் எனும் தனியார் ஆய்வகம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது. உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர். இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர்கள் கூறும் போது, தற்போது குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை கொடுப்பது நாகரீகமாகவும், கவுரவமாகவும் ஆகிவிட்டது.

இதன் மூலம் தமது குழந்தைகள் டிஜிட்டல் அறிவை பெறுவார்கள் என பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆனால் அவர்களின் எதிர்காலத்தை நீங்கள் சூனியம் ஆக்கிக் கொள்கிறீர்கள் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தைக்கு எவ்வளவு முன்னதாக ஸ்மார்ட்போன் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இளம் வயதிலேயே மனநல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சிறுவயதிலேயே ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்த இளைஞர்கள் அதிக தற்கொலை எண்ணங்களுடனும், யதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பது போன்ற உணர்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து அவர்கள் ஒதுங்கி இருக்க நினைக்கிறார்கள். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடும் எண்ணங்கள் அவர்களுக்கு குறைந்திருந்தது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

6 வயது முதல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் இளம்பெண்களில் 74 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருப்பதும், கடுமையான மனநல சவால்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நரம்பியல் நிபுணர் தியாகராஜன் கூறும்போது, குழந்தைகள் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆன்லைனில் செலவிடுகிறார்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது வருடத்திற்கு 2,950 மணி நேரம் ஆகும். ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு இந்த நேரத்தில் நிறைய நேரம் குடும்பத்தினருடன் நண்பர்களுடனும் ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட்டு இருப்பார்கள். இவ்வாறு இருக்கும் போது குழந்தைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இயல்பாகவே கற்றுக்கொள்ள முடிகிறது. ஆகவே குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துவிட்டு பெற்றோர்கள் தங்கள் வேலையில் ஈடுபடாமல், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.