October 2014
M T W T F S S
« Sep    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
 
 
 

Recent Comments

 

கே.பியின் வலைக்குள் சர்வதேச இராஜதந்திரமா… அல்லது சர்வதேச இராஜதந்திரத்தின் வலைக்குள் கே.பியா…??? அனலை நிதிஸ் ச. குமாரன்

 

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பினராகவும், இயக்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்தவருமான கே.பி.என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் சர்வதேச இராஜதந்திரப் பொறிக்குள் வீழ்த்தப்பட்டாரா அல்லது கே.பியின் வலைக்குள் சர்வதேச இராஜதந்திரமா என்கிற வினா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வருகிறது.இவ்வினாவுக்கு இன்று வரை விடை தெரியாது அலைகிறார்கள் பலர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறிய மறு தினமே அவர் இறந்துவிட்டதாக 2009-இல் கூறி உலகத்தமிழரைக் குழப்பினார் கே.பி. தற்போது சர்வதேசத்தின் சதிகளினாலேதான் தமிழீழ விடுதலைப்போர் தோற்றது என்று புதுக்கதை விட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராகவும்,ஆயுத முகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்கான தலைவராகவும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனினால் நியமிக்கப்பட்டவரே கே.பி.நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கினார்.பிரபாகரன் இறந்துவிட்டதாகப் புதுக்கதையை அவிட்டுவிட்ட பின்னர் தானே விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என்று அறிவித்தார்.இது போன்று பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார் கே.பி.சர்வதேச இராஜதந்திர யுக்திகளை நன்கே அறிந்து வைத்திருந்தார் கே.பி.என்றால் மிகையாகாது.
நான்காம் கட்ட ஈழப் போர் தொடங்கியவுடன் கே.பியின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இறந்ததும் விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களைக் கவனிக்க கே.பி. போன்ற மூத்த விடுதலைப்புலிகளுக்கு அதிகாரங்கள் அதிகமாகவே வழங்கப்பட்டு இருந்தன.
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டுமென்பதற்கு இணங்க சர்வதேசம் விரித்த வலையைச் சரிசெய்ய சர்வதேச இராஜதந்திர விழுமியங்களுக்கு ஏற்றவாறு செயற்படுவதே புத்திசாலித்தனம் என்பதனை நன்கே அறிந்து வைத்திருந்தது விடுதலைப்புலிகளின் தலைமை. இதற்கு கே.பியின் பங்களிப்பு அதிகமாகத் தேவைப்பட்டாலும் நடந்தேறிய சம்பவங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவதாகவே அமைந்தன.

சமூக சேவகராகியுள்ள முன்னாள் சர்வதேசப் பயங்கரவாதி
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்கிற வாதம் கே.பி.விடயத்தில் உண்மையாகியுள்ளது. பல வருடங்களாகப் பயங்கரவாதக் குழுக்களுக்கு கே.பி.ஆயுத விற்பனை செய்தவர் என்றும் அதிவேக விசைப்படகுகளைப் பயன்படுத்தித் திறமையாகச் சமாளித்து ஆயுதங்களை அனுப்ப வேண்டிய இடங்களுக்கு அனுப்பும் திறமை படைத்தவர் என்றும் மிகவும் நவீனமான ஆயுதக் கொள்வனவு முறைமைகளை மேற்கொண்டு பிரதான ஆயுத வியாபாரிகளின் நம்பிக்கையைப் பெற்றிருந்தவர் என்றும் இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் கூறிவந்தன.
முன்னாள் சோவியத் நாடுகள்,மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய ஆயுத உற்பத்தி நாடுகளுக்குச் சென்று வந்ததுடன்,ஹொங்கொங்,சிங்கப்பூர்,தாய்லாந்த்,லெபனான்,சைப்பிரஸ் போன்ற நாடுகளிலுள்ள ஆயுத வியாபாரிகளிடமும் தொடர்புகளைப் பேணி விடுதலைப்புலிகள் உட்படப் பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆயுதங்களை விநியோக்கிக்கும் பொறுப்பை வகித்தார் கே.பியென்று தொடர்ந்தும் கூறிவந்தன இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள்.
சிறிலங்கா அரசுக்கு எதிராக மேற்குலக நாடுகளில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும், புலம்பெயர் தமிழ் மக்கள் அதிகமாகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுவதற்கு ஊக்குவித்தும் நிதி ஆதரவு வழங்கி வந்தவர் கே.பி.என்கிற பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தன இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட அதி முக்கிய பிரமுகர்களின் படுகொலைச் சதிகளின் முன்னணிக் கதாநாயகன் என்று வர்ணிக்கப்பட்டு,இந்திய அரசினாலும் இன்ரர் போலினாலும் வேண்டப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுத் தேடப்பட்டுவரும் நபரே கே.பி.
செப்டெம்பர்10, 2007-இல் தாய்லாந்து காவல்;துறையினரினால் கே.பி.கைது செய்யப்பட்டதாக தாய்லாந்தின் பாங்கொங் போஸ்ட் தெரிவித்திருந்தது.இது தொடர்பாக சிறிலங்கா மற்றும் இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்துவதற்காக அணுகிய போது அந்தச் செய்தி சரியானதல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளினதும் சதி வேலையோ அல்லது கே.பியின் சர்வதேச இராஜதந்திரக் காய்நகர்த்தலின் ஒரு படியோ என்கிற கருத்தே அப்போது பரவலாக நிலவியது.

புகையில்லாமல் நெருப்பு வராது என்பது பழமொழி.சம்பவம் ஒன்று இடம்பெறாமல் அப்படியானதொரு செய்தியை தாய்லாந்தின் முன்னணிப் பத்திரிகை வெளியிட்டிருக்க வாய்ப்பே இல்லை.மலேசியாவில் இடம்பெற்ற கே.பியைக் கைது செய்யும் முன்னர் செய்யப்பட்ட ஒத்திகையே தாய்லாந்தில் இடம்பெற்றது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சர்வதேசம் விரித்த வலையிலேயோ குறிப்பாக இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் வைத்த பொறிக்குள்ளேயோ தான் கே.பி. விழுந்தாரென்றும் இவர் மூலமாகவே தான் விடுதலைப்புலிகளைப் போரில் தோற்கடிக்க முடிந்தது என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. கருணா மற்றும் பிள்ளையான் போன்றோர்களின் பிரிவும் கே.பியின் இன்னொரு காய்நகர்த்தலோ என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல செய்தியாளர்களிடம் சமீபத்தில் கூறியதாவது:“கே.பிக்கு மன்னிப்பு வழங்குவதா அல்லது அவருக்கு எதிரான குற்றச் சாட்டுக்களை மறந்துவிடுவதா என்பது அல்ல இங்குள்ள பிரச்சினை.எமக்கு சட்டத்தில் ஏதாவது வாய்ப்பு இருந்தால்,அதனை விரிவான சமூக நீதியின் அடிப்படையில் பரிசீலித்துப் பார்க்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது…குற்றவாளி ஒருவருக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்த முடியாதா?ஏன் முடியாது? அவர் அரச சார்பற்ற நிறுவனத்தை நடத்துவதற்கு நாங்கள் தானே அனுமதி தருகிறோம் என்பதாகும்.”
சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் விசித்திரமாக இருக்கின்றன.கே.பி. ஒரு சர்வதேசக் குற்றவாளியென்று கைது செய்ததாகப் பரப்புரையைச் செய்த சிங்கள அரசு பின்னர் அவர் தலைமையில் ஒரு அரச சார்பற்ற நிறுவனமான நேர்டோ என்கிற அமைப்பை உருவாக்க அனுமதி வழங்கியது. இவ் அமைப்பு ஊடாக வடக்குக் கிழக்குப் பகுதி மக்களுக்கு சேவைகளைச் செய்யலாம் என்றும் கூறியது சிங்கள அரசு.
சிறையில் வைத்து இந்திய மற்றும் சிறிலங்காவின் புலனாய்வு அதிகாரிகளினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைவிட்டன இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள்.பின்னர் கே.பி.தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. திடீரென்று மகிந்தவின் சகோதர்களுடன் சிறிலங்காவின் இராணுவத்தின் பாதுகாப்புடன் தமிழர் பகுதிகளில் அவர் பயணங்களை மேற்கொண்டுவந்ததுடன் சொகுசு பங்களாவில் தங்கவைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.
தமிழ்ச் செல்வன் தங்கிய வீடு மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் பலர் தங்கிய இடங்களைத் தினமும் தரிசித்து வருகிறார் கே.பி. அன்பு இல்லம் போன்ற குழந்தைகளைப் பராமரிக்கும் வேலைகளையும் செய்யும் கே.பி.பல்வேறுபட்ட சமூக வேலைகளைச் செய்து வருவதானது இவரையும், சிங்கள மற்றும் இந்திய அரசுகளையும் யாராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலையின் வீழ்ச்சிக்கு சர்வதேசமே காரணமாம்
பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தைத் சிதைத்தது போலவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் சர்வதேசம் சிதைத்தது என கே.பி. கூறியுள்ளார்.மகேந்திரா இன்ஜினியறிங் என்கிற நிறுவனத்தின் பிராந்திய அலுவலகம் சமீபத்தில் அரியாலை புங்கன்குளப்பகுதியில் கே.பியினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பேசும்போது அவர் தெரிவிக்கையில்,“எந்தவொரு விடுதலைப் போராட்டமும் பேச்சுவார்த்தை என்று வரும் போது ஒரு வருடத்துக்கு மேலாக இழுக்கப்படக்கூடாது. ஆனால் எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச சதிவலையில் ஐந்து வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டது. இறுதியாக எமது போராட்டம் சர்வதேச வலையில் சிதைக்கப்பட்டது.எனவே இதிலிருந்து எமது மக்களை வெளியே கொண்டு வரவேண்டும்.நான் அரசியலுக்கு வருவதை காலமும் மக்களும் தான் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.
கே.பியின் பேச்சு நகைப்புக்கிடமாக உள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வலதுகரமாக இவர் இயங்கிக் கொண்டிருந்த வேளையில்;தான் சர்வதேசத்தின் அழுத்தத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துப் பல ஆண்டுகள் இழுத்தடிக்கும் தந்திரத்தைச் சிங்கள அரசுகள் செய்த வேளையில் விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச நோக்கங்கள் என்னவென்பது குறித்துத் தலைமைக்கு நன்றாகவே அறிவித்துக் கொண்டிருந்தார் கே.பி.பாலஸ்தீன விடுதலை என்பது பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் மத்தியஸ்தம் செய்வதற்கு ஒரு தசாப்தத்துக்கு முன்னரே பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் மத்தியஸ்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிட்டது நோர்வே.
பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடம்பெற்ற வெற்றி தோல்வியைப் பற்றிய அறிவு கே.பிக்கு முன்னரே இருந்தது. குறிப்பாக கே.பி.என்பவர் பாமரத் தமிழ் மகன் அல்ல.இவர் சர்வதேச அரசியல் அறிவைப் பெற்றிருந்ததுடன்,பல்வேறுபட்ட உலகத் தலைவர்களுடனும் மற்றும் முக்கிய அதிகாரிகளுடனும் நேரடித் தொடர்பைப் பேணியவர். இப்படியான செல்வாக்கைப் பெற்றிருந்த கே.பிக்கு விடுதலைப் போராட்டங்கள் ஒரு வருடத்துக்கு மேலாக இழுத்தடிக்கப்படுமாக இருந்தால் விடுதலைப் போராட்டங்கள் சிதைக்கப்பட்டுவிடும் என்பதைப் பற்றிய அறிவு இல்லாமலிருக்க வாய்ப்பேயில்லை.
பாதிக்கப்பட்டுள்ள தமிழீழ மக்களை வெளியே கொண்டுவரும் நோக்கம் நல்லது.இதைவிட மேலான செயலென்னவென்றால் சிங்கள இராணுவத்தைத் தமிழீழப் பிரதேசத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்துவதே.ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிங்கள இராணுவமும், ஒட்டுக்குழுக்களும் தமிழீழப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு மக்களுடன் மக்களாகச் சேர்ந்து பல்வேறு விதமான அடாவடித்தனமான செயற்பாடுகளைச் செய்கிறார்கள்.
கே.பியைத் தனதருகில் வைத்துக் கொண்டு புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளைச் சிங்களத்துடன் கூட்டுச் சேர்க்கும் வேலையைச் செய்வதுடன் தமிழீழப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் முதல் சிங்களத்தின் அடையாளச் சின்னங்களைக் கட்டும் வேலைகளையும் செய்கிறது சிங்கள அரசு. இதுபோன்று பல்வேறு விதமான செயல்களைச் செய்து தமிழின அடையாளங்களை அழிக்கும் வேலைகளைச் சிங்களம் செய்கிறது.இதற்கு உடந்தையாக இருக்கிறார் கே.பி.என்றால் அது மிகையாகாது.
சர்வதேசச் சதியே தமிழீழ விடுதலையின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறும் கே.பி. தமிழீழத்தின் அடையாளங்களை அழிக்கும் செயல்களைச் செய்யும் சிங்கள அரசுடன் இணைந்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. தமிழர்களைக் கேடயமாகப் பாவித்து அரசியல் நடத்தும் மகிந்த அரசுக்குப் பக்கத் துணையாக இருக்கும் கே.பியின் இராஜதந்திரத்தை என்னவென்று வர்ணிப்பது என்று தெரியாமல் உள்ளது.
சர்வதேசத்தின் இராஜதந்திர வலைக்குள் சிக்கித் தவிக்கிறாரா கே.பி அல்லது தனது இராஜதந்திரச் செயல்பாடுகள் மூலமாகச் சிறந்த இராஜதந்திரியாகச் செயற்பட்டு தமிழீழத் தனியரசை உருவாக்க வழியமைக்கிறாரா கே.பி.என்கிற கேள்வி பல தமிழ் மக்களிடம் நிலவுகிறது. யாருடைய இராஜதந்திரம் இறுதியில் வெல்லும் என்பது வெகு சீக்கிரத்திலேயே தெரிந்துவிடும்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

 

 
 

Tags

Related Posts

  • No Related Posts
 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment

 
 
 
 
 

Athirady News Search

அதிரடி இணையத்தில் வெளியாகும் செய்திகளில் நீங்கள் விரும்பும் செய்திகளை உடன் பார்க்கும் வகையில் நீங்கள் தேடும் (SEARCH) செய்திகளின் தலைப்பை இங்கு குறிப்பிட்டு (உதாரணமாக "புலிகள்" என்று குறிப்பிட்டு) எழுதினால் அதுகுறித்த செய்திகளை உடன் பார்வையிடலாம். நன்றி!!

 

Never miss any News | Newsletter

Be the first to know when we add new news! Enter your email address below and subscribe. It's 100% free!

 

Enter your email address: