12 April 2017 0 Comments Report

முகமாலையில் பாரிய தாக்குதல் நடவடிக்கை!! : பலத்த இழப்புகளுடன் பின்வாங்கிய இராணுவம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-41) – வி. சிவலிங்கம்

முகமாலையில் பாரிய தாக்குதல் நடவடிக்கை!! : பலத்த இழப்புகளுடன் பின்வாங்கிய இராணுவம்!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 41) -சிவலிங்கம்

‘ ஊடக சுதந்திரத்தைத் தந்தது பத்திரிகை நிருபர் அல்ல அதனை ராணுவ சிப்பாயே வழங்கினான்.’

‘ பேச்சு சுதந்திரத்தை வழங்கியது கவிஞனல்ல, ராணுவ சிப்பாயே வழங்கினான்.’

இப் பின்னணியில் ராணுவம் முகமாலை முன்னரங்கப் பகுதியில் பாரிய தாக்குதலைத் தொடுத்தது. இப் பகுதி ஓர் சிறிய ஒடுக்கமான குடாநாட்டை ஏனைய பெரும் நிலப்பரப்புடன் தொடுக்கும் பகுதியாகும்.

சுமார் 5000 ராணுவம் பாரிய ஆயுதங்களுடன் தாக்கியது. இத் தாக்குதலின்போது புலிகள் சில மீற்றர் தூரம் பின்வாங்கினர்.

பின்னர் அவர்களும் கன ரக ஆயுதங்களுடன் தாக்கினர். இதனால் ராணுவம் பலத்த ராணுவ இழப்புகளுடன் பின்வாங்கியது. ராணுவ  தரப்பினர்  இது பாதுகாப்பிற்காக  நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறியது.

ஆனால் பாதுகாப்பு ஆய்வாளர்களின் கருத்துப்படி ராணுவ இழப்புகளுடன் பெருமளவு ஆயதங்களை இழந்த விபரங்களும் பின்னர் தெரியவந்தன.

இதற்கான காரணம் ராணுவத்தினரின் அளவுக்கு மீறிய நம்பிக்கையே எனவும் தெரிவித்திருந்தனர்.

இத் தாக்குதல் காரணமாக புலிகள் பெற்றுக்கொண்ட  அரசியல் வெற்றி அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

பிரிகேடியர் பால்ராஜ்

புலிகள் கொழும்பு நகரப் பகுதியில் குண்டு வெடிப்பை நடத்தினர்.

இதன் விளைவாக 26 பொதுமக்கள் மரணமடைந்ததுடன், 38 பேர் படுகாயமடைந்தனர். இத் தாக்குதல் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு  ராணுவத் தீர்வே வழி என வாதிப்பவர்களின் கரங்களைப் பலப்படுத்தியது.

இந் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தைப் பலவீனப்படுத்தியதுடன், இப் பிரச்சனை பயங்கரவாதப் பிரச்சனை என திரிபுபடுத்தவும்  வாய்ப்பளித்தது. இதனை தமிழ் மக்கள் தமது கவனத்தில் கொள்ளவில்லை.

சுமார் 20 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மே 10ம் திகதி நடத்தப்பட்டது.

இத் தேர்தல் வட பகுதி போரின் கவனத்தை திசை திருப்பியது. தேர்தலில் தில்லுமுல்லுகள் இடம்பெற்றபோதும் சிறிய இடைவெளியில் அரச தரப்பினர் வெற்றி பெற்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு  இணைந்த கூட்டணி  20 ஆசனங்களைப் பெற்றது.

ஐ தே கட்சி, முஸ்லீம் காங்கிரஸ், ஜே வி பி கூட்டணி தலா ஒரு ஆசனங்களைப் பெற்றனர்.

இத் தேர்தல் முடிவை ஐ தே கட்சி நிராகரித்தது. சுமார் 100 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் கடத்தப்பட்டிருந்தன. தேர்தலைக் கண்காணித்த சிவில் அமைப்புகள் தேர்தல் சீராக நடந்ததாக தெரிவிக்கவில்லை.

தேர்தல் ஒழுங்காக நடந்ததோ இல்லையோ, கிழக்கு மாகாண மக்கள் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டனர். தற்போது கவனம் யார் முதலமைச்சர்? எனத் திரும்பியது.

இது தமிழ் – முஸ்லீம் பிளவுகளை   ஆழப்படுத்தியது.   பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? என்ற கேள்வி நிலவியது. கோதபய இன் கருத்துப்படி கிழக்கில் புலிகள் மீண்டும் பலப்படுவதைத் தடுக்கவேண்டும்.

இதற்கு பிள்ளையானின் ஆதரவு அவசியம். அவ்வாறானால் மட்டுமே நாம் வடக்கில் முழுக் கவனத்தைச் செலுத்தமுடியும் என்பதே வாதமாக இருந்தது. இதன் காரணமாக பிள்ளையான் மே 16ம் திகதி கிழக்கு மாகாணசபையின் முதல்வரானார்.

இத் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாக கருணா பிரித்தானிய சிறையிலிருந்து 9 மாதத் தண்டனையின் பாதிக்காலம் முடிவடைந்ததும் விடுதலையானார்.

அவர் நாடுகடத்தப்படுவாரா? அல்லது எப்போ இலங்கை திரும்புவார்? என்பது தெளிவற்றதாக இருந்தது. இருப்பினும் அவர் தேர்தலுக்குப் பின்னர் திரும்பினால் நல்லது என்பது பிள்ளையானின் விருப்பமாக இருந்தது.

ஐ நா மனித உரிமைச் சபையில் இரண்டாவது தடவையும் அங்கத்துவம் பெறுவதற்காக இலங்கையின் கவனம் திரும்பியிருந்தது.

ஆனால் அங்கு இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பெரும் பிரச்சனையாக அமைந்தது. சர்வதேச அளவில் எழும்பிய எதிர்ப்புகள் காரணமாக இலங்கையின் முயற்சி பலிக்கவில்லை.

(Desmond Tutu)

உதாரணமாக தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவரும், சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான வண. ஆண்டகை டெஸ்மன் ரு ரு  (Desmond Tutu) இலங்கை  பற்றித்   தெரிவிக்கையில்   அரச படைகள் நடு இரவில் தனது பிரஜைகளை, குடும்பங்களை அவர்களது இல்லங்களிலிருந்து வெளியேற்றியது.

பரவலான சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் இடம்பெற்றுள்ளன. மனித உரிமைச் சபையின் ஆரம்ப நோக்கம் தெரிவுசெய்யப்பட்ட அரசுகள் மனித உரிமைகளைப் பேணுவது அவசியம் என்பதாகும்.

அந்த வகையில் இலங்கை அதற்குத் தகுதியற்றது எனத் தெரிவித்திருந்தார்.

2008ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி விடுதலைப் புலிகளின் முக்கிய ராணுவ அதிகாரியான பிரிகேடியர் பால்ராஜ்  காலமானார்.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மார்படைப்பினால் தனது 43 வயதில் மரணமானார். இவரே ஆனையிறவு முகாம் தாக்குதலில் மிக முக்கியமான பங்கினை வகித்தவராகும்.

ஊடகங்களின் மீதான தாக்குதல்

போர் குறித்து ஊடகங்கள் தரும் தகவல்கள் அரசாங்கத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்தது.

மே மாதம் 22ம் திகதி இது உச்சத்திற்கு வந்தது. இலங்கையில் வெளியாகும்  ஆங்கிலப் பத்திரிகையான (‘The Nation’ ) இதழின் பாதுகாப்பு  சம்பந்தமான  ஆய்வாளர்  கீத் நொயர்  (Keith Noyahr)   கொழும்பு  பகுதியில் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்.

பின்னர் அவரது வீட்டிற்கு அருகாமையில் கைவிடப்பட்டு சுமார் 7 மணித்தியாலங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இவர் அப்போதைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன் செயற்பாடுகள் குறித்து கடுமையாக விமர்ச்சித்திருந்தார். கடத்தியவர்களின் நோக்கம் அவருக்கு அச் செய்திகளை வழங்கியவர் யார்? என்பதை அறிவதுதான்.

ஜெனிவா அங்கத்துவத்திலிருந்து  இலங்கை வெளியேற்றப்பட்டதற்கான காரணம் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களே என உள்நாட்டு ஊடகங்கள் எழுதின.

இதற்குச் சாட்சியமாக பின்வரும் நிகழ்வை முன்வைத்தன.

அதாவது அரச கட்டுப்பாட்டிலுள்ள  லேக்ஹவுஸ்   நிறுவனத்தில் பணியாற்றிய   இரண்டு அதிகாரிகள் கீத் நொயரின் கடத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்களை கோதபய அழைத்து எச்சரிக்கை செய்திருந்தார்.

அரச உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் உரிமை அற்றவர்கள். நீங்கள் தொடர்ந்து இவ்வாறு ஈடுபட்டால் உங்களை முடிகட்டுவது எப்படி என மக்கள் அறிவார்கள் என எச்சரித்திருந்தார்.

இச் சம்பவம் குறித்து கோதபய தெரிவிக்கையில் இச் சம்பவம் குறித்து விசாரணை இல்லை எனத் தெரிவித்து மனித உரிமை என்பதில் எதுவும் இல்லை.

நாம் போரில் ஈடுபட்டுள்ளபோது நாம் இதுபற்றிக் கவலைப்படப்போவதில்லை. சர்வதேச பிரச்சாரத்திற்காக நாம் யாரையும் கைதுசெய்ய முடியாது. என்ன செய்யவேண்டுமோ அதனை நான் செய்வேன் என்றார்.

ராணுவ தகவல் பிரிவில் பின்வருமாறு வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

‘ ஊடக சுதந்திரத்தைத் தந்தது பத்திரிகை நிருபர் அல்ல அதனை ராணுவ சிப்பாயே வழங்கினான்.’

‘ பேச்சு சுதந்திரத்தை வழங்கியது கவிஞனல்ல, ராணுவ சிப்பாயே வழங்கினான்.’

இரண்டு வாரத்தின் பின்னர் யூன் 6ம் திகதி ஜனாதிபதி மகிந்த பத்திரிகையாளர்கள், வெளியீட்டாளர்களை அழைத்து ஊடகங்களை  ஒடுக்கும் தமது நோக்கங்களை வெளியிட்டார்.

அரசின் ராணுவ நடவடிக்கைகளை விமர்ச்சிப்பதை ஏற்க முடியாது. தொடருமானால் அரசின் கடுமையான தணிக்கை தொடரும். அத்துடன் நஷ்டஈடு கோரப்படும்.

அக் கூட்டம் தொடர்பான தகவல்கள் பிரசுரிக்க முடியாது என்பதும் மறைமுகமாக உணர்த்தப்பட்டது.

சட்டரீதியாக அரசு தடுத்தால் சர்வதேச அளவில் ஏற்படும் விளைவுகளை அரசு அறியும். எனவே அரசு நட்பு அடிப்படையிலான தந்திரங்களைப் பயன்படுத்தியது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மனித உரிமை அமைப்பின் விசேட அறிக்கை

யாழப்பாண நிலவரங்கள் மயக்கத்தைத் தருகின்றன. காட்டுமிராண்டித்தனமான, குழப்பமான, கோரமான அனுபவங்களாக அமைந்தன.

அரச படைகளால் ஏற்படுத்தப்படும் கொலைகள் துன்பத்தை வருவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் ராணுவத்தால் விசாரிக்கப்படுகிறார்கள், விடுவிக்கப்படுகிறார்கள்.

பின்னர் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டு மனைவி, குடும்பத்தினர் முன்னிலையில் கொலைசெய்யப்படுவதோடு கொலையாளிகள் மோட்டார் வண்டிகளில் மகிழ்ச்சியோடு பவனி வருகிறார்கள்.

அங்கு அரசியல் ஈடுபாடு அற்ற நிலை காணப்படுவதால் ராணுவம் மிருகத்தனமாக செயற்படுகிறது. மாணவர்கள் துரத்தப்படுகிறார்கள்.

பாடசாலை மாணவர் வரவு இடாப்பு பரிசோதிக்கப்படுகிறது. இளைஞர்கள், மனைவிமார், தாய்மார் அடிக்கப்படுகிறார்கள். அப்பாவி பெண்கள் வீதிகளில் சுடப்படுகிறார்கள்.

எந்தவித குற்றமும் புரியாத மக்கள் மீது குற்றப்பத்திரிகை வழங்கப்படுகிறது. கொலையாளிகளின் பயத்தின் காரணமாக தாமாகவே விளக்க மறியலுக்குச் செல்கிறார்கள்.

இதன் காரணமாக சாமான்ய மக்கள் அரச பாதுகாப்பைக் கோருகிறார்கள். சட்டத்தின் பாதுகாவலர்கள் என்போர் சுதந்திரமாக மனிதக் கொலைகளை மேற்கொள்கிறார்கள்.

இவை இந்திய அரசிற்கு கவலையளிப்பதாக இருந்தன. யூன் மாத இறுதிப்பகுதியில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜே சிங் தலைமையில் உயர்மட்ட தூதுக்குழு இலங்கை வந்தது.

இச் சந்திப்பின்போது அரசியல் தீர்வை நோக்கிச் செல்லுமாறும், குறிப்பாக அதிகார பரவலாக்கலுக்கான யோசனைகளை விரைவில் வெளியிடுமாறும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தக்களரி தொடர்வது அல்லது   ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என இரு சாராரும் வாதித்துள்ளார்கள்.

அரச தரப்பினர் ராணுவ வெற்றியைப் பெறுவதற்கு இன்னொரு வருடம் தேவை எனவும், பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை அரசியல் தீர்வு சாத்திமில்லை என்றார்கள்.

இந்திய தரப்பினர் வழமை போலவே 13வுது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்தும்படியும், உதாரணமாக கிழக்கு மாகாண முதல்வரை அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிக்குமாறு கோரினர்.

அத்துடன் இலங்கை சமீபத்தில் சீனாவிடமும், பாகிஸ்தானிடமும் வாங்கிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் புலிகளுடனான போரில் தேவையற்றவை என தெரிவித்தனர்.

ஆனால் கோதபய மசியவில்லை. அவ் ஆயுதங்கள் அவசியம் என வாதாடினார்.

( கருணா இலங்கை திரும்பினார். விபரம் அடுத்த வாரம்) -சிவலிங்கம்-

தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.
 
***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….

Post a Comment

*