18 April 2017 0 Comments Report

அமெரிக்காவின் ராணுவ உதவிகள், தகவல்கள் இல்லையெனில் போரை வென்றிருக்க முடியாது!! – இலங்கைக்கான அமெரிக்க தூதர்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-42) – வி. சிவலிங்கம்

அமெரிக்காவின் ராணுவ உதவிகள், தகவல்கள் இல்லையெனில் போரை வென்றிருக்க முடியாது!! – இலங்கைக்கான அமெரிக்க தூதர்!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 42) -சிவலிங்கம்

• ஐ நா அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளுக்கான பாதைகளைப் படிப்படியாக அடைத்து வந்த நிலையில் இறுதியாக போர்நிறுத்த ஒப்பந்தத்தினையம் முறித்தது. மன்னார் பகுதியில் கடுமையான யுத்தம் தொடர்ந்து பெருந்தொகையான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள்.

மன்னார் மடுமாதா திருக்கோவில் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்லாம் என்ற அச்சம் நிலவியது.

இந் நிலையில்  இந்திய பாதுகாப்புச் செயலர் விஜேசிங் இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளை நடத்தி 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்தும்படி வற்புறுத்தியதோடு கனரக ஆயுதங்களின் கொள்வனவு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பதை இதுவரை பார்த்தோம்.

கருணா வருகை

2008ம் ஆண்டு யூலை ஆரம்ப பகுதியில் கருணா இலங்கை திரும்பினார். இவர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக் குறித்து வழக்குத் தொடர்வதற்கான போதிய ஆதாரங்கள்  இல்லாமையால் விடுவிக்கப்பட்டார்.

இவரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி எம் வி பி )அமைப்பின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்கும்படி பிள்ளையான் வற்புறுத்தினார்.

அவர் விரும்பின் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை பொறுப்பெடுப்பினும் தாம் தயார் எனத் தெரிவித்து கோரிக்கையை நிராகரித்திருந்தார். ஆனால்  எதிர்வரும்  தேர்தலில்  போட்டியிடப்போவதாக கருணா கூறினார்.

இவர்கள் இருவரும் யூலை 12ம் திகதி கோதபய முன்னிலையில் பல மணி நேரம் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இப் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

பதிலாக பலப்பரீட்சை ஆரம்பமானது. பேச்சுவார்த்தை நடைபெற்று 2 நாட்களில் கருணா ராணுவ பாதுகாப்புடன் கிழக்கு மாகாணம் சென்றார்.

இவரது வருகை பற்றி பிள்ளையான் அறிந்திருக்கவில்லை. ரி எம் வி பி இன் காரியாலயத்தில் தம்மைச் சந்திக்க வருமாறு கருணா செய்தி அனுப்பினார். கருணாவின் வருகையும், அவரது நோக்கங்களும் பிள்ளையானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தமையால் அழைப்பை நிராகரித்தார்.

இப் பின்னணியில் அப்போது சமாதான   செயலகத்தில் செயற்பட்ட  ராஜிவ் விஜேசிங்க (Rajiva Wijesinghe)புதிய பேச்சுவார்த்தை முயற்சிகள்  தயாராக  இருப்பதாக  அறிவித்தார்.

அதாவது புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால்  மாத்திரமே  பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றார். இப் பேச்சுவார்த்தைகளில் ரி எம் வி பியும் உள்ளடக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவற்றைப் புலிகள் தரப்பில் இளந்திரையன் புதிய பேச்சவார்த்ததைகளுக்கு முன்பதாக நோர்வேயினர் புலிகள் தலைமையைச் சந்திக்க அனுமதிக்கவேண்டும் என்றார்.

போர் மேலும் விரிவடைந்தது.

யூலை மாத நடுப்பகுதியில் மன்னார் பகுதியிலுள்ள விடத்தல் தீவுப் பிரதேசம் ராணுவத்திடம் வீழ்ந்தது.

தமிழ் நாட்டிற்கு அடிக்கடி சென்று திரும்ப வசதியாக அமைந்த அப் பகுதியைக் கைவிட்டு நாச்சிக்குடாவை நோக்கி புலிகள் சென்றனர். புலிகளின் கடல்வழித் தொடர்புகள்  அடிக்டி  தடுக்கப்படுவது   கடற்படையின்   ஆதிக்கம்  அதிகரித்துச்   செல்வதை உணர்த்தியது.

இப் பின்னணியில் யூலை 21ம் திகதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு கொழும்பில்  ஆகஸ்ட் 4ம் திகதி இடம்பெறும் ‘சார்க்’ மாநாட்டினைக் கருத்தில் கொண்டு  போர் நிறுத்தம்  செய்வதாக  புலிகள் தன்னிச்சையாக அறிவித்தனர்.

இப் போர் நிறுத்த அறிவித்தல் குறித்து இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவிக்கையில் 10 நாட்கள் போர் நிறுத்தமெனினும் இலங்கை ராணுவத்தின் முன்னேற்றத்தினை  அது தடுத்துவிடும்.  புலிகளுக்கு மூச்சுவிட  சிறிது அவகாசம்  கிடைத்துவிடும் என தெரிவித்திருந்தார்.

அமெரிக்க தூதரகம்

புலிகளைப் பலவீனப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திப்பதே தமது இலக்கு என அரசு சமீப காலம் வரை கூறி வந்தது. ஆனால் தற்போது ராணுவ  முன்னேற்றம்  காரணமாக மாற்றமடைந்துள்ளது.

ஏனைய அலுவல்களை ஒதுக்கி போரிலேயே கவனத்தைச் செலுத்தியுள்ளனர். இதனைப் பார்க்கையில் உள்நாட்டு அரசியலை வென்றெடுப்பதற்கு ராணுவத் தீர்வு அவசியம் என்ற நிலைக்கு மாற்றமடைந்துள்ளது.

அதனால் அதிகார பகிர்வு குறித்த குரல்கள் அதிகளவு மௌனமாகியுள்ளன. புலிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள ஆதரவைக்  குறைப்பதற்கு  இது நல்ல வழி என நாமும், இதர அவதானிகளும்  கருதினோம் என அமெரிக்க தூதரக அறிக்கை தெரிவித்தது.

போரின் உக்கிரம் மேலும் அதிகமாகியது. மன்னார் மாவட்டத்தின் புலிகளின் இறுதி கடற் தளமாகிய வெள்ளாங்குளமும் ராணுவத்திடம் வீழ்ந்தது.

போரின் உக்கிரம் அதிகரிக்க மனித அவலங்கள் குறித்து சர்வதேச அரசுகளின் கவனம் திரும்பியது.

இதன் காரணமாக ஐ நா சபை  அபிவிருத்தி  இலங்கை  வதிவிட  அதிகாரி  நீல் புனே  (Neil Buhne)   அவர்களை வன்னி செல்ல அரசு அனுமதித்தது.

அங்கு எதிர்பார்த்ததை விட மிக மோசமான நிலையில் மக்கள் இருப்பதை அவதானித்தார். போரின் காரணமாக 20 தடவைகளுக்கு அதிகமாக இடம்பெயர்ந்த குடும்பங்களை அவர் சந்தித்தார்.

வன்னியில் 160,000 மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் வெளியேற விரும்பின் அவர்களை அனுமதிக்குமாறு புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டால் ராணுவம் அவர்களைத் துன்புறுத்தும் எனக் கூறி அக் கோரிக்கையை நடேசன் நிராகரித்தார். இருப்பினும் ஐ நா சபை அதிகாரியின் கவலையைப் புரிந்துகொள்வதாக தெரிவித்தார்.

புனே விஜயம் செய்த அகதிகள் முகாம் மறுநாள் அதாவது ஆகஸ்ட் 26ம் திகதி குண்டு வீசித் தாக்கப்பட்டது.

அதில் 5 பேர் பலியாகினர். மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு அருகாமையில் குண்டுகளைப் பொழிந்து அம் மக்களை அப் பகுதியிலிருந்து  துரத்தியதும்  முன்னேறிச்  செல்வதே ராணுவத்தின் அணுகுமுறையாக இருந்தது.

2008ம் ஆண்டு செப்டெம்பர்  2ம் திகதி புலிகளின் மல்லாவி தளம் பறிபோனது.

கிளிநொச்சியைப் புலிகள் கைப்பற்றும் வரை இம் முகாமே அவர்களின் கட்டுப்பாட்டுத் தளமாக இருந்தது. தற்போது ராணுவம் மும் முனைகளில் போரைத் தொடர்ந்தது.

வன்னியின் மேற்குப் பாகம், வெலி ஓயாவின் வடக்குக் கரை, ஆனையிறவின் தென்பகுதி என்பனவாகும். இவை கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான அணுகுமுறையாக இருந்தது.

இலங்கை – அமெரிக்க ராணுவ உறவு

இலங்கையின் அமெரிக்க தூதுவராக இருந்த தேவிந்த சுபசிங்க   ( Devinda Subasinghe) தெரிவிக்கையில்  புலிகளுக்கு வெளியிலிருந்து வரும் ஆயுதங்களைத்  தடுப்பது, கடற்படையின் சுடுகலன்களின் தரத்தை உயர்த்துவது, உளவுச் செய்திகளைப் பகிர்ந்துகொள்வது என்பன அமெரிக்க உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.

தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா மிக விழிப்புடன் செயற்படுவதால் இது சாத்தியமாகியது. அமெரிக்காவின் ராணுவ உதவிகள் இல்லையெனில் போரை வென்றிருக்க முடியாது.

ஆயுதங்களை சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்றன வழங்கிய போதிலும் அமெரிக்க ரகசிய தகவல்கள் இல்லையெனில் சாதித்திருக்க முடியாது.

இதன் பின்னணியில் ரிச்சார்ட் ஆர்மிற்றேஜ்  (Armitage)  செயற்பட்டார். 2009 வரை அமெரிக்க தகவல் உதவிகளே பெரிதும் உதவின.

ரிச்சார்ட் ஆர்மிற்றேஜ் ( Richard Armitage )

எமது இந்து சமுத்திர நடவடிக்கைகளை இலகுவாக்கும் பொருட்டு ஆரம்பத்தில் இலங்கைக்கு ராணுவ உதவிகளை வழங்கினோம். இந்திய, சீன தரப்பினரின் செல்வாக்கு அதிகரித்த போது அதன் கதவுக்கு அண்மையில் நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

ஆரம்பத்தில் நல்ல நோக்கங்களுக்காகவே உதவினோம். ஆனால் பின்னர் சீன தரப்பினர் இலங்கையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எத்தனித்தபோது எமது ராணுவம் இலங்கையை நோக்கி முன்னோக்கி நகரவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஐ நா பிரதிநிதிகளின் வன்னி வெளியேற்றம்

ராணுவ வெற்றி படிப்படியாக அதிகரிக்க, அரசு தனது அணுகுமுறைகளையும் படிப்படியாக மாற்றத் தொடங்கியது. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் செயற்பட்ட சர்வதேச நிறுவன அதிகாரிகளை உடனடியாக வெளியேறி வன்னியிலிருந்து செயற்படுமாறு அரசு பணித்தது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மட்டுமே சர்வதேச ஒப்பந்தம் காரணமாக செயற்பட அனுமதித்தது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வன்னியிலிருந்தே நிவாரண உதவிகள் வழங்க தீர்மானித்தது.

சர்வதேச அதிகாரிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போதைய மனித உரிமைகள் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

ஆனால் இதன் உள் நொக்கங்கள் என்ன? என்பதை இலங்கைக்கான ஐ நா பிரதிநிதி ஹோர்டன் வைஸ் Gordon Weiss வெளிப்படுத்தினார்.

இலங்கை அரசைப் பொறுத்த வரையில் சர்வதேச பிரதிநிதிகள் அங்கிருப்பது அவர்களது நோக்கங்களுக்கு இடையூறாக இருப்பதாக உணர்ந்தனர்.

என்ன நடக்கிறது? என்பதற்கான சுயாதீன சாட்சியங்களை  இல்லாமல் செய்வதே   இம் முடிவின் நோக்கமாகும்.

ஆனால் ஐ நா சபையின்  இன்னொரு  அதிகாரியான   பென்ஜமின் டிக்ஸ்  (Benjamin Dix)  தெரிவிக்கையில் தன் வாழ்வில் மிக மோசமான தருணம் அதுவெனவும், மக்களுக்கு எமது உதவி மிகவும் தேவைப்பட்ட வேளையில், ராணுவம் கதவைத் தட்டும் வேளையில் நாம் அங்கிருந்து வெளியேறியமையாகும்.   மக்களை நட்டாற்றில் நாம் தவிக்க விட்டுள்ளோம் என்றார்.

2008ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி கிளிநொச்சியை விட்டு ஐ நா சபை பிரதிநிதிகள் வெளியேறியபோது அங்கு அவர்களுடன் பணிபுரிந்த 500 இற்கு மேற்பட்ட தமிழ் அதிகாரிகளையும், குடும்பத்தினரையும் அவர்களுடன் வெளியேற புலிகள் அனுமதிக்கவில்லை.

பாலித ஹோகன

2008ம் ஆண்டு ஐ நா சபை மூலமாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. புலிகளைச் சரணடையும்படி அரசு நிர்ப்பந்தித்தது.

இதன் பின்னரே புலிகள் பொதுமக்களை தம்முடன் இழுத்துச் சென்றனர். இது புலிகளின் வரலாற்றில் பாரிய மூடி மறைப்பு ஆகும்.

நோர்வே தரப்பினர் உண்மையில்  போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள் என நான் நம்பவில்லை. 2009ம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியாவும், வேறு சில நாடுகளும் ராணுவ முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சித்தன.

இதில் நோர்வேயினர் முன்னணியில் இருந்தனர். அவர்களது பேச்சுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருப்பதை அவர்கள் தற்போது உணர்வார்கள் என்றார்.

இந்திய அழுத்தங்கள்

கிளிநொச்சிக்கு 2 கிலோ மீற்றர் தூரத்தில் ராணுவத்தின் 57 வது படைப் பிரிவு காத்திருந்தது. அக்டோபர் மாத ஆரம்பம் என்பதால் மழை காலமாகவும் இருந்தது.

நகரத்திலிருந்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறினார்கள். நகரமே வெறிச்சோடியது. கிளிநொச்சியே புலிகளின் நீண்டகால கட்டுப்பாட்டுப் பகுதி என்பதை அங்கு காணப்பட்ட குழிகளும்.

மண் கும்பங்களும் உணர்த்தின. பல கிலோ மீற்றர் அளவிற்கு மண் அணைகள் காணப்பட்டன. ராணுவ முன்னேற்றத்தைத் தடுக்க இவ் முன் ஏற்பாடுகள் என்ற போதிலும் இப் பிரதேசமே பெரும் இரத்தக் களரியையும் தந்தது.

மழை காலம் என்பதால் ராணுவம் விரும்பும் அளவிற்கு முன்னேற முடியவில்லை.

கிளிநொச்சியில் பாரிய போருக்கான தயாரிப்புகள் இடம்பெற்ற வேளை தமிழ் நாட்டில் பெரும் ஆர்ப்பாட்டங்களும், உண்ணா விரதமும் என மத்திய அரசை நோக்கிய அழுத்தங்கள் காணப்பட்டன.

இதன் காரணமாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் இலங்கைத்  தூதுவரை அழைத்து  ராணுவ நடவடிக்கைகள் குறித்த தமது அதிருப்தியையும், அதிளவு பொதுமக்கள் மரணம் குறித்தும் கவலையை வெளியிட்டார்.

இலங்கை அரசு மிகவும் கட்டுப்பாட்டுடன் செயற்படவேண்டுமெனவும், அரசியல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டுமெனவும் சந்திப்பின் பின்னரான அறிக்கை கூறியது.

இச் சந்திப்பிற்கு மறு நாள் ஜனாதிபதி மகிந்த இந்தியத் தூதுவரை அழைத்து இந்தியாவின் கவலைகள் குறித்த அம்சங்களை தம்மால் முடிந்த அளவிற்கு கவனிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

தமிழ்நாடு அரசு இப் பிரச்சனையில் மத்திய அரசைத் துரிதமாக ஈடுபடும்படி வற்புறுத்தியது. திராவிட முன்னேற்ற கழகம் உண்ணாவிரதப் போரை அறிவித்தது.

முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர் நிறுத்தத்தைக் கோருமாறு கட்சிகளுக்குத் தந்தி அனுப்பினார். தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டமும் இடம்பெற்றன.

இந்திய அரசைத் திருப்திப்படுத்தும் நோக்குடன் அக்டோபர் 26ம் திகதி பஸில் ராஜபக்ஸ டெல்கி புறப்பட்டார். பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும்.

பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என சந்திப்பு அறிக்கை கூறியது.

இச் சந்திப்பிற்கு இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது புலிகளை ஒழிப்பதற்கு இந்தியா ரடார் சாதனங்கள், விமானப்படைப் பயிற்சிகள், உளவுத் தகவல் பரிமாற்றம் என பல உதவிகளை இற்தியா தருவதாக தெரிவித்திருந்தார்.

ராணுவத்தின் இடைவிடாத தாக்குதல் காரணமாக நவம்பர் மாதம் 18ம் திகதி பூனேரியும் ராணுவத்திடம் வீழ்ந்தது. மாவீரர் தின உரைக்கு இன்னமும் சில நாட்களே எஞ்சியிருந்தது.

( அடுத்த வாரம் தொடரும் ) -சிவலிங்கம்

தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.
 
***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….

Post a Comment

*