21 March 2017 0 Comments Report

அரச பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட ‘எல்.ரீ.ரீ.ஈ.யினர் எங்கே?..!!

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில், முக்கிய பொறுப்புகளை வகித்த பலர், அரச பஸ்ஸொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்களில், எமது கணவரும் அடங்குகிறார். அவ்வாறு பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதை, அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்” என, புலிகள் இயக்கத்தின் நிர்வாகத்துறை துணைப் பொறுப்பாளர் பதவி வகித்த இளஞ்சேரனின் மனைவி தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், நேற்று (20) 29ஆவது நாளாகவும் தொடர்ந்தது. இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே, இளஞ்சேரனின் மனைவி, மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“எனது கணவர், இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அவருடன், விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் பலர், இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாகவும் சரணடைந்தனர். அரசியற்றுறை துணைப் பொறுப்பாளர் தங்கன், யாழ். அரசியற்றுறைப் பொறுப்பாளர் இளம்பருதி, மலரவன், கரிகாலன் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள், இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாகச் சரணடைந்தனர். அவர்கள் அரச பஸ்ஸில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை நான் அவதானித்தேன். அவர்கள் அனைவரும், பாதிரியார் (அருட்தந்தை) ஒருவருடன் சரணடைந்தவர்கள். அவர்கள் தொடர்பில், இன்றுவரை எவ்விதத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் வருவார்கள் என நானும் காத்திருக்கிறேன். எனது கணவர் செல்லும்போது, ஒரு விடயத்தினை குறிப்பிட்டார். “நான் அவர்களுடன் போகின்றேன். நீரும் பிள்ளைகளும் என்னுடன் வந்தால், அனைவருக்கும் ஏதும் நடந்துவிடும். எம்மைத் தேட யாரும் இருக்கமாட்டார்கள். அதனால், நீரும் பிள்ளைகளும் தனியே செல்லுங்கள்” என்று குறிப்பிட்டார். அதனால், நானும் பிள்ளைகளும் அவருடன் செல்லவில்லை. அவ்வாறு சென்றிருந்தால் நாங்களும் காணாமல் போயிருப்போம்.

காணாமற்போனோர் விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காக்கின்றது. இன்று எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் ஐயா இருக்கின்றார் என்றால், அதற்குக் காரணம், விடுதலைப் போராட்டம் தான். ஆனால், அவர் அதனை மறந்து செயற்படுகிறார். இன்று நாம் கண்ணீரோடு போராடிக்கொண்டு இருக்கிறோம். எமக்கு ஆறுதல் தெரிவிக்கக் கூட அவர் முன்வரவில்லை.

சர்வதேசமும் அரசாங்கத்தின் கதைக்குச் செவி சாய்க்கின்றது. இன்று 2 வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எமது தலைமைகளும் தலையசைத்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் என நாம் கொண்டுவந்தவர்களும், எமக்கு விரோதமாகவே செயற்படுகின்றனர்.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட எனது கணவர் தொடர்பில் தகவல் வெளியிடப்பட வேண்டும். அதேவேளை, குறித்த பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தொடர்பிலும், உண்மையை வெளிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட எமது கண்ணீருக்கு பதிலளிக்கும் வரை, எமது போராட்டம் தொடரும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

*