21 March 2017 0 Comments Report

விமலின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு..!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தாக்கல் செய்த பிணை விண்ணப்பத்தை, கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான், அவரது விளக்கமறியலை, ஏப்ரல் 3ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், நேற்று (20) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இம்மாதம் 6ஆம் திகதியன்று விமல் எம்.பியினால், எதிராளிக் கூட்டிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை வாசித்த நீதவான், அவற்றை விசேட காரணங்களாக எடுத்துக்கொள்ள முடியாது என அறிவித்தார்.

பொதுச் சொத்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ், ஒருவரைக் கைது செய்யத பின்னர், அல்லது மோசடி தொடர்பில் ஒருவர் சரணடைந்தன் பின்னரே, உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் கையெழுத்திடப்பட்ட சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

எனினும், தான் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அந்தச் சான்றிதழ் சமர்பிக்கப்பட்டதாகவும் விமல் எம்.பி அறிவித்திருந்தார்.

அரச நிறுவனமொன்றில் நட்டம் ஏற்படும் போது அது தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியது அந்த நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி மற்றும் நிறைவேற்று அதிகாரிகளாவர். தன்னை நீண்ட காலத்துக்கு விளக்கமறியலில் வைப்பதற்கு, சிலர் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஆஷு மாரசிங்க இருந்த காலப்பகுதியில், வாடகைக்கு அமர்த்தப்பட்ட 11 வாகனங்களை, எனது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

அப்போது, தனது பிரதியமைச்சராக இருந்த லசந்த அழகியவன்ன தற்போதும் பிரதியமைச்சராக இருக்கிறார். லசந்த அழகியவன்ன, வாகனங்கள் 4ஐப் பயன்படுத்தியமை தொடர்பில், ஒரு வாகனத்தின் சாரதியிடமே வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே கோரப்பட்டிருந்த விசேட காரணங்களைக் கொண்டு தனக்குப் பிணை வழங்குமாறு கேட்டிருந்தார். இவற்றை விசேட காரணங்காக எடுக்க முடியாது என்று நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்குமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டதுடன், விளக்கமறியலையும் நீடித்துடன், 2ஆவது சந்தேகநபரை அன்றையதினதத்தில் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

தேசிய வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சராக இருந்த போது, 2011 – 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனது அமைச்சுக்குக் கீழிருந்த, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தி, 91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


Post a Comment

*