15 May 2017 0 Comments Report

புலிகளின் தோல்விக்கும், அரசின் வெற்றிக்கும் காரணம் என்ன? (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-44) – வி. சிவலிங்கம்

புலிகளின் தோல்விக்கும், அரசின் வெற்றிக்கும் காரணம் என்ன? ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 44)

கிளிநொச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து போர் நடத்திய முறை பற்றிய விபரங்கள் வெளிவரத் தொடங்கின.

உதாரணமாக கிளிநொச்சி பறிபோன பின்னணி பற்றி சோல்கெய்ம் தெரிவிக்கையில்... “இந் நகர வீழ்ச்சிக்கு முதன் நாள் சோல்கெய்ம் புலித்தேவனைத் தொடர்புகொண்டு நிலமைகளை விசாரித்தபோது தாம் பிரச்சனையின்றி செயற்படுவதாக கூறியுள்ளார்.

ஆனால் போரின் நிலமைகள் குறித்து அதிக விபரங்களை நோர்வே தூதரகத்தினருக்குத் தெரிந்திருந்த போதிலும் புலிகள் மீண்டும் வேகத்தோடு திரும்பவார்கள் என ஏரிக் சோல்கெய்ம் மறறும் சிலரும் நம்பினர்.

2009ம் ஆண்டு புது வருடத்தின் பின்னர் நிலமைகள் தெளிவடையத் தொடங்கியது. கிளிநொச்சியின் வடக்குப் புறமாக பரந்தன் பகுதியின் குறுக்கு வீதிகளைக் கைப்பற்ற ராணுவம் முயன்றபோது புலிகள் முல்லைத்தீவை நோக்கிப் பின்வாங்கினர்.

இவை அவர்களின் பலவீனத்தைத் தெளிவாகக் காட்டியது.

2009ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி மனித நடமாட்டம் இல்லாத கிளிநொச்சி நகரத்திற்குள் ராணுவத்தினர் நுழைந்தனர்.

புத்தாண்டு வெடிகள் அமைதியடைந்த நிலையில் கிளிநொச்சிக்குள் ராணுவம் சென்றுள்ளதாக ஜனாதிபதி மகிந்த அறிவிக்க பட்டாசு வெடிகளும் மீண்டும் தொடர்ந்தன.

இந் நிலையில் சில கேள்விகள் எழுகின்றன. அதாவது ஏனைய இலங்கை அரசுகள் புலிகளைத் தோற்கடிக்க முடியாத நிலையில் மகிந்த அரசினால் அது எவ்வாறு சாத்தியமாகியது? என்பதாகும்.

மகிந்தவின் போர் உபாயங்கள் மிகவும் தனித்துவமான சில அம்சங்களைக் கொண்டிருந்ததாக சோல்கெய்ம் கூறுகிறார்.

• எத்தனை ராணுவ வீரர்கள் போர்க் களத்தில் மரணமானார்கள்? என்ற தொகையை தெற்கு மக்களுக்குத் தெரியாமல் மறைக்கத் தீர்மானித்தார்கள். இவ் இழப்புகள் குறித்து பத்திரிகைகள் செய்திகளை வெளியிடவில்லை. ராணுவ மரணச் சடங்குகள் மக்களுக்குத் தெரியாத தூரத்தில் நிறைவேற்றப்பட்டன.

• இலங்கை ராணுவம் புலிகள் பாவித்த அதே தந்திரங்களையும், 71 – 72 களில் ஜே வி பி இனரை ஒடுக்க பயன்படுத்திய வழிமுறைகளையும், 87 – 90 களில் இடம்பெற்ற எழுச்சியை ஒடுக்க சித்திரவதை, கடத்தல், இல்லாதொழித்தல், வெள்ளை வான் கடத்தல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தினர்.

இதன் காரணமாக தெற்கில் காணப்பட்ட புலிகளின் வலைப் பின்னல் பலவீனமாகியது. இதனால் தெற்கில் புலிகளின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன. இவை அங்கிருந்த ராணுவத்தை வடக்கை நோக்கி அனுப்புவதற்கு இலகுவாக அமைந்தது.

• மேற்குலகம் மற்றும் இந்திய அழுத்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்தார்கள். இதற்காக இந் நாடுகள் சீனாவுடன் நடத்தி வரும் போட்டியைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

சீனா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்தார்கள். இந் நாடுகள் ஆயுத விற்பனைக்கு மனித உரிமைக் கட்டுப்பாடுகளை பாரிய அளவில் விதிப்பதில்லை.

• அரசியல் தலையீடற்ற விதத்தில் ராணுவ உயர்மட்ட நியமனங்களில் முன்னேற்றம் காணப்பட்டது. அத்துடன் பாதுகாப்புச் செலவினங்கள் கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டது.

• அமெரிக்கா, இந்தியா ஆகியன வழங்கிய அதிக தரம் வாய்ந்த உளவுத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக புலிகளின் ஆயுதக் கடத்தலை கடற்படைத் தாக்குதல்கள் மூலமாகவும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தொடர்ந்து நெருக்குவதன் மூலமாகவும் அவர்களின் பதில் தாக்குதல்களின் அளவைக் குறைத்தார்கள்.

• அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் போக்கில் ஏற்பட்ட இம் மாற்றங்களுக்குக் காரணம் சமாதானத்தை எட்ட புலிகளுக்கு வழங்கிய அவகாசத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதாகும்.

• ராணுவத்தின் மிக மோசமான உத்திகள். கிட்லர், ஸ்ரலின் ஆகியோர் இழப்புகளைக் கவனத்தில் கொள்ளாது செயற்பட்டது போலவே இவையும் நடந்தேறின.

இவ்வாறான தெளிவான தந்திரோபாயங்களோடு மகிந்த பதவிக்கு வந்ததாக நான் கருதவில்லை. கோதபய ராஜபக்ஸ, சரத் பொன்சேகா போன்றோர் மீதான கொலை முயற்சிகள், மாவிலாறு விடயத்தில் காணப்பட்ட இறுக்கமான போக்கு போன்றன நிச்சயமாக இம் மாற்றத்திற்கான காரணிகளாக இருந்திருக்கும்.

• அரசிற்கு எதிராக தெற்கில் ஊழல், தலையீடு என எழுந்த குரல்கள் லசந்த விக்ரமதுங்க படுகொலை போன்ற செயற்பாடுகளால் ஒடுக்கப்பட்டமை. தமக்கு எதிராக குரல் எழுப்பும் பிரிவினரை ( ஊடகங்கள் உட்பட ) படுகொலை, வெள்ளை வான், நீதிமன்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றால் மௌனமாக்கப்பட்டன.

கடந்தகால அரசுகள் சர்வதேச அரசுகளின் விமர்சனம் குறித்து கவனம் செலுத்தினார்கள். ஊடகங்கள், மக்கள் அபிப்பிராயங்களில் ஏற்படும் தாக்கங்கள் பற்றிக் கவலை அடைந்தார்கள்.

ஊடக தணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இவற்றிற்குப் பொறுப்பாக கண்ணியமான மனிதர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். தலைவர்கள் 21ம் நூற்றாண்டின் போக்கிற்கு அமைவாக செயற்பட்டனர். உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஏனையோரின் எண்ணத்திற்கு ஏற்புடைவாக செயற்பட்டனர்.

• சர்வதேச அழுத்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்தார்கள். இது எவ்வாறு சாத்திமாகியது? ராணுவ மரணச் சடங்குகளை மறைத்தல், எதிரிகளின் கொலைகளை சிங்கள மக்களின் கவனத்திலிருந்து மறைத்தல் போன்றனவற்றால் இவை சாத்தியமாகின.

இச் சம்பவங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தால் இந்தியா இதில் தலையிடாமல் இருந்திருக்கும் என எண்ண முடியாது. உலக அபிப்பிராயத்திலிருந்து தம்மைத் தனிமைப்படுத்த ராஜபக்ஸ அரசு செயற்பட்டது. இலங்கை அரசு பயன்படுத்திய உத்திகள் ஏனைய நாடுகளுக்கு மாதிரியாக அமையும் எனக் கருத முடியாது.

உதாரணமாக இம் மாதிரியான வழி முறைகள் பாலஸ்தீனத்தின் ‘காஸா’ பகுதியில் 2008 – 2009 இல் கையாளப்பட்டன. முடிவில் 2000 பேர் அல்ல 50,000 பேர் இரையானார்கள்.

அரசின் போர் உத்திகள் பற்றித் தெரிவித்த சோல்கெய்ம், புலிகளின் வழிமுறைகள் பற்றியும், ஏமாற்றுகளும் குறித்தும் கூறுவதைப் பார்க்கலாம்.

◊ ராணுவப் பெறுமதி அற்ற விமானப்படைக்கு பல மில்லியன்களை ஏன் செலவு செய்தார்கள்? பல மில்லியன்களை உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களிடம் திரட்டி, உதிரிப் பாகங்களை இறக்கி, விமான ஓடுபாதை அமைத்து விமானத்தை ஓட்டுவது இதுவரை அரசு சாராத அமைப்புகள் முயற்சிக்காத ஒன்றாகும். சாதனைதான்.

◊ இனி பலமான எதிரியுடன் மரபு வழிப் போரை ஏன் நடத்தினார்கள்? சர்வதேச கண்காணிப்பாளர் அவசியப்பட்ட வேளையில் அவர்களை ஏன் வெளியேறுமாறு பணித்தார்கள்?

◊ பிரபாகரனைச் சுற்றிருந்த திறன் வாய்ந்த இளைஞர்கள் தாம் எண்ணுவதை சுயமாகப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. பலர் கொழும்பிற்குச் சென்றவர்களல்ல.

நிச்சமாக புற உலகத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் ராணுவ அடிப்படையிலான பதில் உண்டு எனப் பிரபாகரனைப் பின்தொடர்ந்து நம்பினார்கள்.

ஒருவரைப் பிடிக்கவில்லை எனில் கொலை செய்துவிடுங்கள் என முடிவு செய்வது போலவே நடவடிக்கைகள் அமைந்தன. ராணுவ வழிமுறைகள் உதவியாக அமையலாம். ஆனால் அவை அரசியல் உத்திகளோடு இணைந்து செல்லவேண்டும். அரசியல் வழிமுறையைத் தவிர மாற்று வழிகள் இல்லை.

உத்திகளின் பலவீனம்

பிரபாகரன் ஒரு மேதை என பலரும் கருதினர். ராணுவ வழிமுறைகளை வகுப்பதில் திறன் உள்ளவர் என புலிகள் மட்டுமல்ல இந்தியர், அமெரிக்கர் ஆகியோரும் எண்ணினர்.

ஆனால் 2006ம் ஆண்டின் பின்னர் அவர்கள் சுவருடன் மோதும் நிலைக்குத் தள்ளப்பட்டு, ராணுவ ரீதியிலான பதில் தாக்குதலை அவர்களால் நடத்த முடியவில்லை.

2006ம் ஆண்டிற்கு முன்னர் அரசியல் முயற்சிகள் யாவும் பாலசிங்கத்தினால்தான் ஆரம்பிக்கப்பட்டன என்பதை நாம் இப்போது காண்கிறோம்.

அவரின் பின்னர் அதே ஆற்றல் உள்ளவர்கள் யாரும் இருக்கவில்லை. புலிகளின் ராணுவ உயர் மட்ட உறுப்பினர்கள் எந்தவித உலக புரிதலும் அற்றவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சீனா, அமெரிக்கா, இந்தியா போன்றன தம்மைப்பற்றி என்ன எண்ணுகிறார்கள்? என்ற உலக அறிவு அற்று இருந்தார்கள்.

ஒடுங்கிய பார்வை

அவர்கள் அகன்ற படத்தைப் பற்றிய தவறான கணிப்பைக் கொண்டிருந்தார்கள். புலிகள் கனவுலகத்தில் இருப்பதாக கே பி ஒருமுறை கூறியிருந்தார். சர்வதேச சக்திகளின் செயற்பாடுகளைப் புரிந்துகொள்ளவில்லை.

பி ஜே பி இன் தேர்தல் முடிவுகள், ஐரோப்பிய தெருக்களில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் என்பன அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்தால் அவர்கள் தலையிடுவார்கள் என நம்பினர்.

இவை எதுவும் உண்மையாகவில்லை. அதுமட்டுமல்ல சுத்த பைத்தியகாரத்தனமாக அமைந்தது. தெளிவான அரசியல் புரிதல் இருந்திருப்பின் இந்த உண்மைகள் புலப்பட்டிருக்கும்.

வாசகர்களே!

கிளிநொச்சி வீழ்ச்சியின் பின்னர் அரசாங்கம் சுத்தப்படுத்தும் அலுவல்களைத் தீவிரமாக்கியது. புலிகள் அமைப்பைத் தடைசெய்ததோடு, சிக்கியிருந்த பல ஆயிரம் மக்களை விடுவிக்கும்படியும் கோரியது. மக்களைக் காப்பாற்றினார்களா, அல்லது சிறைப்படுத்தினார்களா?

( அடுத்தவாரம் தொடரும்.. )
-சிவலிங்கம்- தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.

***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….

Post a Comment

*