21 April 2017 0 Comments Report

பனாமா கேட் ஊழல் நவாஸ் ஷெரீப் மீது கூட்டுக்குழு விசாரணை: பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

‘பனாமா கேட்’ ஊழல் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் பல்வேறு நாடுகளில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள தகவல்கள், உலகமெங்கும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த வகையில் பனாமாவின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி கம்பெனிகள் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தின. இந்த ஊழல் ‘பனாமா கேட் ஊழல்’ என அழைக்கப்படுகிறது.

இந்த ஊழலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இதில் அவரது பதவியைப் பறிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி) தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகிய 4 பேர் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆசிப் சயீத் கோசா, குல்சார் அகமது, இஜாஸ் அப்சல்கான், அஜ்மத் சயீத், இஜாஜூல் அசன் ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணையின்போது, இம்ரான்கான், சிராஜூல் ஹக் உள்ளிட்டோர் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நீதிபதிகள் ஆசிப் சயீத் கோசா, குல்சார் அகமது ஆகிய இருவரும் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தீர்ப்பு அளித்தனர்.

ஆனால் இஜாஸ் அப்சல்கான், அஜ்மத் சயீத், இஜாஜூல் அசன் ஆகிய 3 நீதிபதிகளும், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஜே.ஐ.டி. என்னும் கூட்டுப்புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

3 நீதிபதிகள் தீர்ப்பு மெஜாரிட்டி தீர்ப்பு என்ற வகையில், ஏற்கப்படுகிறது. எனவே நவாஸ் ஷெரீப் பதவிக்கு ஆபத்து இல்லை. அவர் பதவியில் தொடரலாம். அவரும், அவரது குடும்பத்தினரும் குற்றவாளிகள் என தீர்க்கப்படவில்லை. அவர்கள் மீது விசாரணை மட்டுமே நடைபெறும்.

இந்த தீர்ப்பையொட்டி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீர்ப்பை அறிவதற்காக பல அரசியல் தலைவர்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

தீர்ப்பை அடுத்து ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் நிருபர்களிடம் பேசுகையில், “3 நீதிபதிகள் ஒரு தீர்ப்பும், 2 நீதிபதிகள் ஒரு தீர்ப்பும் கூறி உள்ளனர். 3 நீதிபதிகள் தீர்ப்புதான் மெஜாரிட்டி தீர்ப்பு. நாங்கள் எந்தவிதமான விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம். இந்த வழக்கை பொறுத்தமட்டில் எங்கள் எதிரிகள் அளித்த ஆதாரங்கள் போதுமானவை அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்” என கூறினார்.

இந்த தீர்ப்பை பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் கொண்டாடிய புகைப்படத்தை நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ரெயில்வே மந்திரி சாத் ரபிக் கருத்து தெரிவிக்கையில், “கூட்டு புலனாய்வுக்குழு விசாரணைக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்) கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். கோர்ட்டு தீர்ப்பு மதிக்கப்படும். பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியும் தீர்ப்பை மதிக்க வேண்டும்” என கூறினார்.

கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை 7 நாளில் அறிவிக்க வேண்டும் என்றும், எப்.ஐ.ஏ. என்னும் மத்திய புலனாய்வு முகமையின் இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரி தலைமை தாங்க வேண்டும் என்றும் மெஜாரிட்டி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

*