29 April 2017 0 Comments Report

ஆயுதப் போராட்டத்தை முதன்முதலில் ஆரம்பித்த பொன். சிவகுமாரன்.. – “புளொட்” தலைவர், சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்.. (அனுபவத்தொடர் பகுதி-1)


ஆயுதப் போராடடத்தை முதன்முதலில் ஆரம்பித்த பொன். சிவகுமாரன்.. – “புளொட்” தலைவர், சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்.. (அனுபவத்தொடர் பகுதி-1)

(தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் -“புளொட்”- தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் “தீபம்” ஊடகத்துக்கு வழங்கிய, அவரது அனுபவம் குறித்து…)

என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சை வழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று மீண்டும் திரும்பிப்பார்த்து, சில சம்பவங்களை எழுதுகிறேன்…

1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தபோது எனக்கு பன்னிரண்டு வயது. அதில் கலந்து கொண்டது தான் முதல் போராட்டம்.

பன்னிரண்டு வயதிலேயே அரசியல்ரீதியான தெளிவுடன் அதில் கலந்து கொண்டேன் என பொய் சொல்லவில்லை. அப்புவுடன் நானும் அதில் கலந்து கொண்டேன்.

அந்தக்காலத்தில் நடந்த பல ஊர்வலங்கள், போராட்டங்களில் அப்புவுடன் கலந்து கொள்வேன். மருதனார்மடம் சந்தியில் இருந்து கச்சேரிவரை இரவு நடந்த தீப்பந்த ஊர்வலம், மாட்டு வண்டி ஊர்வலம் என சிலவற்றை உதாரணமாக சொல்லலாம். இப்படி அப்புவின் பின்னால் சென்று, மெல்லமெல்ல தீவிர அரசியலிற்குள் வந்தடைந்தேன்.

1970 வரையும் எனது அரசியல் என்பது அப்புவின் அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தான்.

1970களின் பின்னர் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறை, தமிழ் தலைவர்களின் சாத்வீக போராட்டங்களிற்கு எதிரான கூட்டு அரசின் தீவிரமான அடக்குமுறைகள் என்பன தமிழர் அரசியலை மாற்றியது.

அதுவரை சாத்வீக போராட்டங்களாக இருந்த தமிழர் அரசியல், தீவிர எண்ணமுடையதாக மாறத் தொடங்கியது. இளைஞர்கள் பலர் இதில் முக்கிய பாத்திரம் வகித்தனர்.

பத்மநாபா, வரதராஜபெருமாள், முத்துகுமாரசுவாமி, அளவெட்டி ஆனந்தன், இறைகுமாரன் போன்ற பல செயற்பாட்டாளர்களின் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட, அவர்களுடன் நானும் பயணிக்க தொடங்கினேன்.

மாவை சேனாதிராஜாவால் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையால் நடத்தப்பட்ட சாத்வீக போராட்டங்களில் நானும் பங்குபற்றினேன்.

ஆயுத நடவடிக்கைகளை முதன்முதல் பொன்.சிவகுமாரன் தான் ஆரம்பித்தார். அவருக்கும் எனக்கும் இடையில் நெருக்கமான நட்பிருந்தது.

தலைமறைவாக இருக்க பாதுகாப்பான இடங்களை ஏற்படுத்துவது, இருப்பிடங்களை மாற்றுவது, ஆயுதங்களை மாற்றுவது என சிவகுமாரனுக்கும், சில நண்பர்களிற்கும் உதவிகள் செய்தேன்.

அப்பு பிரபல்யமான அரசியல்வாதியாக இருந்தது எனக்கு வாய்ப்பாக இருந்தது. அவரது வாகனத்திலேயே இதை செய்வேன்.

சிவகுமாரனிற்கு அப்போது உதவி செய்தவர்கள் மிகச் சிலர்தான். தங்குவதற்கு இடமில்லாமல் மாந்தோப்புகளிற்குள் எல்லாம் படுத்திருந்தார்.

சிவகுமாரன் சிறிய குழுவாக இயங்கினார். அந்த காலகட்டத்தில் குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் ஒரு குழுவாக செயற்பட்டார்கள். “புதிய தமிழ் புலிகள்” என்ற பெயரில் ஒரு குழுவும் செயற்பட்டது.

“புதிய தமிழ் புலிகளிற்கு” செட்டி தனபாலசிங்கம் தலைவராக இருந்தார். அப்போது தம்பி (பிரபாகரன்) அதில் முக்கியமானவராக இருந்தார்.

அந்த அமைப்புடனும் நட்புறவில் இருந்தேன். பல சந்தர்ப்பங்களில் உதவிகளும் செய்திருக்கிறேன்.

செட்டி தனபாலசிங்கமும் வேறு சில தமிழ் இளைஞர்களும் கைது செய்யப்பட்டு, அனுராதபுரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சமயத்தில், செட்டி உள்ளிட்ட நால்வர் தப்பித்து வந்தார்கள்.

செட்டியும் இன்னொருவரும் என்னிடம் உதவி கேட்டு வந்தனர். அவர்கள் மறைந்து பாதுகாப்பாக தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்திருந்தேன்.

பின்னர் 1975 ஆம் ஆண்டு, செட்டியை சுன்னாகம் பொலிஸ் பகுதியில் வைத்து பிடித்து விட்டனர். நான்தான் தங்குமிட ஏற்பாடுகளை செய்ததாக செட்டி விசாரணையில் சொல்லி விட்டார்.

அப்பொழுது இன்ஸ்பெக்டர் ஜீவரட்ணம் (பின்னாளில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்து ஓய்வுபெற்று மரணித்தவர்) சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில் பொறுப்பதிகாரியாக இருந்தார். இந்த பகுதியில் ஒரு பிரபல்ய தலைவராக இருந்தவர் என்ற அடிப்படையில் அப்புவிடம் இன்ஸ்பெக்டர் மரியாதை வைத்திருந்தார்.

இன்ஸ்பெக்டர் அப்புவிடம் வந்து சொன்னார், “இந்த விவகாரத்தில் உங்கள் மகனும் தொடர்புபட்டதாக செட்டி விசாரணையில் கூறியுள்ளார். நிலைமை சிக்கலாக உள்ளது. நான் இந்த விசாரணை அறிக்கையை கொழும்பிற்கு அனுப்புவதற்கு முன்னர் மகனை எங்காவது அனுப்பி விடுங்கள்“ என..

அத்துடன் கொழும்பிற்கு அறிக்கையை அனுப்புவதையும் தாமதப்படுத்தினார். இதற்குள் என்னை குடும்பத்தினர் இலண்டனிற்கு அனுப்பி விட்டனர்.

இந்தக் காலப்பகுதியில் “புதிய தமிழ்ப்புலிகள்” (NTT) என்ற அமைப்பு “தமிழீழ விடுதலைப் புலிகள்” (LTTE) என்ற பெயர் மாற்றம் பெற்று ஒரு அமைப்பு வடிவம் எடுத்தது.

அதன் முதல் தலைவராக உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் நில அளவையாளராக செயற்பட்டதுடன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளை தலைவராகவும் இருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளாக இயங்கத் தொடங்கிய பின், இந்த அமைப்பிற்காக இலண்டனில் ஒரு கிளையை அமைத்தோம்.

கிருஸ்ணன், குகன், நான் ஆகிய மூவரும் இதை ஆரம்பித்தோம். அதுதான் விடுதலைப்புலிகளின் முதலாவது சர்வதேச கிளை.

இந்த சமயத்தில் அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் இருந்தார். அவரில் எங்களிற்கு ஈர்ப்பிருந்தது.

அதேபோல ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பும் அவரை தம்முடன் இணைக்க முயன்றது. அந்த அமைப்பின் உத்தமன் அடிக்கடி பாலா அண்ணையுடன் பேசினார்.

நாங்களும் விடாமல் அவரை சந்தித்து பேசினோம். இறுதியில் அவர் எங்களுடன் (விடுதலைப் புலிகளுடன்) இணைந்து செயற்பட தொடங்கினார்.

புலிகள் முதன்முதலில் பத்து கொலைகளிற்கு உரிமை கோரி, வீரகேசரிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர்.

பாராளுமன்றத்தில் இருந்த எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் வைத்தே அந்த கடிதத்தை ஊர்மிளா தட்டச்சு செய்தார். அவர் விடுதலைப்புலிகளின் தீவிரமாக செயற்பாட்டாளர்.

இரத்மலானையில் அவ்ரோ விமானம் தகர்க்கப்பட்டது. இதை வெளிநாட்டில் இருந்து உரிமை கோரினால், அமைப்பைப் பற்றிய பிரமாண்ட அபிப்பிராயத்தை உருவாக்கலாம் என்பதற்காக இலண்டனில் இருந்து “விடுதலைப்புலிகள் தான் அதை செய்தார்கள்“ என உரிமை கோரினோம்..

தொடரும்…. (பிரபாகரனுக்கும், உமா மகேஸ்வரனுக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரியக் காரணமென்ன? என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்..)

***** முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்….
http://www.athirady.com/tamil-news/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8 D


Post a Comment

*