1 May 2017 0 Comments Report

பிரபாகரனுக்கும், உமா மகேஸ்வரனுக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரியக் காரணமென்ன? – “புளொட்” தலைவர், சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்.. (அனுபவத்தொடர் பகுதி-2)


பிரபாகரனுக்கும், உமா மகேஸ்வரனுக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரியக் காரணமென்ன? – “புளொட்” தலைவர், சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்.. (அனுபவத்தொடர் பகுதி-2)

(தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் -“புளொட்”- தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் “தீபம் ஊடகத்துக்கு வழங்கிய, அவரது அனுபவம் குறித்து…)

1980ம் ஆண்டு தம்பிக்கும் (பிரபாகரன்), தலைவர் உமாமகேஸ்வரனிற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டது. இதை சரிசெய்ய அப்போது இலண்டனிலிருந்த நானும், பாலசிங்கமும் ஒரு முயற்சி செய்தோம்.

நான் யாழ்ப்பாணம் வந்து தம்பியுடன் பேசி ஒற்றுமைப்படுத்த முயற்சித்தேன். தம்பியுடன் பேசிய போது, ஊர்மிளாவிற்கும் தலைவர் உமாமகேஸ்வரனிற்கும் இடையில் இருந்த காதல் விவகாரம் இயக்க நடைமுறையை மீறியதென்றார்.

அப்போது புலிகள் அமைப்பின் விதிகளில் ஒன்று, காதலிக்கவோ, திருமணம் செய்யவோ கூடாதென்பது.

“காதலும், திருமணமும் மனித தேவைகள், இதை பிரச்சனையாக்காமல் விடலாம்” என்ற என் அபிப்பிராயத்தை தம்பியிடம் சொன்னேன்.

ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அந்த சமரச முயற்சி வெற்றி பெறவில்லை.

அப்போது தலைவர் உமாமகேஸ்வரன் இந்தியாவில் இருந்தார். பாலசிங்கம் இந்தியா சென்று அவருடன் பேசினார். அதுவும் வெற்றியளிக்கவில்லை.

தலைவர் உமாமகேஸ்வரனுடன் நான் பின்னர் பேசியபோது, “ஊர்மிளாவுடன் காதல் விவகாரமே இல்லை, நல்ல இயக்க தோழி மட்டுமே” என்றார்.

பின்னர் ஈரோஸ் அருளரும் ஒரு சமரச முயற்சி செய்தார். அதன்படி, “தமிழீழ விடுதலைப்புலிகள்” என்ற பெயரை யாரும் பாவிப்பதில்லை” என்ற முடிவிற்கு வந்தார்கள்.

இதன் பின்னர்தான் புலிகள் அமைப்பை விட்டுவிட்டு, குட்டிமணி, தங்கத்துரையுடன் ரெலோ அமைப்பிடன் இணைந்து செயற்பட தொடங்கினார் பிரபாகரன்.

தலைவர் உமாமகேஸ்வரன் “புளொட்டை” ஆரம்பித்தார்.

ஒருநாள் தம்பி எனது இதே வீட்டிற்கு (யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ளது) வந்தார். அவரிடம் ஒரு புது ரிவோல்வர் இருந்தது. அதை எடுத்துக்காட்டி “அண்ணை தமிழீழ கோரிக்கையை யார் கைவிட்டாலும் இதுதான் பதில் சொல்லும். அது நானாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி“ என்றார்.

வேறு தலைவர்கள் யாரும் செய்யாத இரண்டு விடயத்தை தம்பி செய்தார். “நம்பிய கொள்கையை கடைசிவரை கைவிடவில்லை. முழு குடும்பத்தையும் அதற்காக பலி கொடுத்தார்”. இந்த இரண்டு விடயங்களும் தான் எனக்கு தம்பி மீதான மதிப்பை உயர்த்தியது.

எனதுஅப்புவிற்கும், தம்பிக்குமிடையில் ஒரு ஈர்ப்பிருந்தது. நான் “புளொட்” அமைப்பில் இணைந்து செயற்பட தொடங்கிய பின்னரும், தம்பி எனது வீட்டிற்கு அடிக்கடி வருவார். வந்து அப்பமும், பாலும் சாப்பிட்டு விட்டு போவார்.

நான் இலண்டனில் பன்னாட்டு நிறுவனமொன்றில் உதவிக் கணக்காளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

1983 இல் அந்த பணியை விட்டுவிட்டு, முழுநேரமாக இயக்கப்பணியில் ஈடுபடத் தொடங்கினேன்.

இந்த காலப்பகுதியில் வெளிநாடுகளில்தான் பணியாற்றினேன். அல்ஜீரியா, லெபனான், லிபியா போன்ற நாடுகளில் அதிக தொடர்புகளை வைத்திருந்தோம்.

தலைவர் உமாமகேஸ்வரன் முதலில் இந்தியாவிலிருந்து லெபனான் செல்லும் போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது..

அப்போது சிரியாவிற்கு நேரடியாக செல்ல விசா எடுப்பது கடினம். அதனால் டெல்லியிலிருந்து லண்டன் செல்ல ரிக்கெற் எடுப்போம். ரான்ஸ்சிற் டமாஸ்கஸ். அங்கு இறங்கி, காசு கொடுக்க விசா அடித்து உள்ளே விடுவார்கள்.

லண்டனில் சிறினி என்பவர் இருந்தார். அவருக்கு சிரியா செல்ல விசா இருந்தது. அவர் இந்தியா வந்து, தனது பாஸ்போர்டை தலைவர் உமாவிடம் கொடுக்க, அதை பாவித்து தலைவர் உமா டமாஸ்கஸ் சென்றார். பின்னர் சிறினி தலைவர் உமாவின் பாஸ்போர்ட்டில் டமாஸ்கஸ் சென்று, தனது பாஸ்போர்டை வாங்கிக் கொண்டு இலண்டன் சென்றார்.

டமாஸ்கஸில் ரான்ஸ்சிற்றில், “காசு கொடுக்க உள்ளே விடுவார்கள்” என்பதை தலைவர் உமா தான் கண்டுபிடித்தார். அப்போது இந்திய மக்களிடம் ஈழத்தமிழ் இயக்கங்களில் நிறைய அபிமானமிருந்தது. விமானநிலைய அதிகாரிகளும் எங்களை கண்டும் காணாமலும் விட்டுவிடுவதே, இவ்வளவு வாய்ப்புக்களை ஏற்படுத்தியது.

யசீர் அரபாத்தின் தலைமையில் இயங்கிய பற்றா அமைப்புத்தான் முதன்முறையாக தமிழ் ஆயுத இயங்கங்களிற்கு பயிற்சியளித்தது. இது 1977 இல் நடந்தது. ஈரோஸ் இயக்கத்தின் இரட்ணசபாபதியும், ராஜிசங்கரும் இதனை ஒழுங்கு செய்தனர்.

அப்போது இலண்டனில் இருந்த பத்மநாபா, சுரேஷ் பிரேமச்சந்திரன் இருவரும் நேரடியாக அங்கு பயிற்சிக்கு வந்தனர். அப்போது புலிகளில் இருந்த தலைவர் உமாமகேஸ்வரன், பிரபாகரன் இருவரையும் பயிற்சிக்கு அழைத்தனர். தலைவர் உமாமகேஸ்வரனும், விச்சுவேஸ்வரனும் பயிற்சிக்கு சென்றனர்.

லெபனானில் பி.எவ்.எல்.பி அமைப்புடன் (popular front for the liberation of palestine- லெபனானில் டொக்ரர் ஹபாஸின் தலைமையில் இயங்கியது) புளொட்டிற்கு தொடர்பு, மகாஉத்தமன் மூலம் ஏற்பட்டு, லெபனானில் நூறுபேர் வரையில் அங்கு சென்று பயிற்சி பெற்றார்கள்.

தொடரும்…. (தமிழர் போராட்டம் பின்னடையக் காரணமென்ன? இந்தியாவின் பங்கு என்ன?? என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்..)

***** முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்….
http://www.athirady.com/tamil-news/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8 D


Post a Comment

*