3 May 2017 0 Comments Report

தமிழர் போராட்டம், பின்னடையக் காரணமென்ன? இந்தியாவின் பங்கு என்ன?? – “புளொட்” தலைவர், சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்.. (அனுபவத்தொடர் -இறுதி-) VIDEO


தமிழர் போராட்டம் பின்னடையக் காரணமென்ன? இந்தியாவின் பங்கு என்ன?? – “புளொட்” தலைவர், சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்.. (அனுபவத்தொடர் -இறுதி-)

(தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் -“புளொட்”- தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் “தீபம் ஊடகத்துக்கு வழங்கிய, அவரது அனுபவம் குறித்து…)

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆலோசகராக இருந்த ஜி.பார்த்தசாரதியை 1983இல் இனக்கலவரத்தின் பின் சந்தித்தேன். எனது தந்தையாருக்கும் அவருக்குமிடையில் நெருங்கிய உறவிருந்ததன் காரணமாக, என்னுடனும் நல்ல உறவில் இருந்தார்.

சந்தித்த முதல் நாளிலேயே சொன்னார், “சித்தார்த்தன் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இந்தியா ஒருபோதும் ஈழம் உருவாகுவதை அனுமதிக்காது. ஆகவே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை பெற முயற்சியுங்கள்“ என.


“புளொட்” அப்போது பெரிய இயக்கமென்பதால், புளொட்டின் வளர்ச்சியை இந்தியா கண்ணும் கருத்துமாக இருந்து மட்டுப்படுத்தியது. எமது இரண்டு ஆயுத கொள்களன்களை சென்னையில் கைப்பற்றி, ஆயுத வரவை தடுத்திருந்தார்கள். இயக்கங்களின் ஆயுத வரவை மட்டுப்படுத்தி வைத்திருக்கவே இந்தியா விரும்பியது.

சிரியாவிலும் இதனை பார்த்திருக்கிறேன். சிரியாவிலிருந்து லெபனானிற்குள் நுழையும் போராளிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து, மட்டுப்படுத்திய அளவில்தான் அனுமதிப்பார்கள்.

அதை மீறி போவதென்றால் மலைப்பாதைகளால் செல்லும் கள்ளப்பாதையால்தான் போக வேண்டும். நானும் அப்படியான பாதைகளிற்குள்ளால் தான் லெபனான் சென்றேன்.

இந்தியாவின் இப்படியான கட்டுப்பாட்டை மீறி புளொட்டால் வளர முடியவில்லை. ஆனால் தம்பி அந்த சவாலை கடந்து, புலிகளை பிரமாண்டமாக கட்டியெழுப்பியது உண்மையில் பெரிய விடயம்.

பங்களாதேஷை போல இலங்கையில் இந்தியாவின் தலையீடு இருக்குமென அந்தக் காலத்தில் பெரும்பாலானவர்கள் நம்பினார்கள்.

ஆனால் தனது நலன்கள், தேவைகளிற்குள் நமது விவகாரத்தை சம்பந்தப்படுத்தித் தான் எந்தநாடும் சிந்திக்கும்.

இந்த அரசியலை நாம் சரியாக புரிந்து, அதற்கேற்ப செயற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் நமது பல நடவடிக்கைகள் இந்தியாவை தள்ளிவைத்து விட்டது.

ராஜீவ் கொலை, புளொட் இயக்கம் வெளியிட்ட வங்கம் தந்த பாடம் நூல் என்பன இந்தியாவை நிறைய அதிருப்திப்பட வைத்திருந்தது.

2009 இல் இந்தியா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும்.

இந்தியா தலையிட்டு யுத்தத்தை நிறுத்துமோ என்ற பயம் மகிந்த, கோத்தபாய ஆகிய இருவரிடமும் இருந்தது.

தேர்தல் காலத்தில்கூட இந்தியா அந்த அழுத்தத்தை கொடுக்காததற்கு, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை விட்டு இந்தியா தள்ளிச் சென்றது தான் காரணம்.

பலர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சம்பந்தனில் பிழை சொல்கிறார்கள். சம்பந்தனின் நிலைப்பாட்டை கண்மூடித்தனமாக நாங்களும் ஆதரிப்பதாக சொல்கிறார்கள்.

சம்பந்தன் அண்ணையின் சில முடிவுகளில் விமர்சனம் இருக்கலாம், அங்கத்துவ கட்சிகளுடன் ஆலோசனை செய்யாமல் நினைத்ததை செய்கிறார்கள் என்ற அதிருப்திகள் இருந்தாலும், புதிய அரசியலமைப்பு திருத்தம் உருவாக்கப்படும் இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

எங்களின் ஒற்றுமையின்மையை சாட்டாக கூறி, சிங்கள ஆட்சியாளர்கள் தீர்வு முயற்சிகளிலிருந்து பின்வாங்கலாம்.

தென்னிலங்கை அரசியலை நீண்டகாலமாக பார்த்து வருபவன் என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் நியாயமான பிரச்சனைகளை தீர்க்கும் நீண்டகால தீர்வை இந்த அரசு வழங்குமென்ற நம்பிக்கை என்னிடமில்லை.

இருந்தாலும், புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை நாம் குழப்பி விட்டோம் என்று அரசும், சர்வதேசமும் குற்றம் சுமத்துவதற்கு பாத்திரவாளியாக இருக்கக் கூடாதென்பதே என்னுடைய கருத்து.
(நன்றி -தீபம்)

***** முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்….
http://www.athirady.com/tamil-news/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8 D


Post a Comment

*