;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (18.01.2018)

0


எம்.எச்.எம்.சல்மான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையிலான தேர்தல் கூட்டு உடன்படிக்கையின்படி ஐ. தே. கட்சியினால் இரு தேசிய பட்டியல் பாராளுமன்ற இடங்கள் ஶ்ரீ ல. மு. காங்கிரஸுக்கு வழங்கப்பட்டிருந்தன.

அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார் எம்.எச்.எம்.சல்மான்.

100 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது; கல்முனையில் சம்பவம்

100 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கல்முனை வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் பஸ் ​நேரப் பதிவாளர், கல்முனை பஸ் நிலையத்திற்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னால் வருகின்ற பஸ்களால் இடையூறு இன்றி தமது பஸ்களை செலுத்துவதற்கு தேவையான வசதியை செய்து தருவதற்காக அவர் இவ்வாறு இலஞ்சம் பெற்றுள்ளார்.

இவர் பல காலமாக தனியார் பஸ்களிடமிருந்து இவ்வாறு இலஞ்சம் பெற்று வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சில வீதிகள் நாளை முதல் மூடப்படும்.!

கொழும்பின் சில பகுதிகளில் நடைபெற்று வரும் நிலத்தடி நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், கொட்டாஞ்சேனை முதல் இப்பாவத்தை வரையிலான இராமநாதன் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய குறித்த வீதி நாளை இரவு 9 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை 22 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கோட்டையிலிருந்து செல்லும் வாகனங்கள் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தை வழியாக புளுமெண்டல் வழியாக மாதம்பிட்டி சென்று ஜேம்ஸ் வீதியை சென்றடைய முடியும் என்பதோடு,

முகத்துவாரத்திலிருந்து கோட்டை நோக்கி செல்லும் வாகனங்களும் மேற்குறிப்பிட்ட வீதியினை இருவழி போக்குவரத்தாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + seventeen =

*