;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!! (18.01.2018)

0


நானு-ஓயாவில் கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது!!!

நுவரெலியா – நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டிய நகரத்தில் நீண்டகாலமாக கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

இதன்போது கொள்கலன்கள், மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருட்களையும் விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட கசிப்பு, கொள்கலன்களில் நிரப்பப்பட்டு நிலக்கீழ் குழிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

கசிப்பு விற்கும் தொழிலை இவர்கள் மேற்கொள்வது குறித்து முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, இவர்களை பலமுறை எச்சரித்தாகவும் ஆனால், அவர்கள் தொடர்ந்தும் இச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததால் விசேட அதிரடி படையினரின் உதவியுடன் இச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

சைட்டம்: மீண்டும்…!

சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியை நிலைநிறுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை சைட்டம் தொடர்ச்சியாக நடத்தி வருவதாகவும் கூறி, எதிர்வரும் 25ஆம் திகதி மருத்துவ பீட மணவர் சங்கம் நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து, மேற்படி சங்கத்தின் அமைப்பாளர் ரயன் ஜெயலத் தெரிவித்ததாவது:

‘‘நவம்பர் 8ஆம் திகதி சைட்டம் கல்லூரியை முடக்குவதாக அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் இது வரையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சைட்டம் கல்லூரியை அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டமும் தோல்வியடைந்துள்ளது.

“தடை செய்வதாகக் கூறப்பட்ட கல்லூரி இன்று மீண்டும் பழையபடி இயங்க ஆரம்பித்துள்ளது. இதை எதிர்த்தே 25ஆம் திகதி மீண்டும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட தபால்மூல வாக்காளர்களின் விவரம் வெளியீடு

உள்ளூராட்சி தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் 1958 பேர் தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்ஆணையாளர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் கடந்த 12 ஆம் திகதி அஞ்சல் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாருக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்குப்பதிவு இடம்பெறும்.

ஏனைய தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு 25 ஆம் 26 ஆம் திகதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இவற்றில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு பெப்ரவரி மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் தமது வாக்கைப் பதிவு செய்ய முடியும்.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கரைதுறைப்பற்று புதுக்குடியிருப்பு துணுக்காய் மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைக்குமான தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 72961 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாகவும் இவர்களுக்காக 134 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்ய முடியும்.

வாக்கு எண்ணும் பணிகள் வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதுடன், இறுதியாக மாவட்டச் செயலகத்துக்கு வாக்குகள் எடுத்துவரப்பட்டு சபைகளுக்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 13 =

*