;
Athirady Tamil News

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (19.01.2018)

0


தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை – வடக்கு முதல்வர்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் ஜனநாயக சூழ்நிலை விருத்தியடைந்திருப்பதில் சந்தேகம் இல்லை. வளமிக்க பெருமளவான தனியார் காணிகள் படையினர் வசம் இருக்கின்றன. யுத்தம் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகளின் பின்னரும் மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள் விடுவிக்கப்படாதிருக்கின்றன.

மீனவர்களது பிரச்சினைகள், காணாமல் போனோர் விடயம், அரசியல் கைதிகளின் விடயம் என பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாதுள்ளன. அத்துடன் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை.

வடக்கு மாகாண சபை தமது பொறுப்புகளை நிறைவேற்றி இருக்கின்ற போதும், வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் மீள அனுப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் பயங்கரவாத தடை சட்டம் இன்னும் மாற்றி அமைக்கப்படாதுள்ளது. அரசாங்கம் வாக்குறுதி அளித்தமைக்கமைய குறித்த சட்டத்தை ரத்து செய்வது அவசியமாகும்” எனக் கூறினார்.

மைத்திரியின் நாடகம் மிகச்சிறப்பானது.! -மஹிந்த ராஜபக் ஷ

ஜனாதிபதியின் நாடகம் இன்று மிகச்சிறப்பாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஊழல் வாதிகளை தண்டிப்பதாக மேடையில் சவால் விடுத்தாலும் அமைச்சரவையில் ஊழல் வாதிகளுடன் கைகோர்த்தே ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

கோதபாய ராஜபக் ஷவின் வேலைத்திட்டங்களை இலங்கை மக்கள் எவரும் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டதின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த காலங்களில் கொழும்பு மிகவும் அழகான பராமரிக்கப்பட்டது. எமது ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் செயற்திட்டங்ககளின் கீழ் மிகச்சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. கோத்தாபய ராஜபக் ஷவின் வேலைத்திட்டங்கள் எதையும் இலங்கை மக்கள் எவரும் மறந்துவிடக்கூடாது.

எனினும் இன்று கொழும்பின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. அபிவிருத்திகள் அனைத்துமே தடைப்பட்டுள்ளது. சரியான வழிநடத்தல் ஒன்று இல்லாமையே இதற்குக் காரணமாகும்.

ஆகவே இப்போது மக்கள் எடுக்கும் தீர்மானமே அடுத்த கட்டமாக நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்ல ஆரம்பமாக அமையும். மக்கள் விட்ட தவறை சரிசெய்யும் இன்னொரு வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.

அதில் மக்களின் தீர்மானமே நாம் எமது போராட்டத்தை அரசாங்கத்திட்கு எதிராக மாற்றியமைக்கவும் அடிப்படையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 241 முறைப்பாடுகள்; 21 வேட்பாளர்கள் கைது

நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக இதுவரை 241 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

168 தேர்தல் முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் சம்பந்தமாக 73 முறைப்பாடுகளும் அதில் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பேராதனை, எம்பிலிப்பிட்டிய, நிட்டம்புவ, சேருநுவர, களுத்துறை வடக்கு, மீப்பே மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் நிலையங்களில் 07 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதேவேளை கடந்த டிசம்பர் 09ம் திகதி முதல் இன்று வரையான காலத்திற்குள் தேர்தல் முறைப்பாடுகளுக்கு அமைவாக 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 21 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்று பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடம் அறிமுகம்

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கையில் உள்ள மாணவர்களின் மொழி ஆற்றலை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் காணப்படும் சகல மொழி மூலமான பாடசாலைகளிலும் முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடத்தை கற்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மாணவர்களிடத்தில் ஆரம்பத்திலிருந்தே மொழி ஆற்றலை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்ட இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மற்றும் இரண்டுக்குரிய வகுப்புக்களில் ஆங்கில பாடத்தை அறிமுகம் செய்வதற்கு கல்வி அமைச்ச தீர்மானித்துள்ளது.

இவ்வாறு ஆரம்ப வகுப்புக்களில் ஆங்கில பாடவிதானத்தை கற்பதற்கு தேவையான பாடப்புத்தங்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக அமுல் படுத்துவதற்கான செயற்திட்டங்கள் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளன.

விஷேட செயற்திட்டங்கள் மூலம் முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலக்கல்வி கற்பிக்கப்படவுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு விஷேட பயிற்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − five =

*