;
Athirady Tamil News

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-6..!! (19.01.2018)

0


மண்டைத் தீவு கடலில் மிதந்து வந்த மர்மப் பெட்டி

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் மிதந்து வந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று இன்று மாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரப் பலகையினாலான பெட்டியில் ஆயுதங்கள் காணப்படலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடலில் மிதந்து வந்த இப்பெட்டி தொடர்பாக மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த மர்மப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மர்ம பெட்டி தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வல்லுறவுக் குற்றச்சாட்டில் கொழும்புத்துறை நபருக்கு சிறை

பெண்ணைக் கடத்தி வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தின் பேரில், யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையைச் சேர்ந்த குற்றவாளியொருவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தீர்ப்பை, யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்தார்.

2011ஆம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும் ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, போதுமான சாட்சியங்களை மன்றில் நெறிப்படுத்த அரச தரப்பு சட்டத்தரணிகள் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்கலை விண்ணப்பங்களுக்கான கால எல்லை நீட்டிப்பு

2017 – 2018ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்கும் கால எல்லை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாணவர்களின் நலன் கருதி இந்தக் கால அவகாசம் மேலும் ஏழு நாட்களால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடக விண்ணப்புக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக தகவல்களை 1919 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் 6,50,000 வழக்குகள்

தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு பெற்றுத் தரப்படும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பலங்கொடையில் நேற்று (18) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாடளாவிய ரீதியில் சுமார் 650,000 வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளன. இந்த வழக்குகள் குறித்து போதிய கவனம் செலுத்தப்படும்.

“குற்றவாளிகளுக்கும் கொலையாளிகளுக்கும் உரிய தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டியது நீதிமன்றங்களினது கடமை. ‘சில் துணி’ விவகாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் எவ்வாறான தீர்ப்பு வழங்கப்பட்டதோ, அதேபோன்று ஏனைய வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை விரைவில் பெற்றுத் தரப்படும்.”

இவ்வாறு அவர் அங்கு உரையாற்றினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*