;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!!

0


வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து இராதலை வழியாக ஐந்து தோட்டப் பகுதிகளுக்கு செல்லும் சுமார் இரண்டு கிலோமீற்றர் வரையிலான பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, அக்பகுதி மக்கள் ​இன்று, எதிர்ப்பு பேரணி, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

இதன்போது, 400க்கும் மேற்பட்டோர் விதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன், எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறு, பேரணி ஒன்றையும் நடத்தினர்.

“நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரதாலை சந்தியிலிருந்து இப்பொலிஸ் பிரதேசத்தில் காணப்படும் மட்டுக்கலை தோட்ட இரு பிரிவுகள், கிலைண்டன், சென்கூம்ஸ் கீழ் பிரிவு மற்றும் மேல் பிரிவு ஆகிய 5 தோட்டப் பகுதிகளுக்கு நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து பயணிக்க இலகுவான சுமார் 2 கிலோமீற்றர் வரையான பிரதான வீதி காணப்படுகின்றது.

“இந்த வீதி கடந்த பல வருடகாலமாக சீர்த்திருத்தப்படாமல் குன்றும் குழியுமாகிய நிலையில் மக்கள் பாவணைக்கு உதவாமல் காணப்படுகின்றது.

“இது தொடர்பில், அரசியல்வாதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தோட்ட கம்பியை நிர்வாகங்கள் என பலரிடமும் பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டும் வீதியின் அவலநிலை மேலும் தொடர்ந்துள்ளதே தவிர, புனரமைக்கப்படவில்லை.

“இந்த நிலையில் கடந்த பொது தேர்தலின் போதும் கூட பிரதேசவாசிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நுவரெலியா மாவட்ட மக்களை பிரதநிதித்துவப் படுத்தும் பிரபல கட்சி ஒன்றின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஒருவர் முன்வந்து இவ்வீதியை செப்பனிட கல், மணல் என கொண்டு வந்து குவித்துள்ளார்.

“ஆனால், ஆட்சி மாற்றம் மற்றும் பிரதேசவாசிகளின் உள்ளக கட்சி பிரச்சினையால் காலப்போக்கில் கொண்டு வந்து கொட்டிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது” என ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.

நகரின் அசுத்தமான சூழலை வேடிக்கை பார்க்கிறதா மன்னார் நகர சபை ? : மக்கள் விசனம்

மன்னார் நகரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துக்கு பின்புறமாக அசுத்தமான சூழல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துடன் பல உணவகங்கள் உள்ளன இந்த உணவகங்களுக்குப் பின்னால் மிகவும் அசுத்தமான சூழல் காணப்படுவதாகவும் இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் கிருமிகள் பரவுவதாகவும்இ டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக உள்ளதாக மக்கள் தெரிவிப்பதோடு இது தொடர்பில் வேடிக்கை பார்க்கும் மன்னார் நகரசபை எந்த வித அக்கறையும் இன்றி செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இவ் விடயம் தொடர்பில் மன்னார் நகரசபை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

வழக்குகளுக்கு மூன்று வருடங்களுக்குள் தீர்ப்பு! சொல்கிறார் பிரதமர்

எந்தவொரு வழக்கின் தீர்ப்பும் மூன்று வருடங்களுக்குள் வழங்கப்படவேண்டும் என்ற புதிய திருத்தத்தை சட்டத்துறையில் அமுல்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஹோமாகமயில் நேற்று (19) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஊழல்வாதிகள் மீது வழக்குத் தொடர்ந்தாலும் அது எட்டு வருடங்கள் வரை முடிவடையாது என்று கூறுகிறார்கள். இதற்காகவே, புதிய சட்ட திருத்தம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளோம்.

“அதன்படி, பொலிஸ் ஆவணங்களை நீதிபதிகளே நேரடியாகச் சரிபார்த்து அவற்றை உச்ச நீதிமன்றம் வரை அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பப்படும் வழக்குகளை மூவர் அடங்கிய அமர்வு விசாரணை செய்யும். ஒத்திவைப்புகள் எதுவுமின்றி, அடுத்தடுத்த நாட்கள் தொடர்ச்சியாக இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும்.

“தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிமன்றங்களையும் உருவாக்கி வழக்குகளை விசாரணை செய்ய வழிவகை செய்யப்படும். இதன்மூலம், எந்தவொரு வழக்கிலும் ஆகக் கூடியது மூன்று வருடங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்.”

இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − one =

*