;
Athirady Tamil News

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (22.01.2018)

0


24 மணித்தியாலங்களில் இரு வேட்பாளர்கள் உட்பட 20 பேர் கைது

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரங்கள் தொடர்பில், இரு வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறிய 11 சம்பவங்கள் தொடர்பிலும், தேர்தல் தொடர்பான 21 முறைப்பாடுகளுக்கு அமையவும் இவர்கள் கைதாகியுள்ளனர்.

இதற்கமைய, கடந்த 9ம் திகதி முதல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்ட 95 சம்பவங்களும் தேர்தல் முறைப்பாடுகள் 212ம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.

மேலும், இது தொடர்பில் 27 வேட்பாளர்கள் உள்ளிட்ட 258 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை வந்தார் சிங்கப்பூர் பிரதமர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடவுள்ளார்.

பாலை மரங்களுடன் ஒருவர் கைது

பாலை மரங்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற நபரொருவரை மடுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார், மடுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரண்டாம் கட்டைப் பகுதியில் வைத்தே குறித்த நபர் பாலை மரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடுப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலினடிப்படையிலேயே நேற்று மாலை குறித்தநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மடுப்பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு என வெளியான செய்தி உண்மை இல்லை

கடந்த 18 ஆம் திகதி அமைச்சர் மங்கள சமரவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தக பொருட்கள் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாசிக்கருவாடு , செத்தல் மிளகாய் உள்ளிட்ட பலசரக்கு வகைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை நடைமுறைப்படுத்தும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை மாத்திரமே வர்த்தமானி அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டது.

இதற்கமைவாக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பொருட்கள் வரி அதிகரிக்கப்பட மாட்டாது.

அத்துடன் எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்கு நிலவும் விலைகளுக்கு அமைய இந்த பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்யமுடியும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் இரண்டும் சபையில் நாளை

சாபாநாயகர் கரு ஜெயசூரியவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ள பிணைமுறிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பான 34 தொகுதிகள் அடங்கிய விசாரணை அறிக்கை ஆகியன நாளையதினம் சபையில் உத்தியோக பூர்வமாக சமர்ப்பிப்பதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த அறிக்கைகள் மீதான விவாதத்தினை உடனடியாக நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் அழுத்தமளித்த போதும் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டமையால் அது குறித்து இணக்கப்பாட்டினை எட்டுவதற்காக மீண்டும் நாளைமறுநாள் புதன்கிழமை கட்சித்தலைவர்கள் கூட்டத்தினை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*