“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!! (22.01.2018)

3 வருடத்தில் நாளாந்த செலவு 3 பில்லியன் ரூபாய்
தற்போதைய அரசாங்கம் கடந்த 3 வருடத்திற்குள் 3000 பில்லியன் ரூபாய் கடனைப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாளொன்றிட்கு 3 பில்லியன் ரூபாவை அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே நாமல் இதனைப் பதிவிட்டுள்ளார்.
மஹிந்தவின் 9 வருட ஆட்சிக்காலத்தில் மொத்தமாகப் பெறப்பட்ட கடன் தொகை 5200 பில்லியன் ரூபாய்கள் என்றும்,குறித்த நிதி யுத்தம் மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டதென்றும், தற்போதைய அரசாங்கம் பெற்றுக்கொண்ட நிதியில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லையென நாமல் பதிவிட்டுள்ளார்.
வவுனியாவில் தபால் மூல வாக்குப்பதிவு சீராக இடம்பெற்றது, படம் எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
வவுனியா மாவட்டத்தில் இன்று தபால் மூல வாக்குப்பதிவு சீராக இடமபெற்ற போதிலும் அப்பகுதியில் ஊடகவியலாளர்கள் படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெலிஸார், மற்றும் முப்படையினருக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான வாக்குப்பதிவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்திலும் பொலிஸாருக்கான வாக்குப்பதிவு வவனியா பொலிஸ் நிலையத்திலும் இடம்பெற்றிருந்தது.
இந் நிலையில் மாவட்ட செயலகப்பகுதியில் கேட்போர் கூடப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் வாக்களிப்ப்பதற்காக காத்திருந்தமை மற்றும் பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களையும் படம் பிடிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
முஸ்லிம் விவாகச் சட்டத் திருத்தம் தொடர்பான அறிக்கை தலதாவிடம்
முஸ்லிம் விவாகச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை நீதியமைச்சர் தலதா அத்துகோரலவிடம் கையளித்துள்ளது.
அந்தக் குழுவின் தலைவரான உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுக் சம்பந்தப்பட்ட அறிக்கையை அமைச்சரிடம் கையளித்ததாக, நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக, பரிந்துரைகளை முன்வைக்கும் பொருட்டு கடந்த 2009ம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சரால் 17 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்தநிலையில், குழு தமது பரந்துரைகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அண்மையில் தறபோதைய நீதியமைச்சர் தலதா அத்துகோரல ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதன்படி, இன்று குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறச் செல்லும் மதகுருக்கள், துறவிகளுக்கென சிறப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி விரைந்து சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மறை மாவட்ட பொது நிலையினர் கழகம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கடித மூலம் இவ்வாறு கோரியுள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது:
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு தற்போது சிறப்பாக இயங்கி வருவதையிட்டு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனினும் குறித்த பிரிவுக்கு சிகிச்சை பெறவரும் மதகுருக்கள், துறவிகள் பெருமளவு நோயாளிகளுடன் இணைந்து காத்திருந்து வரிசையாக வந்து சிகிச்சை பெறுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஆன்மீகப் பணியுடன் மக்கள் பணிகளையும் முன்னெடுத்துவரும் மதத்தலைவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
எனவே, எதிர்காலத்தில் அவர்களுக்கென்று தனியான பகுதியையோ, அன்றி முன்னுரிமை அடிப்படையிலோ சிகிச்சைகளை வழங்க ஏற்பாடு செய்து மதகுருக்களின் நலன்களைப் பேணுவதோடு அவர்களுக்குரிய மரியாதையை வழங்கும் மனிதப் பண்பையும் மேற்கொள்ள வேண்டுமென யாழ்ப்பாண மறை மாவட்ட பொது நிலையினர் கழகத்தினராகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.
பிரதிகள் யாழ் மாவட்ட செயலர், வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர், யாழ் ஆயர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.