;
Athirady Tamil News

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (24.01.2018)

0

9 பேர் ஆராய்வர்..!!

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை அச்சுறுத்தி முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதற்கு, ஒன்பது பேர் கொண்ட விசேட உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

முழங்காலிட வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நேற்று விசாரணை நடத்திய, கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவே, உப குழுவை அமைத்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.வி.பி எம்.பியான நிஹால் கலப்பதி தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த உபகுழுவில், சகல கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமம் சூட்டுச் சம்பவம்: சீறி விழுந்தார் சாகல..!!

கதிர்காமத்தில் மேற்கொள்ளப்பட்ட சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் தொடர்பாக, தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கதிர்காமத்தில், கடந்த 20ஆம் திகதி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமும் ஏற்பட்டிருந்தது. இதனால், பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. இவர்களுள் 50க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு, பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நேற்று (23) கருத்துத் தெரிவித்த அமைச்சர் சாகல,

“பொலிஸாருக்கும் சட்டம் பொருந்தும்” என்று தெரிவித்ததோடு, “பதற்றமான சூழ்நிலையையோ அல்லது கட்டுக்கடங்காத போராட்டத்தையோ தணிக்கும் போது, செயற்பாட்டு வழிகாட்டல்களுக்கு ஏற்ப, நியாயப்படுத்தத்தக்க பலம் பயன்படுத்தப்பட வேண்டும். கதிர்காமத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், இந்த அடிப்படைகள் பின்பற்றப்படவில்லை போன்று தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று முன்தினம் கூட்டமொன்று இடம்பெற்றது எனக் குறிப்பிட்ட அமைச்சர், சம்பவம் தொடர்பான தனது மேற்படி கருத்துகளை, தனது அமைச்சின் செயலாளரிடமும் பொலிஸ்மா அதிபரிடமும் தெளிவாக எடுத்துக் கூறியதாகக் குறிப்பிட்டார். அத்தோடு, கதிர்காமத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், அலரி மாளிகையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது, பொதுமக்கள் மீது, பொலிஸாரால் மோசமான முறையில் அடிதடி பிரயோகிக்கப்பட்ட காட்சி தொடர்பாக, பொலிஸ்மா அதிபருடன், கடுமையான வார்த்தைகளில், அமைச்சர் முரண்பட்டார் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தையும், அமைச்சர் கண்டித்தார் என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கதிர்காமத்தில் இடம்பெற்ற சம்பவத்தை, தனித்த ஒரு சம்பவம் கிடையாது என வர்ணித்த அமைச்சர், “போதுமான பயிற்சியும் தொழில்வாண்மைத்துவமும் இன்மை காரணமாகவே இது ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டதோடு, இந்த அடிப்படைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தவறும் பட்சத்தில், இவ்வாறான நிலைமைகள் மீண்டும் மீண்டும் ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.

எனவே, வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன், பொலிஸ் துறையில் பாரிய சீர்திருத்தங்கள், விரைவில் மேற்கொள்ளப்படும் என, அவர் மேலும் தெரிவித்தார்.

மஹிந்த, கோத்தபாயவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படாமை குறித்து மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா மற்றும் அவன்கார்ட் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தொடருமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு 34 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரியங்கர ஜயரட்ன, சரத்குமார குணரட்ன உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + ten =

*