;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (27.01.2018)

0

கோர விபத்தில் மூவர் பலி ; மூவர் படுகாயம்

தனமல்லவில – வெல்லவாய பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனமல்லவில – வெல்லவாய பிரதான வீதியின் தெலுல்ல என்ற பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பிரதமரின் அதிரடி அறிவிப்பு!!!

தெனியாயவில் இன்று மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்த பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரு ஆணைக்குழு அறிக்கைகள் மீது விவாதம் நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், நேற்றிரவு சபாநாயகரை சந்தித்து பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டடுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், இது தொடர்பான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அனுப்பிவைக்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது : மஹிந்த அமரவீர

நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது” என கடற்றொழில் நீரியில்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடல் நடவடிக்கையை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் அதிக அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதுடன் அரசாங்கத்தின் இந்த சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கும் எதிப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாகவே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.

எமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக வரும் எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லையென்று தெரிவித்த அமைச்சர் இந்தியர்களின் சம்பிரதாயபூர்வமான மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதற்கு எமது கடற் பிரதேசத்தில் இடமளிக்காது என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

இலங்கை மீன்பிடி சட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திருத்தத்துக்காக போராட்டம் நடத்துவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டாது தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதே சிறப்பானதாக அமையும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

தேர்தல் தொடர்பில் திருகோணமலையில் 120 முறைப்பாடுகள் பதிவு

எதிர்வரூம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில், திருகோணமலை மாவட்டம் முழுவதிலும் இருந்து, 120 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சஜீத் வெல்கம தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை , குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில், தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெறும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 7 =

*