;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (30.01.2018)

0

தேர்தல் முறைப்பாடுகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விஷேட பிரிவு

தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விஷேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளின் போது இடம்பெறுகின்ற உரிமை மீறல்கள் சம்பந்தமாக கண்டறிவது இதன் நோக்கமாகும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் வேட்பாளர்களை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பதிவாகியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இந்த பிரிவு விஷேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

24 மணித்தியாலங்களும் செயற்படுகின்ற 0773 088 135 அல்லது 0773 762 112 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இது தவிர 0112 505 574 என்ற இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

முக்கிய தீர்மானத்திற்காக இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம்

கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பு பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளநிலையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர்.

இதன்போது மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையுடன் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வழக்குத் தொடருதல் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காலநிலையில் திடீர் மாற்றம்

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தையடுத்து நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையை அண்டியுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

விசேடமாக கிழக்கு – ஊவா மாகாணங்களிலும், மாத்தளை – பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம்.

நாட்டின் வடபாகத்திலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

அத்துடன் நாட்டை சூழவுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு இன்று முதல் சிறப்பு தொடரூந்து சேவை

சிவனொளிபாத மலை யாத்திரையை இலக்காக கொண்டு கொழும்பு கோட்டை மற்றும் ஹட்டன் தொடரூந்து நிலையங்களுக்கிடையில் இன்று தொடக்கம் சிறப்பு தொடரூந்து சேவையொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தொடரூந்து சேவை எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி வரை செயற்படுத்தப்படும் என தொடரூந்து மேலதிக பொது மேலாளர் விஜய சமரசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + twelve =

*