;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (31.01.2018)

0

70வது சுதந்திர தின விழாவிற்கு இளவரசர் எட்வர்ட் இலங்கை வருகை..!!

70வது சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் எட்வர்ட் இன்று மதியம் 12.40 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.

பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வரான இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதி வரை இலங்கையில் தங்கவுள்ளனர்.

கள்ளநோட்டுகளுடன் இருவர் கைது..!!

வாரியப்பொல ரபுகன பிரதேசத்தில் வைத்து கள்ள நோட்டுகளுடன் சந்தேகநபர்கள் இருவர், வாரியப்பொல பொலிஸ் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சுந்தரகம அவுளேகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண்ணொருவரும், பானாகெதர அவுளேகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஆணொருவருமேயாவார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வாரியப்பொல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உபபொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ஏ.ஆர்.கே. ஹேரத்தின் வழிக்காட்டலின் கீழ் வாரியப்பொல பொலிஸ் குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 1000 ரூபா பெறுமதியான கள்ளநோட்டுகள் ஐந்தும், 1 கிராம் 120 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இதுபோல் வேறு நாணயத்தாள்கள் உள்ளனவா மற்றும் இவர்களுடன் தொடர்புடைய குழுக்கள் இருக்கின்றனவா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நேற்று வாரியப்பொல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

“ஹட்டனை அரசியல்வாதிகள் கேவலப்படுத்தி பிரச்சாரம் செய்வதால் மக்கள் அதிருப்தியில்”..!!

ஹட்டன் நகரம் போதைப் பொருள் மலிந்த இடமாக இருப்பதாக சில அரசியல்வாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் காரணமாக நகர்வாழ் பொது மக்கள் மிகவும் அதிருப்தியடைந்த நிலையில் இருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆரியகம வட்டாரத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

“ஹட்டன் நகரம் போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் நகரமாக மாறி வருவதாக இ.தொ.கா.வினர் பிரசாரம் செய்து வருகின்றார்கள். இதனால் நகர் வாழ் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

நகரில் உள்ள அனைத்து மக்களுமே போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்ற கருத்து பரப்பப்பட்டு வருவது இங்குள்ள மக்களை அகௌரவப் படுத்தும் நடவடிக்கையாகும்.

நகர மக்களை கேவலப் படுத்திதான் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டுமா? என்ற நியாயமான கேள்வியும் எழுந்துள்ளது.

இலங்கையில் எல்லா இடங்களிலும் போதைப் பொருள் பாவனை முக்கிய பிரச்சினையாக இருந்து வருகின்றது. ஜனாதிபதியின் சொந்தத் தொகுதியான பொலன்னறுவையிலும் போதைப் பொருள் இருப்பதாக அவரே கூறியுள்ளார்.

போதைப் பொருளை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது பொலிசாரின் கடமையாகும். அதை விடுத்து, தேர்தலில் நகர சபையைக் கைப்பற்றினால் அடுத்த நாளே போதைப் பொருளை ஒழித்து விடப் போவதாகக் கூறுவது சிறுபிள்ளைத் தனமான பேச்சு ஆகும்.

ஹட்டன் நகரம் சமாதானத்துக்குப் பெயர் பெற்ற முக்கியமான கேந்திர நிலையம் ஆகும். இங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மிகுந்த ஒற்றுமையுடனும், கண்ணியத்துடனும் வாழ்ந்து வருகின்றார்கள்.

அந்த கண்ணியத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் தேர்தல் காலத்தில் போதைப் பொருள் பற்றி பிரஸ்தாபித்து வருகின்றார்கள். இன்று பிரசாரம் செய்கின்றவர்கள் தேர்தலுக்கு முன்னர் இந்தப் பகுதியில் குடியிருக்கவில்லையா? மக்கள் நலனைப் பற்றி தேர்தல் காலத்தில் தான் சிந்தனை வந்துள்ளதா?

ஹட்டன் நகர பொது மக்களும் இளைஞர், யுவதிகளும் வெளியிடங்களுக்கு செல்லும் போது அவர்களை கேவலமாகவும், இழிவாகவும் நோக்குகின்ற நிலைமை உருவாகியுள்ளது.

ஹட்டன் நகரத்தை மிகவும் மோசமான முறையில் வெளியிடங்களில் உள்ளவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு இழிவு படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று இ.தொ.கா. வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. அவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தானா?

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு எத்தகைய சேவைகளை வழங்கப் போகின்றோம் என்பதை எடுத்துக் கூறி வாக்குகள் கேட்க வேண்டும். அதைக் கூறாமல் பொலிசார் செய்ய வேண்டிய வேலையை தாங்கள் செய்யப் போவதாகக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஹட்டன் நகர மக்களை இனிமேலும் இழிவு படுத்தும் கைங்கரியத்தில் அரசியல்வாதிகள் ஈடுபடக் கூடாது. நாகரிகமான முறையில் பிரசாரம் செய்யத் தவறினால் மக்களின் சீற்றத்துக்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும் என்பதை மறந்து விடக் கூடாது. அத்தகைய பிரசாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராகவே மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*