;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (01.02.2018)

0

04ம் திகதி கொழும்பில் விஷேட போக்குவரத்து திட்டம்..!!

எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதி சுதந்திர தினமன்று அதிகாலை 05.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை கொழும்பு நகரத்தில் விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறினார்.

அதேவேளை அன்றைய தினம் காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான வீதி தற்காலிகமாக மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டம்..!!

இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு மேலதிமாக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளையும் மாவட்ட நீதிமன்றங்களில் மட்டுமல்லாமல் மேல் நீதிமன்றத்திலும் விசாரிப்பதற்கு ஏதுவான வகையில் 1954ம் ஆண்டு 11ம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவை திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு சட்டமா அதிபர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இம்மூவர் அடங்கிய விசேட நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி, 1978ம் ஆண்டு 02ம் இலக்க நீதிமன்ற அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் நீதியமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலஞ்சம் பெற்ற விவசாய ஆலோசகர் கைது..!!

இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு விவசாய ஆலோசகர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெதகம பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மெதகம கமநல சேவை மத்திய நிலையத்தின் பொல்கஹபிடிய பிரிவின் விவசாய ஆலோசகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

அனுமதிபெற்ற காணி ஒன்றில் பலா மரம் இரண்டை வெட்டுவதற்காக அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள 10,000 ரூபா இலஞ்சம் கேட்கப்பட்டதுடன் பின்னர் அத்தொகை 4,000 ரூபாவாக குறைக்கப்பட்டு அதில் 2,000 ரூபாவை பெற்றுக்கொள்ளும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெதகம கமநல சேவைகள் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான விவசாய ஆலோசகர் விசாரணைகளின் பின்னர் பிபில நீதவான் நீதிமன்றத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

விவாதிக்க எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தரலாம்..!!

பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியன தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் இணக்கத்துடன் தேவையான அளவுக்கு நாட்களை ஒதுக்கிக் கொள்ள முடியும் என்று சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

பெரும்பாலான கட்சித் தலைவர்களின் உடன்பாட்டின் படி எதிர்வரும் 06ம் திகதி அவை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அன்றைய தினம் முழுமையான விவாதம் நடத்தப்பட்டு விட்டதாக அர்த்தப்பட மாட்டாது என்றும் கட்சித் தலைவர்களின் உடன்பாட்டுடன் அதற்காக தேவையான அளவிற்கு மேலும் நாட்களை ஒதுக்கிக் கொள்ள முடியும் என்றும் சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

அதன்படி எதிர்வரும் 06ம் திகதி பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமான விவாதத்தின் பின்னர் கட்சித் தலைவர்களின் உடன்பாட்டுடன் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முடியும் என்று சபாநாயகர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சம்மந்தன், ரணிலின் பொக்கட் பைக்குள்..!!

நாட்டில் தற்போது எதிர்க்கட்சி உட்பட நான்கு கட்சிகள் சேர்ந்தே ஆட்சியை நடாத்துகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக செயற்படாததுடன் இரா.சம்மந்தன், ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கியுள்ள சிறிலங்கா பொதுஜன பேரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (01) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இப் பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் போது கருத்து தெரிவித்த அவர், மூன்று ஆண்டுகளின் பின்னர் நான் யாழ்ப்பாண மக்களுடன் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய காலத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இருந்தது. உங்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நாம் வழங்கியிருந்தோம். இருந்த போதிலும் நாங்கள் தேவையற்ற காரணத்தினால் தோல்வியை தழுவ வேண்டி ஏற்பட்டது.

ஆனால் நாங்கள் இருந்த போது காணப்பட்ட நிலைமைகள் இன்று இருக்கின்றதா என நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். புதிய ஆட்சி உருவாகி குறிப்பிட்ட சில கால இடைவெளிக்குள் என்ன அபிவிருத்தி இடம்பெற்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாம் ஆட்சியில் இருந்த போது மின்சாரம், நீர், போக்குவரத்துக்கான வீதிகள், புதிய பாடசாலைகள், பாடசாலைகளில் மகிந்தோய ஆய்வு கூட வசதிகள், மிக நீண்ட காலமாக இல்லாதிருந்த வடக்கிற்கான புகையிரத சேவை என அனைத்து துறைகளிலும் அபிவிருத்தியை முன்னெடுத்திருந்தோம்.

இவ்வாறு நான் அபிவிருத்திகளை செய்தற்கு காரணம் தெற்கு மக்கள் போன்று வடக்கு மக்களும் வாழ வேண்டும் என்பதற்காகவே, ஆனால் இன்று எமது மண்ணில் விளைந்த விசாய பொருட்களான அரிசி, உழுந்து, விவசாய பசளைகள் கூட வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

தற்போது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னனி ஆகிய நான்கு கட்சிகள் இணைந்தே ஆட்சி செய்கின்றன. இதில் எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பானது எதிர்கட்சியாக செயற்படவில்லை. இரா. சம்மந்தன் ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார்.

நான் ஆட்சியில் இருந்த போது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைத்திருந்தேன். ஆனால் அவர்கள் வருவதாக கூறிவிட்டு சென்றார்களே தவிர திரும்பி வரவேயில்லை. தற்போது சிவசக்தி ஆனந்தன் 200 இலட்சம் ரூபா வாங்கியதாக கூறுகின்றார். இவ்வாறு வாங்கிய பணத்தை அவர்கள் மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்வதற்காக பயன்படுத்தவில்லை.

எனவே இனிமேலும் வடக்கு மக்கள் இவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம். இந்த அரசாங்கம் பொய்களை கூறிக் கூறிக் கொண்டிருந்த்தை தவிர வேறேதனை செய்திருந்த்து. எனவே இவர்களுக்காக உங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டாம். நாங்கள் தற்போது புதிய வித்தியாசமான கட்சியில் வித்தியாசமான சிந்தனையில் வந்துள்ளோம். எம்மை எமது சின்னமான தாமரை மொட்டு சின்னத்தை மக்கள் வெற்றிபெற செய்து முன்னைய காலம் போன்று நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*