;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (03.02.2018)

0

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பில் கவலை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தை செயற்படுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து சிவில் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 சிவில் அமைப்புக்கள் மற்றும் தனியாட்கள் இணைந்து கையெழுத்திட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியத்தை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், அதன் உறுப்பினர்களை நியமிக்க இன்னும் நடவடிக்கை எடுக்காமை குறித்து கவலை வெளியிடுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த உறுப்பினர்களின் நியமனமானது வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெற வேண்டும் என அரசியலமைப்பு பேரவையிடமும், ஜனாதிபதியிடமும் சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளன.

குறித்த உறுப்பினர்களின் நம்பகத்தன்மை, அனுபவம் மற்றும் நிபுணத்துவம் என்பனவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் சிவில் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோஸியஸுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை

பிணை முறி விநியோகம் தொடர்பில் குற்றவியல் வழக்கொன்றை ஆரம்பிப்பதற்கான முதலாவது பி அறிக்கை ஒன்றை குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான நீதிமன்றில் நேற்றுத் தாக்கல் செய்துள்ளது.

குறித்த அறிக்கைக்கு அமைய, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அர்ஜுன் அலோஸியஸுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களும், பெப்பர்ச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனவுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களும் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பெப்பர்ச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸ், மற்றும் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர், பிணை முறி விநியோகத்தின் சந்தேகத்துக்குரியவர்களாக குறித்த பி அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தற்போது சிங்கப்பூரில் இருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வருகைதந்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டும் என நீதவான் அறிவித்தல் விடுத்துள்ளார்.

சுதந்திர கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தால் தண்டனை வழங்க முடியாது – ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தால், பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாது போகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹெட்டிபொல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் வைத்து வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய ஊழல், மோசடிகளை மேற்கொண்டவர்கள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியவரும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தவறிழைத்த எவரும் தப்பமுடியாது என்றும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 8 =

*