;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (07.02.2018)

0

மக்கள் வங்கி பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்

மக்கள் வங்கி பணியாளர்கள் இன்று (7) நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வங்கி பணியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

4 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தனர்.

எனினும் மக்கள் வங்கியின் தலைவரால் நியமிக்கப்பட்ட உபகுழு குறித்த பணியாளர்களின் பிரச்சனைக்குத் தீர்வினைப் பெற்றுத் தருவதாக நேற்று (6) இரவு வாக்குறுதியளிக்கப்பட்டதாக வங்கி பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 3 பஸ் சேவைகளின் பணியாளர்கள் பணிபுறக்கணிப்பில்

புரஹலயிலிருந்து ஹிம்புட்டானை வரை சேவையில் ஈடுபடும் 164 இலக்க பஸ், அங்கொடையிலிருந்து கொம்பனித்தெரு வரை போக்குவரத்தில் ஈடுபடும் 166 இலக்க பஸ் மற்றும் களனிமுல்லையிலிருந்து சீமாமாலகய வரை போக்குவரத்தில் ஈடுபடும் 150 ஆம் இலக்க பஸ்களின் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

166 வீதி இலக்க பஸ்ஸின் சாரதி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சாரதியைத் தாக்கிய சந்தேகநபரைக் கைதுசெய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்​து, குறித்த 3 பஸ் சேவைகளின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘ஜனாதிபதி, தனது பதவி தொடர்பில் சிந்திக்க வேண்டும்’

“ஜனாதிபதி தான் பதவியில் இருக்க பொருத்தமானவரா என சிந்திக்க வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கடந்த திங்கட்கிழமை (05) யாழுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, “காணாமலாக்கப்பட்டோரை எங்கும் தேடிவிட்டோம். கிடைக்கவில்லை. அவர்களின் பெற்றோருக்கு நட்டஈடு வழங்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இக்கருத்து தொடர்பாக இன்று (07) கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன்,

“காணாமல் போனவர்களின் உறவினர்கள் மிகத் தெளிவானதொரு அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர். ஆகவே விசாரணை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அரசாங்கம் எந்த விசாரணையையும் செய்யவில்லை.

அவ்வாறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாது, தேடிப் பார்த்தோம், காணவில்லை என்று ஜனாதிபதி கூறுகிறார். இது ஒரு ஜனாதிபதி கூறும் முடிவா. ஜனாதிபதி சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பாக இருக்கின்றார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். நாங்கள் 23 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக கூறுகின்ற போது, அவர் தேடிப் பார்த்தோம் காணவில்லை என்றால், அவர்கள் எங்கே, அவர்களுக்கு என்ன நடந்தது.

ஆகவே அசண்டையீனமாக பதில் கூறும் ஜனாதிபதி, தான் பதவியில் இருக்க பொருத்தமானவரா என சிந்தித்து பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

சூதாட்ட மையம் சுற்றிவளைப்பு: விமானப்படையினர் உட்பட பலர் கைது

அனுராதபுரம் – கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இயங்கி வந்த சூதாட்ட மையத்தை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,சந்தேகநபர்களிடம் இருந்து 6 இலட்சத்து இரண்டாயிரம் ரூபாய் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் விமானப்படையினர் சிலரும், மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி ஒருவரும், தனியார் நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் உட்பட பல்வேறு பதவிகளை வகிக்கும் நபர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் இன்று கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

“மன்னாரில் கடும் வறட்சி: நெற்செய்கை அழிவடையும் அபாயம்

மன்னார் மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக முப்பதாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை அழிவடையும் அபாயநிலை காணப்படுவதாக மன்னார் மாவட்ட சமாதான அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட பெரும்போக செய்கை பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக கட்டுக்கரைக் குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட காலபோக நெற்செய்கை முதல் ஏனைய சிறிய குளங்களின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சுமார் நாற்பதாயிரம் ஏக்கர் வரையான செய்கைகள் அழிவடைந்துள்ளன.

குறிப்பாக மன்னார் இரணை இலுப்பைக்குளம் கமநல சேவை நிலையம், பாலம்பிட்டி கமநல சேவை நிலையம், இலுப்பைக் கடவை கமநலசேவை நிலையம் ஆகிய கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள மானாவாரி பயிர்செய்கை நிலங்கள், சிறிய நீர்ப்பாசனக்குளங்கள், பாரிய நீர்ப்பாசனக்குளங்கள் என்பவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான காலபோக செய்கைகள் அழிவடைந்துள்ளன.

இந்நிலையில், மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள முப்பதாயிரம் ஏக்கர் நெற்செய்கை அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இதன் கீழ் பயிர் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட சமாதான அமைப்பினைச் சேர்ந்தோர் கருத்துத் தெரிவிக்கையில்,

மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கீழ செய்கை பண்ணப்பட்ட முப்பதாயிரம் ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டுக்கரைக்குளத்தின் நீர்மட்டம் 5 அடியாகவுள்ள நிலையில் இதில் இரண்டு அடி வரையான தண்ணீரையே நெற்செய்கைக்கு விநியோகிக்கக்கூடியதாகவுள்ளது.ஆனால், குறித்த தண்ணீரை 30 ஆயிரம் ஏக்கருக்கும் பாச்ச முடியாதுள்ளது என்றும் இதனால் இந்த செய்கை அழிவடையும் அபாய நிலை காணப்படுவதாகTவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − twelve =

*