;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (14.02.2018)

0

அர்ஜூன மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் நாளையுடன் நிறைவு

சர்ச்சைக்குரிய பிணைமுறி தொடர்பில் தற்போது சந்தேகத்திற்குரியவராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வழங்கப்பட்ட காலஅவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.

அவரை குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜனரத்ன, கடந்த 5ஆம் திகதி அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தார்.

தற்போது சிங்கப்பூரில் உள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் இதுவரையில் நாட்டுக்கு திரும்பவில்லை என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இந்த வழக்கின் சந்தேகத்திற்குரியவர்களான பர்பெச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பொதுத் தேர்தலை நடத்த முன்வருவாரா..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுத் தேர்தலை நடத்த முன்வருவாரானால் அதற்கு தேவையான திருத்தங்களின் பொருட்டு நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பை வழங்க ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று கூடிய மகிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று கூடியது.

கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மகிந்த தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியர் நுரைச்சோலையில் கைது

நுரைச்சோலை கரம்பை பகுதியில் கடல் அட்டைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

களஞ்சியப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 4 =

*