;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (14.02.2018)

0

கடல் அட்டைகளுடன் இந்தியர்கள் கைது

நுரைச்சோலை, கரம்ப பகுதியில் உள்ள வீடொன்றில், எதுவித ஆவணங்களும் இல்லாமல், சட்டவிரோதமாக கடல் அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தியர் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 29, 48 மற்றும் 56 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முப்பத்தொரு பொதிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 688 கிலோ எடையுடைய இந்தக் கடலட்டைகளின் மதிப்பு சுமார் இரண்டரைக் கோடி ரூபா எனத் தெரியவருகிறது.

அத்துடன், 21 பொதிகளில், உலர வைத்த சுறா மீன் செட்டைகள் 625 கிலோகிராமும் இதுவரையில் இலங்கைக்கு அறிமுகமில்லாத சில வகை கடல் உயிரினங்கள் 10 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான மூவரும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் சம்பவம் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கொழும்பு கிராண்ட்பாஸில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 உயர்வடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சிலர் காயமடைந்துள்ளதுடன் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் இராணுவத்தினர், பொலிஸார் , தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு நியமன கடிதங்கள்

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதியால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 2006 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த இரண்டு விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் அனில் குணரத்ன, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எதாஉட ஆரச்சிகே, காமினி ரொஹான் அமரசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் மல்லவ ஆரச்சிகே டொன் என்டனி ஹரல்ட், இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபையின் பணிப்பாளர் நாயகம் வசந்தா ஜயசீலி கபுகம ஆகியோரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 10 வழிமுறைகளில் இந்த விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில்

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்கள் படகுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை அதிகரிக்கப்படுவதை கண்டித்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அபராதத் தொகையினால் தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளதுடன், குறித்த யோசனையை திரும்பப்பெற வேண்டும் எனவும் ராமேஸ்வரம் மற்றும் தமிழக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கபடாவிட்டால், எதிர்வரும் 16 ஆம் திகதி ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்பட 6 மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தை முற்றுகையிட உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, ராமேஸ்வரத்தில் கடற்றொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளின் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இலங்கை சிறையில் தடுத்து வைகப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் 136 பேருடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள 175 படகுகளையும் விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*