;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (16.02.2018)

0

இலங்கை சிறையில் இருந்த 109 இந்திய மீனவர்கள் விடுதலை.

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக யாழ் ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதி மன்றங்களினால் குறித்த 109 மீனவர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.

தமிழகம் இராமநாதபுரம்,புதுக்கோட்டை, ஜகதாபட்டினம்,கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதமளவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதிமன்றினால் 79 மீனவர்கள் மற்றும் யாழ் பருத்தித்துறை நீதிமன்றினால் முப்பது மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த மீனவர்கள் இன்று யாழ் இந்திய உயர்ஸ்தானிராலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை ஓரிரு தினங்களில் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தனிகர் நடராஜன் தெரிவித்தார்.

வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் பதவியில் தொடரலாமா?

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட ரி. கே. இராசலிங்கம் தொடர்ந்தும் அப்பகுதியில் நீடிக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ரி. கே. இராசலிங்கம் கடந்த உள்ளூராட்சி மற்ற தேர்தலின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் கடைத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தேர்தலின்போது விடுமுறையை பெற்றிருந்த இவர் தற்போது தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் மீண்டும் வர்த்தக சங்க தலைவர் பதவியை பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் தற்காலிக தலைவராக செயலாற்றி வந்தவர் பதவியை துறந்து மீண்டும் ரி. கே. இராசலிங்கத்திற்கு தலைவர் பதவியை வழங்குவாரா எனவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதேவேளை ரி. கே. இராசலிங்கத்திற்கு வர்த்தக நிலையங்கள் நகர்ப்பகுதியில் இல்லாத நிலையில் தலைவராக நீடிக்கமுடியுமா எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மஹிந்தவின் அழைப்பை உறுதி செய்த ரணில்

சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் உரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டாம் என மஹிந்த கேட்டுக் கொண்டதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்றைய தினம் தெரிவித்தார்.

இந்த கருத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்தார்.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி தன்னுடன் உரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கொண்ட போது இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் பதவியில் தான் விலகுவதாக கூறப்படும் செய்தி தொடர்பில் மஹிந்த தன்னிடம் வினவினார் என பிரதமர் கூறியுள்ளார்.

பதவி விலக போகிறீர்களா….? என மஹிந்த என்னிடம் வினவினார். நான் வேலை செய்து கொண்டு இருக்கின்றேன் என்றேன். பின்னர் சில விடயங்கள் குறித்து பேசிவிட்டு சென்றார்.

இது தொடர்பில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கேள்வியை கேட்கலாம் அல்லவா” என ரணில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியுடன் தொடர்பு உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டினை தான் நிராகரிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*