;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (17.02.2018)

0

கொழும்பில் இன்று 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடை

கொழும்பின் சில இடங்களில், இன்று(17.02.2018) காலை 9.00 மணியிலிருந்து நாளை காலை 9.00 மணி வரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையிலான நீர் விநியோகப் பிரதான குழாய் கட்டமைப்பில் திருத்தநடவடிக்கைகள் காரணமாகவே, மேற்படி நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு 1, 2, 3, 4, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை இதன்காரணமாக கொழும்பு 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களுக்கான குறைவான அழுத்தத்துடன் நீர்விநியோகம் காணப்படும் என்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் இலங்கையில்

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

பயண்டர் (Bayandor), நக்டி (Naghd), டொன்ப் (Tonb) என்ற போர் கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த மூன்று போர்க் கப்பல்களும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கவுள்ளன.

இந்த காலப்பகுதியில் அந்தக் கப்பல்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த கப்பலில் இலங்கைக்கு வருகைதந்துள்ள ஈரான் கடற்படை உயர் அதிகாரிகளுக்கும், இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

சைட்டம் குறித்து மருத்துவ சங்கத்தினால் மீண்டும் குறிப்பாணை

சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு எதிர்வரும் செவ்வாய் கிழமையன்று சிறப்பு குறிப்பாணையொன்றை கையளிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினர்களுடன் கடந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவுகளின் படி குறித்த குறிப்பாணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக குழுவின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

சைட்டம் பிரச்சினை தொடர்பில் எதிர்ப்பார்க்கப்படும் தீர்வு மற்றும் மேலும் சில விடயங்கள் இந்த குறிப்பாணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டதா?

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் புதிய முகவரியில் மீள செயற்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

தொழில்நுடப கோளாறு காரணமாக தமது இணையத்தளம் கடந்த முதலாம் திகதியிலிருந்து செயலிழந்திருத்தது என பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தமக்கு அறித்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த இணையத்தளமானது, முடக்கப்படவில்லை என பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,srilankahc.uk என்ற புதிய இணையத்தள முகவரி ஊடாக இணையத்தளம் மீள இயற்குவதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 20 =

*