;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (19.02.2018)

0

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட மாட்டாது

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தணிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்கவுள்ளதாக நேற்று பரபரப்பான தகவல் பரவியிருந்தது.

எதிர்வரும் மார்ச் மாதம் 22ம் திகதி வரை அவ்வாறு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என்றும் எதிர்வு கூறப்பட்டிருந்தது.

அத்துடன் நேற்று மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பிரசுரிக்க தயாராக இருக்குமாறும் அரசாங்க அச்சகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் எதுவும் நள்ளிரவு தாண்டிய நிலையிலும் பிரசுரிக்கப்படவில்லை.

அத்துடன் இன்றைய தினம் வழமை போன்று நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என்றும் அதனை ஒத்திவைக்கும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் தீர்மானம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகின்றது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்கள்

நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் இரண்டு லட்சத்து 88 ஆயிரத்து 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் வாழும் 91 ஆயிரத்து 381 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவல்களை அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 612 பேரும், புத்தளம் மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 18 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 50 ஆயிரத்து 918 பேரும், அநுராதபுரத்தில் 9 ஆயிரத்து 655 பேரும், பொலன்னறுவை 990 பேரும் வறட்சி காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் நாடு கடத்தல்

போலி கனேடிய கடவுச்சீட்டினை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கட்டார் விமான நிலையம் ஊடாக கனடா செல்ல முயற்சித்த குறித்த இலங்கையர் விமான நிலைய அதிகாரிகளினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தின் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தை சேர்ந்த சரவணமுத்து தங்கவேல் என்ற 62 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு போலி கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உதவிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய குற்ற விசாரணை பிரிவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*