;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (19.02.2018)

0

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவலைப்படும் மனோ கணேசன்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக தாம் வெட்கமும் கவலையும் அடைந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களின் கருத்துக்களை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் பிரதமரை பதவி விலக வேண்டும் எனக் கூறுவதில் எந்த அடிப்படையும் இல்லை என அரசியலமைப்புச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நெல்லிற்கான நியாயமான விலை கிடைக்காது திண்டாடும் விவசாயிகள்

நெல்லிற்கான நியாயமான விலை கிடைக்காமையினால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விதைப்புக் காலத்தில் ஒரு மூடை நெல் 3000 ரூபா தொடக்கம் 3500 ரூபா வரைக்கும் பணம் கொடுத்து கொள்வனவு செய்து விதைத்துள்ள போதிலும், தற்போதைய அறுவடைக்காலத்தில் ஒரு மூடை நெல் 2000 ரூபாவுக்குள்தான் விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அறுவடை செய்யும் நெல்லை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த ஆட்சிக்காலத்தில் ஒரு அந்தர் பசளை 350 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு ஏக்கருக்கு 5000 ரூபா பணம் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் ஒரு அந்தர் பசளை 2000 ரூபா தொடக்கம் 3000 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனவே அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாவிற்கு போதியளவு பசளையை விவசாயிகள் கொள்வனவு செய்ய முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் அதிக செலவுகளையும், முதலீடுகளையும் இட்டு வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுவரும் நிலையில், அறுவடைக்கூலி, கிருமிநாசினி, களைநாசினி, பசளை கொள்வனவு உள்ளிட்ட ஏனைய இதர செலவுகளையும் வைத்துக் கொண்டு அறுவடை செய்யும் நெல்லிற்கான உத்தரவாத விலை இன்மையினால் வெளி இடங்களிலிருந்து வரும் நெல் வியாபாரிகள் 2000 ரூபாவிற்கு குறைந்த விலையில் தம்மிடருந்து நெல்லைக் கொள்வனவு செய்து கொண்டு செல்கின்றனர். இவற்றால், பாரிய நஷ்டத்திற்குட்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே நெல்லிற்கான உத்தரவாத விலையை அரசு நிர்ணயித்து, அரசாங்கமே தகுந்த விலையில் தமது நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும் எனவும், அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீர் மின்உற்பத்திக்குச் சவாலாகும் வறட்சியான காலநிலை

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் காரணமாக நீர் மின்உற்பத்தி சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று, மின்சக்தி மற்றும் நிலைபேறா எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மழையற்ற காலநிலையினால் முக்கிய மின்உற்பத்தி நீர்த்தேக்க பகுதிகள் மற்றும் சிறிய நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், முக்கிய மற்றும் சிறிய நீர் மின்உற்பத்தியின் மூலம் தேசிய மின்சார வலைப்பின்னலுக்கு 1,725 மெஹாவேட்ற்ஸ் (meha hertz) மின்சாரம் ஒன்றிணைக்கப்படுகின்றது.

மவுசகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 63.1 சதவீதமாகவும், காசல்றீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 58.7 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 35.4 சதவீதமாகவும், விக்டோரியா நீர்மட்டம் 21.3 சதவீதமாகவும், ரந்தனிகல நீர்த்தேக்கம் 48.9 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் அவசியத்தை அமைச்சின் அபிவிருத்தி பிரிவுப் பணிப்பாளர் சுலக்ஸன ஜயவர்த்ன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*