;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (21.02.2018)

0

கொழும்பு – திருகோணமலை தொடரூந்து சாரதிகளின் ஆர்ப்பட்டம் நிறைவு

கொழும்பு மற்றும் திருகோணமலையில் இருந்து ஆரம்பமாகும் தொடரூந்து சேவையில் இருந்து விலகி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடரூந்து மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு குறித்த தொடரூந்து முன் பாய்ந்து யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர், கோபமடைந்த அவரது உறவினர்கள், தொடரூந்து மிது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தொடரூந்தின் இயந்திரத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தியத்தலாவை பேரூந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது

இன்று அதிகாலை தியத்தலாவை பகுதியில் வைத்து யாழிலிருந்து சென்றதாகக் கூறப்படுகின்ற பேரூந்தில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் அரசியல்வாதிகள், பொறுப்புவாய்ந்த ஊடகங்கள் மிக அவதானமாக செய்திகளையும், தகவல்களையும் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, “மேற்படி சம்பவமானது கண்டிக்கத்தக்கதும், வருந்தத்தக்கதுமாகும். இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் அறியப்பட வேண்டும்.

அதேநேரம், பொறுப்புவாய்ந்த ஊடகங்கள், பொறுப்புமிக்க அரசியல்வாதிகள் இவ்விடயம் தொடர்பில் கருத்து கூறுகின்றபோது, செய்திகளை வெளியிடுகின்றபோது , தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், அப்பாவித் தமிழ் மக்கள் மீது பலியினைப் போடாத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் இருந்து நாளை நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர் என கூறப்படும் இலங்கையர் ஒருவரை அவுஸ்திரேலியா அரசாங்கம் நாளை நாடு கடத்தவுள்ளது.

இதற்காக அவர் மெல்பேர்னில் உள்ள ஏதிலிகள் தங்குமிடத்திலிருந்து கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்பட்டதாக தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு அவர் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த பேரவை கோரியுள்ளது.

சாந்தரூபன் தங்கலிங்கம் என்ற அவரை நாளைய தினம் நாடு கடத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அவரை நாடு கடத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் துன்புறுத்தல்களுக்கு எதிரான குழுவினால் விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர் நாடு கடத்தப்பட்டால் இலங்கையில் உயிராபத்தை எதிர் கொள்ள நேரிடும் என்ற நிலையில், ஐக்கிய நாடுகளின் குழு அதற்கு வழியேற்படுத்தியுள்ளமைக்கான காரணம் என்னவென்று ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ஹரன் மயில்வாகனம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் அவர் நாடு கடத்தப்படுவதை நிறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகளின் துன்புறுத்தல்களுக்கு எதிரான குழு செயற்பட வேண்டும் என்பதோடு, தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அவுஸ்திரேலியா வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பிரதமர் ரணிலுக்கு பேராசை – மகிந்த

மக்கள் நிராகரித்துள்ள போதும் பேராசை காரணமாகவே பிரதமர் அந்த பதவியை தொடர்ந்தும் வகிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை – ரஜமல்வத்த விபஸ்ஸனா தியான மண்டபத்திற்கு விஜயம் செய்த அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நாளாந்தம் வீழ்ச்சி போக்கிற்கே முகங்கொடுத்து வருகிறது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒவ்வொரு கோணங்களிலிருந்து செயற்படுகின்றனர்.

தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் காலாவதியாகியுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் உரிய தீர்மானம் ஒன்றை எட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*