;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (23.02.2018)

0

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் பிரச்சினைகள் இல்லை

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் அரசியல் யாப்பு ரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகள், தங்களுக்கு இடையிலான உடன்படிக்கையை முன்கொண்டு செல்ல இணக்கம் வெளியிட்டுள்ளன.

இதனால் குறித்த விடயத்தில் சட்டரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என்று, சட்டத்துறை நிபுணர்கள் தமக்கு விளக்கமளித்திருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்பினர் சட்டரீதியான விடயங்களை பூரணப்படுத்த மேலதிகமாக ஏதேனும் செய்ய வேண்டியுள்ளதா? என்பது குறித்து ஆராய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களை உருவாக்குவோம்’ முதலாவது வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

போதைப்பொருட்களற்ற நாடு’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘கிராமங்களை உருவாக்குவோம்’ கிராமிய செயற்திட்டத்தின் முதலாவது வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று எம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

சமூக காவற்துறை குழுக்களின் பிரதிநிதிகள், பாதுகாப்பு பிரிவுகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

போதைப்பொருட்களற்ற கிராமம்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த பாடசாலை மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன.

கிராமங்களை உருவாக்குவோம்’ கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் கீழ் இலங்கையின் சகல கிராமங்களிலும் சமூக காவற்துறை குழுக்களை அடிப்படையாகக் கொண்ட போதைப்பொருள் தேடல்கள், புனர்வாழ்வு அளித்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் உற்பத்தியை இல்லாதொழிப்பதற்கான நிலையான முறையொன்றினை தயாரித்தல், கிராமத்தவர்களின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தல், தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வேறு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தலும் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட செயற்பாடுகள் இந்த செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

எச்சரிக்கை!! கண்பார்வை குறைப்பாடு ஏற்படும் அபாயம்

வரட்சி காலநிலை காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார், கண்டி, புத்தளம், குருணாகல், பொலன்னறுவை மற்றும் அநுராதப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் நிலவுகின்றன.

வரட்சியால் புத்தளம் மாவட்டமே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வரட்சி காரணமாக சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பயிர் செய்கை என்பவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வரட்சி காலநிலை காரணமாக சுத்தமான குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கே.ஏ அன்சார் இதனை தெரிவித்துள்ளார்.குடிநீர் விநியோகத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வரட்சி காரணமாக சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு நீர்தாங்கிகள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் கடும் வெப்பத்துடனான காலநிலை காரணமாக கண்பார்வை குறைப்பாடு மற்றும் கண்சார்ந்த நோய்கள் ஏற்படக் கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண் தொடர்பான விஷேட நிபுணர்கள் இது தொடர்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.

சூரியன் உச்சம் பெற்றுள்ளமையே இதற்கான காரணம் என கண் தொடர்பான விஷேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 3 =

*