;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (27.02.2018)

0

ஐ.நா.ஆணைக்குழுவின் 37 ஆவது மாநாடு 14 ஆம் திகதி இலங்கை தொடர்பிலான ஆய்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37 ஆவது மாநாடு ஆரம்பமாகியுள்ளது. இம்மாநாடு எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இலங்கை தொடர்பிலான ஆய்வுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

10 இடங்களில் நாளை நீர் விநியோகம் தடை

அத்தியாவசிய திருத்த வேலைகளை முன்னிட்டு நாளை (28) காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

களனி, வத்தளை, பியகம, மஹர, ஜா-எல, பேலியகொட, கம்பஹா, தொம்பே, கட்டுநாயக்க மற்றும் சீதுவை ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் சரியாக செயற்பட வேண்டும்! சந்திரிக்கா

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவலை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகங்களைச் சார்ந்ததாகும் எனவும், கடந்த காலங்களில் அது உரிய முறையில் நிறைவேற்றப்படாமையே தேர்தல் தோல்விக்குக் காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

சில தரப்பினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி அரசாங்கத்தின் செயற்றிட்டங்களை மூடி மறைத்து பொய் பிரசாரங்களை முன்னெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊழலும், இனப்பிரச்சினையும் இலங்கை தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான இரண்டு நெருக்கடிகளாகும் என்றும் இந்த நெருக்கடியை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்படுவதன் மூலமே தீர்த்து வைக்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , கிழக்கு , ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் போன்று காலி , மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரை கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த சந்தர்ப்பங்களில் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெனிவா செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர், ஜெனீவாவில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது.

நேற்று ஆரம்பமான இந்த மாநாடு எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் இரண்டு தினங்களில் விசேட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் பருவகால ஆய்வு அறிக்கையின் வெளிப்படுத்தல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது.

இந்த விவாதத்தின் அடிப்படையில், மனித உரிமைகள் பாதுகாப்புக்காக இலங்கையில் அமுலாக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் பேரவையினால் முன்வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையின் மறுசீரமைப்பு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான தமது அறிக்கையை, எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் முன்வைக்கவுள்ளார்.

இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்கனவே மறுசீரமைப்பு, பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமை பொறிமுறைகள் தொடர்பில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் காணப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் அமுலாக்கப்பட வேண்டிய விடயங்கள், பரிந்துரைகள் என்பவை குறித்து சுட்டிக்காட்டப்படும்.

குறித்த சந்தர்ப்பங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாத முதல்வாரத்தில் இந்த குழு அங்கு செல்லவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − five =

*